லாபமுண்டோ

*****************
நேரினிலே காணுகின்ற நண்பர்கள் வாழ்வில்
நேருமிட ருக்குக்கை நீட்டிடவும் கூடும்
ஊரினிலே வாழுகின்ற ஒவ்வொருவர்க் குள்ளும்
உதவிமனப் பான்மைகளும் உள்மனத்துள் காணும்
நீரினிலே விழுந்தவனை நீச்சலிட்டுச் சென்று
நேசமுடன் கரையேற்றும் நீசருமே உண்டு
பேரிடரில் கைகொடுக்கப் பின்நின்று கொண்டு
பேச்சளக்கும் பேர்வழியால் பிரயோசன முண்டோ?
*
காடுவரைச் சுமப்பதற்குக் கைகொடுக்க வென்று
கருணைமிகு உள்ளங்கள் காசினியி லுண்டு
பாடுபடும் மக்களுக்குப் பலவகையில் நாளும்
பக்கத்தி லுள்ளோர்கள் பரோபகார முண்டு
நாடுவிட்டு நாடுவந்து நலிவுற்றோர் வாழ
நாலுபேரக் கடவுளென நம்மிடையி லுண்டு
ஆடுண்ணும் ஆசைக்கு ஆண்டவனின் பேரில்
அணுகுகின்றப் பொய்யரினால் ஆவதற்கே துண்டு?
*
வேறுவழி யில்லாமல் வேலையெனத் தானம்
வேண்டிநிற்கும் பேர்களிடம் வெட்கமுமே உண்டு
கூறுகெட்ட சமுதாயம் கூட்டிவைத்தப் பசியால்
குழந்தைகளுக் காய்விலையா கும்தாய்மா ருண்டு
சோறுதண்ணி இல்லாமல் சோர்ந்துழைத்து வீடு
சுகப்படுத்தும் தந்தையர்க்கும் சொப்பனங்க ளுண்டு
ஊறுசெய்து உளமகிழ்ந்து ஊர்சொத்தைத் தின்று
உட்கார்ந்தே கொழுத்தோரால் ஒருலாப முண்டோ?
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Feb-24, 1:27 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 49

மேலே