காந்தனில் லாத கனங்குழலாள் பொற்பு அவமாம் – நீதி வெண்பா 6
நேரிசை வெண்பா
காந்தனில் லாத கனங்குழலாள் பொற்(பு)அவமாம்
சாந்தகுணம் இல்லார் தவமவமாம் – ஏந்திழையே!
அன்னையில்லாப் பிள்ளை இருப்ப(து) அவம்;அவமே
துன்னெயிறில் லார்ஊண் சுவை. 6
- நீதி வெண்பா
பொருளுரை:
ஏந்திய ஆபரணங்களையுடைய பெண்ணே!
கணவனில்லாத சிறப்பு மிக்க கூந்தலையுடைய பெண்ணின் அழகு வீணாம்;
சாந்தமாகிய பொறுமைக் குணமில்லாதவரின் தவம் வீணாம்;
கவனிப்பார் இல்லாத தாயில்லாப் பிள்ளை இருப்பதும் வீணாம்;
நெருங்கிய பற்களில்லாதவர்க்கு உணவின் சுவையும் வீணாம்.
கணவனில்லாத பெண்களுக்கும், பொறுமையில்லாத தவஞ் செய்வோர்க்கும், தாயில்லாத கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கும், நெருக்கமாகப் பற்களில்லாதவர்க்கும் இன்பமில்லை; துன்பமே.