மாயை

எனது மாயை
எனது கண்களை
குருடாக்கி விட்டது.

ஏதோவொரு பெயரில்
மனிதனாக ஒளிந்து
கொண்டிருக்கிறேன் என்னும்
அவலமான நம்பிக்கை
அழிந்த கணத்தில்தான்
நான் யாரோ ஒரு
மனிதனொருவனின்
மனதுக்குள் அவன் நிழலாக
அலைந்து கொண்டிருக்கிறேன்
என்பதை உணர்ந்தேன்.

வறுமை மிகுந்த
அந்நகரில்
அக்டோபர் மாதத்தின்
பிந்தைய நாட்களில்
எல்லா கல்லறைகளையும்
மந்திரிக்கப்பட்ட ஒயினால்
சுத்தம் செய்வது என் பணி.

தளர்ந்து சிலும்பும் நதியை
காற்றால் சலித்து அதில்
உதிரும் பனிப்பூக்களை
கல்லறை வாசலின் இருக்கும்
முகப்பு விளக்கின் திரிக்கு
எண்ணையாக்கும் போதுதான்
மாயை என்னை பற்றியது.

மாயை...
என் கண்களை
குருடாகிவிட்டது என்று
நான் நம்பியபோதும்
பார்வையில் குறைவில்லை.

மாயை என்
கண்களாகவே மாறிவிட்டது
என்பதே உண்மை...

என் இதயத்திலிருக்கும்
அக்கல்லறை தோட்டத்தில்
வாசனையின் நிறங்கள்
சப்தங்களுக்குள் சிறைபட்டு
பசியாற்றி வருகிறது
பறவைகட்கு...

மாயை தன் மூச்சை
என்மீது விடும்போது
எனக்கொரு கவிதை கிடைக்கும்.

பாலைவனத்தில்
துள்ளித்திரியும் பூனையின்
நிழல் ஒன்றை
துரத்தி ஓடுகிறேன்.

மனதுக்குள்
இரக்கத்தின் நரம்புகள் முறுக்கி

வெடித்து சிதறும்
கல்லறைகளின் ஒலியில்
உதிர்ந்தோடும் பிம்பங்களின்
இறுதி முழக்கமாக வரளும்
சொற்களின் அமைதியில்

நானொரு மாயையாக
மாறி வருகிறேன்...

எழுதியவர் : ஸ்பரிசன் (23-Mar-24, 9:06 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : maiai
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே