உங்களுக்காக ஒரு கடிதம் - 42

உங்களுக்காக ஒரு கடிதம் - 42
28 / 04 /2024

அன்பு வாசகர்களே...வணக்கம். மறுபடியும் மறுபடியும் இடைவெளியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்ன செய்வது? காலத்தின் திருவிளையாட்டில் நானும் ஒரு பொம்மைத்தானே. சரி அதை விடுங்கள்.என் மனதை பாதிக்கும் சம்பவங்கள் எது நடந்தாலும் உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன். எதோ ஒரு வகையில் உங்கள் வாழ்விலும் அந்த பாதிப்பு இருக்கும் என்று நம்புகிறேன். தினம் தினம் நாம் சந்திக்கும், சவாலாய் எதிர்கொள்ளும் சம்பவங்களை பற்றித்தான் உங்களோடு பகிர விழைகிறேன்.
இன்றைய தலைமுறை...குறிப்பாக குழந்தைகள் மற்றும் விடலை அல்லது வளரிளம் பருவத்தில் இருக்கும் தலைமுறையினரைப் பற்றித்தான் பகிரப் போகிறேன். ' விளையும் பயிர் முளையிலே',' ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' இது போன்ற பழமொழிகள் பல படித்திருக்கிறோம். அதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சவால்களைப் பற்றியதுதான் இந்த பதிவு. முதலில் காலையில் எழுவதில் இருந்து தொடங்கலாம்.குழந்தையை எழுப்புவதில் இருக்கும் கஷ்டம் எல்லோரும் அனுபவித்துத்தான். ஆறு வயதிற்கு கீழே இருக்கும் குழந்தைகள் பரவாயில்லை. விட்டுவிடலாம். ஆறு வயதிருக்குமேல் பதினெட்டு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள்... ' ஐயோ இந்த வீட்டில் தூங்கறதற்கு கூட சுதந்திரம் இல்லை.ஏன் தான் இந்த வீட்டில் வந்து பொறந்தேனோ தெரியல. தூங்கறேன்னு தெரிவதில்லை. அப்பறம் ஏன் இப்படி கத்துக்கிட்டு இருக்கீங்க? அதான் ஒரு தடவ சொல்லீட்டிங்க இல்ல.வாய பொத்திக்கிட்டு போய் தொலைங்களேன்.' 'ஏண்டி ஸ்கூலுக்கு நேரமாச்சு.எழுந்து பல்ல வெளக்கிட்டு சீக்கிரம் குளியேன்டி...'' தா பார். இப்படியே கத்துக்கிட்டு இருந்தே நான் ஸ்கூலுக்கும் போக மாட்டேன். ஒண்ணுக்கும் போகமாட்டேன்' என்று திருப்பி படுத்துக்கிட்டு போர்வையை முகத்துக்கு மேலே இழுத்து விட்டு கொள்ளும் குழந்தைகளை என்ன செய்வது? தந்தையாக என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒரு குழப்பம். 'அடி உதவுது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்' இதுவும் பழமொழிதான். அன்பாய் சொன்னால் மரியாதை இல்லாமால் பேசி அவமானப்படுத்துகிறார்கள். சத்தம்போட்டு பேசினால்... ஏன் இப்படி காட்டு கத்து கத்துறேன்னு நம்மை அடக்குறாங்க. அடிக்கப்போனால் அடிச்சிருவியா?அடி அடி பார்க்கலாம்.மான மரியாதையெல்லாம் பறக்க விட்ருவேன்..என்று மிரட்டல் விடுகிறார்கள். 'ஆங்... உங்க குடும்பத்துல எல்லாம் ஒழுங்கா நடக்குறாங்க. பெருசா பேச வந்துட்டாங்க. போய் உங் குடும்பத்தை முதல்ல திருத்து. அப்பறம் இங்க வரலாம். நீ மொதல்ல ஒழுங்கா நட.' என்று வரிஞ்சி கட்டிக்கிட்டு பத்ர காளியாய் வந்து நின்று விடுகிறாள் மனைவி.
எனக்கு இங்குதான் ஒன்று புரியவில்லை. சிறுவர்கள் தப்பு செய்யும்போது அவர்களை சொல்லியோ இல்லை திட்டியோ இல்லை அடித்தோ திருத்த வேண்டிய கடமை பெற்றோர் இருவருக்குமே இருக்க வேண்டியது அவசியம்தானே. ஒருவர் திட்டும்போது,ஒன்று சும்மா இருக்க வேண்டும். சாதகமாக இல்லை என்றாலும் பாதகமாக எதுவும் சொல்லக் கூடாது என்பது என் கருத்து. பேசிக் கொண்டு இருக்கும்போதே ' நீ ரொம்ப ஒழுங்கு...உன் வீட்ல எல்லாரும் ஒழுங்காத்தான் நடக்கறாங்க. நீ சின்ன வயசுல செய்யாதைத்தான் பிள்ளை செஞ்சிடிச்சா?' என்று பிள்ளைக்கு பரிந்து கொண்டு வந்தால் நான் பேசுவதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனக்கு ஒன்றுதான் இன்னமும் புரிபடவில்லை. ஏன் என் குடும்பத்தை, பரம்பரையை இழுக்க வேண்டும்? புரியவில்லை.என்னைத் திட்டு.ஒரு விதத்தில் ஒத்து கொள்கிறேன். என் அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினர் என்ன பாவம் செய்தார்கள்? இல்லை நான் உன் குடும்பத்தையோ இல்லை உறவினர்களையோ பிடித்து இழுத்திருந்தால் நீ அப்படி பேசுவது சரி என்று ஒத்துக்கொள்ளலாம். குழந்தை தப்பு செய்தால் திருத்த வேண்டும். இருவரும் ஒன்றிணைந்து செய்தால்தான் அது சாத்தியப்படும். நாமே வெறுப்பட்டிருந்தால் அதுவும் தப்பு செய்த அந்த குழந்தைக்கு முன்பே...நமக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய நம்முடைய முரண்பாடு, வெளிச்சம் போட்டு காட்டி விட்டால், அதை பயன் படுத்தி கொள்ளுமே. அப்புறம் எப்படி திருத்துவது?முளையிலே கிள்ளாவிட்டால், அந்த பிடிவாதம்...அந்த முரட்டு குணம் வேரூன்றி மரமாய் வளர்ந்து அவர்கள் வாழ்வைத்தானே நாசமாக்கிவிடும். நாசமானப்பின் யோசித்து என்ன பயன்?
தொடரும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Apr-24, 11:17 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 59

மேலே