வேலை வாய்ப்பு

வெங்கட், தனது இரு சக்கர வாகனத்தை அவனது வீட்டின் முன் நிறுத்தினான். அந்த கட்டடத்திலிருந்த மூன்று வாடகை வீடுகளில் ஒன்றில், அவன் மனைவி மாலதியுடன் வசித்து வந்தான். வீட்டின் வெளியே ஒரு புதிய பிஎம்டபிள்யூ கார் நிறுத்தப்பட்டதைக் கண்டு கொஞ்சம் ஆச்சரியம் அடைந்தான். மற்ற இரண்டு குடித்தனக்காரர்களில், ஒரு வீட்டிற்கு யாராவது பெரிய புள்ளி வந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.
வெங்கட் எல்.டி.சியாக (லோயர் டிவிஷனல் கிளார்க்) ஒரு அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிந்துவந்தான். வருவாய்த் துறையில் பணிபுரிந்தாலும், சுத்தமான கைகள் என்ற காரணத்திற்காக அவன் அந்த அலுவலகத்தில் ஒரு விதிவிலக்கான நபராகவே இருந்தான்; அவன் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவதால் அல்ல, அவனது அப்பழுக்கில்லாத பாராட்டத்தக்க நாணயம் மற்றும் நேர்மையின் காரணமாக.
மாலதி திறந்த மனதுடன், முன்னோக்கிச் சிந்திக்கும் ஒரு அழகான இளம் பெண். இருவருக்கும் காதல் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது; வெங்கட் மாலதியின் அழகை விரும்பினான். மாலதி வெங்கட்டின் எளிமையையும், நகைச்சுவை உணர்வையும் விரும்பினாள். பல்வேறு காரணங்களுக்காக பரஸ்பர சம்மதத்துடன், இருவரும் பெற்றோர் ஆகும் நிலையை தவிர்த்துவந்தனர்.
மாலதி கல்யாணம் ஆவதற்கு முன்பு வேலைக்கு செல்லவில்லை. வெங்கட் அவளை காதலித்து கல்யாணம் செய்ய அதுவும் ஒரு காரணம். ஆனாலும், திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆனதும், மாலதிக்கு சிறிது காலமாகவே தானும் வேலைக்கு சென்று சம்பாதிக்கவேண்டும் என்ற யோசனை அதிகமாகவே இருந்தது. அவள், திருமணத்திற்குப் பிறகு தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் மனித உறவுகளில் முதுகலை டிப்ளமோ பெற்றாள்.
வெங்கட்டின் சம்பளம் அவர்களின் அன்றாட வாழ்க்கையை நிர்வகிக்க போதுமானதாக இருந்தது. அவர்களிடம் பெரிய வங்கி இருப்பு அல்லது சொத்து இல்லை. மாலதிக்கு இரண்டு கல்யாணமாகாத தங்கைகள் இருந்ததால், மாலதிக்கு கல்யாணத்தின்போது பெரிய பணமோ நகைகளோ கிடைக்கவில்லை.
ஏனோ தெரியவில்லை, திருமணத்திற்குப்பின் மாலதி, பலவிதமான ஆடைகளை அணிந்து, தனது அழகுக்கு அழகு சேர்க்கும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினாள். ஆனால், வெங்கட்டின் ஒற்றை சம்பளத்தில் அந்த கனவை அவளால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஒரு நாள் இரவு படுக்கையறையில் அவள் வெங்கட்டிடம் "நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் மாதாந்திர செலவுகளை சமாளிப்பதே பெரும் பாடகி வருகிறது. தவிர, நம் வசதியையும் ஆடம்பரத்தையும் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பே இல்லாமல் உள்ளது. நீங்கள் வருவாய் துறையில் இருப்பதால், கொஞ்சம் மனம் வைத்தால் கொஞ்சம் கூடுதல் பணம் பண்ண முடியும் "என்று சூசகமாக எடுத்து கூறினாள்.
வெங்கட் அவளது இந்த பேச்சை கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் ரொம்பவே திகைத்து போனான். அவன் சொன்னான் "மாலா, நம் திருமணத்திற்கு முன்பே என்னைப்பற்றி முழுதுமாக உனக்கு சொல்லிவிட்டேன். நான் எளிமையில் புரண்டு வறுமையில் உழன்று வாழ்ந்தாலும் பரவாயில்லை. நேர்மைக்கும் நாணயத்திற்கும் புறம்பான காரியங்களை செய்யமாட்டேன் என்று உன்னிடம் தெளிவாக எடுத்துரைத்தபோது நீயும் அதை ஏற்றுக்கொண்டாய். இப்போது, உன்னுடைய ஆடம்பர செலவிற்காக அதிகமான பணம் தேவைப்படுவதால், நீ என்னை மாற்ற முயல்கிறாய். அப்படித்தானே?
மாலா பதில் கூறினாள் "அப்படியே வைத்துக்கொள்ளுங்களேன். ஓரளவுக்கு நல்ல உடைகள் உடுத்திக்கொண்டு, குறைந்தது மாதத்தில் இரண்டு முறையாவது ஒரு பார்ட்டி அல்லது நிகழ்ச்சிக்கு நாம் சென்று வரவேண்டும் என்கிற என் ஆசை, பேராசையா?
"எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள். ஆனால், நேர்மையின்றி பெரும் பணத்தைக்கொண்டு என்னால் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியாது. பார்ட் டைம் வேலைக்குப்போய் இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் நான் தயார்." என்று வெங்கட் கருத்து தெரிவித்தான்.
மாலதி "எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். நீங்களும் கொஞ்சம் பொறுமையாக யோசியுங்கள். நாளை மாலை நாம் இதைப்பற்றி பேசி ஒரு முடிவுக்கு வருவோம்."
மறுநாள் மாலை வந்தது. வெங்கட் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தான். அவன் வீட்டில் நுழைந்த உடனேயே சூடான இனிப்புகள் காரங்களுடன் சூடான காபியும் மேஜையில் அவனை வரவேற்றன.
வெங்கட் அதற்கான காரணத்தை உடனேயே கண்டுபிடித்து விட்டான். தம்பதிகள் தின்பண்டங்களை உண்டும் காபியை குடித்தும் மகிழ்ந்தனர். இந்த நேரத்தில், மாலதி ஆவலுடன் எதிர்பார்த்தாள், வெங்கட் "கூடுதல் பணம்" உத்தி பற்றி தனக்கு சாதகமான முடிவைக் கொடுப்பான் என்று. தன்னை எந்த அளவுக்கு வெங்கட் விரும்புகிறான் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்.
காபி குடித்தபின்னும் வெங்கட் ஒன்றும் சொல்லாமல் இருந்ததால் மாலதி பொறுமை இழந்தாள். “என்ன முடிவு வெங்கட்?" என்று ஆர்வமான குரலில் கேட்டாள்.
வெங்கட் தன் வழக்கமான நிதானத்துடன் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு, “மாலா, எனக்கு ஆகும் செலவில் சிலவற்றை நான் குறைக்க விரும்பினால், நான் அதை மகிழ்ச்சியுடன் செய்கிறேன். இரண்டு சக்கர வாகனத்தை விற்றுவிட்டு பேருந்தில் அலுவலகம் செல்கிறேன்; மாதாமாதம், நான் அநாதை இல்லத்திற்கு கொடுக்கும் பணத்தை பாதியாக குறைத்து விடுகிறேன். என்னுடைய துணிகளை நானே இஸ்திரி செய்து கொள்கின்றேன். ஆனால், நான் நாணயம் தவறமாட்டேன், லஞ்சம் வாங்கும் எந்த செயலிலும் ஈடுபடமாட்டேன். நமக்கு அதிக பணம் தேவை என்னும் உன் ஆதங்கத்தை, நான் மதிக்கிறேன். ஆனால், அந்த பணம் நேர்வழியில் சம்பாதிக்கும் பணமாக இருக்கவேண்டும் “என்று முடித்தபோது மாலதி சோர்ந்து துவண்டு போனாள்.
இது நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
பி.எம்.டபிள்யூ காரை ஆர்வத்துடன் பார்த்த வெங்கட், வீட்டிற்குள் நுழைந்து காலிங் பெல்லை அழுத்தினான். மாலதி கதவைத் திறந்தபோது, உள்ளே ஒரு இளம் ஜோடி தன் மனைவியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். மாலதி அவர்களை வெங்கட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தாள், “இவள் மீனா, என் கல்லூரி தோழி. இவள் நம் திருமணத்திற்கு கூட வந்திருந்தாள். ஆனால் இவள் திருமணம் வெளிநாட்டில் நடந்ததால், நான் செல்லமுடியவில்லை. இது இவளது கணவர் திரு.மகேந்திரா, ஒரு தொழிலதிபர். பல வருடங்கள் அமெரிக்காவில் தொழில் செய்துவிட்டு, தற்போது இந்தியாவில் மீண்டும் குடியேறிவிட்டார்."
விலைஉயர்வான உடைகளை அணிந்திருந்த அந்த தம்பதிகளைப் பார்த்ததும், BMW கார் அவர்களுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று வெங்கட் யூகித்தான். அங்குள்ள காலியான தட்டுகளையும் கிளாஸ்களையும் பார்த்து, மாலதி அவர்களை நன்கு உபசரித்ததை அறிந்துகொண்டான். வெங்கட் அதிகம் பேசவில்லை. அடுத்த ஐந்து நிமிடங்களில் விருந்தினர்கள் புறப்பட்டு வெளியே வந்து BMW இல் ஏறி புறப்பட்டனர். காரில் ஏறி அமரும் முன்பு மகேந்திரா வெங்கட்டிற்கு கைகொடுத்தார். பின்னர் மாலதியின் கையை பிடித்துக்கொண்டு ரொம்பநேரம் விடவில்லை. பிறகு மாலதிதான் ஒரு வழியாக கையை அவரிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டாள். யார் அங்கு இருந்தாலும் இந்த செய்கையை கவனித்திருப்பார்கள். வெங்கட்தான் அங்கு இருந்தானே.
மாலதி, பிறகு காபியுடன் ஸ்நாக்ஸ் கொண்டு வந்து வெங்கட்டிடம் கொடுத்தாள். பிறகு, உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும், “வெங்கட், மகேந்திரா ஆண்டுக்கு ரூ.150 கோடி வியாபாரம் செய்கிறார். சாதாரண பேச்சு வார்த்தையின் போது, நான் வேலைக்கு செல்லவேண்டும் எனும் என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். என்னுடைய படிப்பை சொன்னவுடன் அவர் உடனடியாக "நான் உன்னை என் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கிறேன் என்று கூறினார்”.
வெங்கட் ஆச்சரியத்துடன் "அப்படியா, கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அலுவலகம் எங்கே இருக்கிறது? எத்தனை தூரம்?"
மாலதி சொன்னாள் "அடையாறில் இருக்கிறது. வீட்டிலிருந்து அலுவலகம் 10 கி.மீ. அலுவலகக் கார் என்னை பிக் அப் செய்து கொண்டு மீண்டும் மாலை வீட்டில் ட்ராப் செய்துவிடும். திங்கள்-வெள்ளி கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. சனிக்கிழமைகளில் மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. ஞாயிறு முழுவிடுமுறை. நீங்கள் சம்மதித்தால், இந்த வேலையை நான் ஏற்க விரும்புகிறேன்”
வெங்கட்“மாலா, உனக்கு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வணிகத்தின் தன்மை, நிறுவனத்தின் நற்பெயர் போன்ற விவரங்களை தெரிந்துகொண்டு கவனமாகப் சிந்தித்து முடிவு எடு. அவசரத்திலும் பதட்டத்திலும் எந்த ஒரு முடிவையும் எடுக்காதே "என்றான்.
அன்று இரவு முழுவதும் மாலதி வேலைக்கு போவதை பற்றியே நினைத்துகொண்டிருந்தாள். திரு.மகேந்திரா கூறிய கருத்தை மாலதி நினைவு கூர்ந்தாள். “உங்கள் தகுதிகள் மற்றும் உங்கள் வசீகரமான தோற்றம் எனது வணிகத்தில் எனக்கு மிகவும் உதவும். அலுவலகத்தில் உங்களை எனது தனிப்பட்ட செயலாளராக நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். தகுந்த சம்பளம் தருகிறேன். உங்கள் போக்குவரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்”. அப்போது பணம் மட்டுமே அவளது குறிக்கோளாக இருந்ததால், வேறு எந்த கோணத்திலும் அவள் சிந்திக்கவில்லை. “
அடுத்த நாள் காலை அவள் தனது முடிவை வெங்கட்டிடம் தெரிவித்தாள் “நான் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நன்கு யோசித்தேன். இந்த வேலைக்கு போவதுதான் சரி என்று முடிவு எடுத்துவிட்டேன்"

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (5-Jun-24, 11:02 am)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : velai vaayppu
பார்வை : 59

மேலே