இரத்தம்

”என்னுடைய 20 வருட வழக்கறிஞர் பணியில் பெருமளவு நேரத்தை நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட சமரசம் செய்து வைப்பதில்தான் கழித்தேன்! இதனால் நான் எதையும் இழக்கவில்லை; பணத்தைக் கூட இழக்கவில்லை; நிச்சயமாக ஆன்மாவை இழந்து விடவில்லை”
மகாத்மா காந்தியின் படம் போட்டு மேற்கண்டவாறுஅவரே சொல்வதாக எழுதி இருந்த ’சமரச மையம்’ என்ற பலகையினை அதன் கீழ் நின்றிருந்த அவன் படித்துப் பார்த்தான்.
கோவையில், கோபாலபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதி மன்றங்களின் வளாகத்தில் அவன் நின்றிருந்தான். அவனுக்கு, அங்கு அதில் எழுதி வைக்கப்பட்டு இருந்த ‘’ இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை உருவாகும்’’ என்பது மிகவும் பிடித்துப் போயிருந்தது. ’வெற்றிதானே வேண்டும் எனக்கு’ என்று தனக்குள்சொல்லிக் கொண்டான். மெல்ல நகர்ந்து, ’நீதியரசர்கள் செல்லும் வழி’ என்ற பலகையைக் கண்டு தயங்கி நின்று அந்த வழியில் நின்று கொண்டான்.
”உஸ்”, ”உஸ்” என ஒவ்வொரு நீதியரசரும் காரில் இருந்து இறங்கும்போதும் ஒலி கொடுத்து வழியை ஏற்படுத்தும் ’டவாலிகள்’ முன் செல்ல உலகத்திற்கே தாங்கள்தான் அதிபதி என்ற தோரணையில் நடந்து செல்லும் அந்த நீதி அரசர்களை பார்த்து ஒரு கெட்ட வார்த்தையை மனதுக்குள் சொல்லி திட்டினான்.
”இருங்க, இருங்க, ஒரு நாயை அடிச்சா எல்லா நாய்க்கும் வலிக்கிறா மாதிரி செய்றேன்” என சொல்லிக் கொண்டவன் அவன் அடிக்க இருந்த நாய் வருகிறதா என யாரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
சரியாக 9.55 மணிக்கு அந்த வெள்ளை நிற’ சியாஸ் ஸீட்டா மாருதி’ வண்டி வந்து நின்றது. அதன் பதிவு எண்ணைப் பார்த்து நிமிர்ந்தான். அதில் இருந்து நீதி அரசர் ஆனந்த் கம்பீரமாக இறங்கி நடப்பதைக் கண்டான். வெகு விரைவில் ஓய்வு பெற இருக்கும் அவர், அந்த வயதிலும் உயரமாக, அதற்கேற்ற உடல் பருமனுடன் தொய்வு இன்றி ’கொளரவம்’ பட சிவாஜியைப் போல மிடுக்காக நடந்து சென்றதைக் கண்டான். ஒரு நிமிடம் நெஞ்சை நிமிர்த்தி, இழுத்து, நீண்ட மூச்சு வாங்கிக் கொண்டான். ’நீதிபதிகள் செல்லும் வழி’ என்ற பெயர் பலகை தாங்கிய வாயிலில், அவர் ஒரு படியில்தான் காலை வைத்திருப்பார். அவரது கழுத்தில் சுரீரென என ஏதொ கடித்தது போல் இருக்க அவர் மெல்ல சுவற்றைப் பிடித்துச் சரிய ஆரம்பித்தார். ’பார்த்து”’ எனக் குரல் கொடுத்தவன் அவரைக் கைத்தாங்கலாகத் தாங்கி, அப்படியே
அவரை அங்கு நின்று இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி காரில் ஏற்றி விட்டான். உடன் காரினுள் ஏற வந்த டவாலியை நோக்கி,
“ஆஸ்பத்திரி கூட்டிப்போகிறேன், நீ ஆபீசில் சொல்லி விடு” எனக் காரில் ஏற இருந்த டவாலியை தடுத்து விட்டு, ஆர்ட்ஸ் காலேஜ் ரோடிலிருந்து ஹுசூர் சாலைக்குத் திரும்பி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்து, மேம்பாலத்திற்கு அடியில் சென்று பழைய ஜெயில் ரோடு வழியாக காந்திபுரம் நோக்கி வண்டியை விரட்டினான். ஆஸ்பத்திரிக்கு அவன் செல்லவில்லை.
“பட்டப்பகலில் நீதி அரசர் கடத்தப்பட்டார்” என்பதே அன்றைய தலைப்புச் செய்தியாக இருந்தது.
’கிரைம்’ செய்திகளுக்கு முன்னுரிமை அளித்து வெளியிடும் ’ஜன் கல்யான்’ தொலைக் காட்சியில் பின் வரும் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.
“அண்மையில் இதே நீதி மன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி இரு கொலைகாரர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அத்துடன் இங்கு ஒருவர் டீ சாப்பிட்டு வெளியே வரும்போது நால்வர் அடங்கிய கும்பல் அவரைக் கொலை செய்தனர். இப்படி அண்மையில் இந்த கோவை கோர்ட் வளாகம் பரபரப்பான செய்திகளின் மையம் ஆகி விட்டது. இதே கோர்ட் வளாகத்தில்தான், இன்று நீதி அரசர் ஆனந்த் காலையில் அலுவலகம் வந்த போது காரில் கடத்தப்பட்டார். மயங்கி சரிந்தவரை தாங்கி காரில் ஏற்றிச் சென்றவர் அடையாளம் தெரியாத ஒரு வழக்கறிஞர் எனத் தெரிய வருகிறது.
நீதி தவறாத அவருக்கு ஏன் இப்படி ஆயிற்று என வழக்கறிஞர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருக்கின்றனர். அவர் கடத்தப்பட்ட காரின் பதிவு எண் குறித்தும், யாராவது குற்றவாளியைக் கண்டார்களா என அவரைக் கடைசியில் பார்த்த கோர்ட் டவாலி, மற்றும் அன்று அங்கு பணி செய்த காவல்துறையினர் ஆகிய அனைவரையும் பந்தய சாலை காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரித்து வருகின்றனர்”.
’கடத்தியவரை விரைவில் அடையாளம் காண்போம்’ என்று மிகவும் தன் நம்பிக்கை யுடன் அந்த ஆய்வாளர் தொலைக் காட்சி நிறுவனங்களுக்கு பேட்டி அளிப்பதை இதர தொலைக் காட்சி நிறுவனங்களும் நாளெல்லாம் காட்டி, பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருந்தனர்.
’ஆறிய கஞ்சி பழங்கஞ்சி’ என்பது போல், அன்றோடு ஆறு நாட்கள் முடிந்து விட்டு இருந்தது. அந்த பாதி இருட்டு அறையில் கைவிலங்கு போட்டு நீதி அரசர் ஆனந்த், ஐந்து நாள் தாடியுடன் அமர்ந்து இருந்தார். அவருக்கு எதிரில், அவரைக் கடத்தியவன் நீதி தேவதையின் படம் போட்ட டி சர்ட் அணிந்து நின்று கொண்டு இருந்தான். அவனை ஏளனமாகப் பார்த்த நீதி அரசரிடம்
“இந்த நீதி தேவதைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என நக்கலாக நீர் என்னைப் பார்க்கிறீர். உண்மையில் குருடாகவும், எந்த பக்கமும் சாயாத நீதியின் தராசும் முக்கியமாக, கத்தியும் வைத்து இருக்கிறதே இந்த தேவதை. இன்று, நான் தான் அந்த நீதி தேவதை. நியாயம் எந்த காரணத்துக்காகவும் மழுங்கி விடக் கூடாது என்பதை நிலை நிறுத்தும் அதிகாரம் கொண்ட அந்தக் கத்தி இப்போது என் கையில்.” என்றான்.
அது சரி, நான் எந்த வழக்கில் கண்மூடித்தனமான தீர்ப்பு வழங்கினேன்.
”அப்படி ஒரு நெனைப்போ உமக்கு. இவரைத் தெரியுமா” என தன் மடிக் கணினியில் இருந்த ஒரு போட்டோவைக் காட்டிக் கேட்டான்.
”ஏன் தெரியாது. இவன் பெயர் சங்கர், பயங்கரமான பாலியல் குற்றமும் கொலைக் குற்றமும் நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. இவனுக்கு நான்தான் மரண தண்டனை வழங்கினேன்”.
”தூக்கு தண்டனை. இப்ப நான் உன்னைத் தூக்கிட்டேனே. அந்த வழக்கைத்தான் நான் இப்போது விசாரிக்கிறேன்”.
”நீதி அரசராகிய என்னை விசாரிக்கும் அதிகாரம் உனக்கு யார் கொடுத்தார்கள்? ’ரெஸ் ஜூடிக்காட்டா’ என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா?”
”நீதி மன்றத்தால் ஏற்கெனவே தீர்க்கப்பட்ட விஷயம். அதுதானே?”
”பரவாயில்லை நீயும் சட்டம் படித்தவன் போல் இருக்கிறது; அந்த சட்டம் சொல்லும் தர்மம், நியாயம், மரியாதை அதைப் பற்றி எல்லாம் தெரிந்து இருந்தால் என்னை நீ இப்படி நடத்த மாட்டாய்.
”நீ இங்கு ஒரு விசாரணைக் கைதி, நீதி அரசர் என்பதை எல்லாம் மறந்து விடு”. நீ ஒரு நரி, பழம் தின்று கொட்டை போட்ட நரி. ”எஸ்டோப்பல் பை சைலன்ஸ்”
என்பதே நான் எதிர்பார்ப்பது. இதனைப் பார்க்கும் தமிழ் மக்களுக்குப் புரியும்படி சொல்கிறேன், ”மறுக்கவியலா முகவாண்மை”. நீ மறுத்து எதுவும் பேசக் கூடாது. மரண தண்டனை விதித்தாயே, அந்த அப்பாவி வாத்தியார் உண்மைக் குற்றாவாளியா? சொல்லுங்கள் யுவர் ஆனரில்லாத ஆனர்.

இதனை ’தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்களா’ என அவர் யோசித்துக்கொண்டு இருந்ததால் அவர் பதில் ஏதும்கொடுக்காமல் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு,

”உனது மொளனத்தால் நீ ஆம் எனக் கூறுகிறாயா. சொல். எதைக் கொண்டு அவரைக் குற்றவாளி என முடிவு செய்தாய்.” என அவரது மீசையைத் திருகி

துன்புறுத்தினான். அவர் மெல்ல மீசைப்பக்கம் இரு கைகளையும் தூக்க முடியாமல் தூக்கி தடவி விட்டுக் கொண்டார்.

”இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கை, காவல்துறை தயாரித்து அளித்த 300 பக்கக் குற்றப் பத்திரிகை, அதன் பேரில் மிகச் சரியாக எடுத்து உரைக்கப்பட்ட பிராசிக்யூஷனின் வாதம். இவற்றின் அடிப்படையில்தான் நான் முடிவு செய்தேன்.”
சற்று நிறுத்தி எச்சில் விழுங்கி விட்டு,
“எந்த ஒரு நீதிபதியும் தானே ஒரு வழக்கில் நீதி வழங்க முடிவு எடுக்க முடியாது. அந்த நீதியும் ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவும் அல்ல. நீதிபதிகளாகிய எங்களுக்கும் மனசாட்சிஇருக்கிறது. சிலப்பதிகாரத்தில் நீதி தவறிய பாண்டிய மன்னன் விழுந்து இறந்தது போல் நான் தவறு செய்தேன் என எனக்குத் தெரிய வந்தால் உடனே நானும் என்னை மாய்த்துக் கொள்வேன்.”

”யோவ்,உம்மை நல்லவனாகக் காட்டி என்னிடம் அனுதாபம் பெற நினைக்கிறாய். அது நடக்காது. நீ பழுது பார்க்க இயலாத தீமையை செய்துள்ளாய். ”இர்ரிபேரபள் ஹார்ம்.” அதனால் அரசியல் சட்டம் வழங்கும் பேச்சுரிமையைக் கூட நான் உனக்கு வழங்க இயலாது. உன்னை நீ தற்காத்துக் கொள்வதற்காக சாதாரண வக்கீல் போல் என்னிடம் வாதம் செய்யாதே.

”இதில் எனது பிழை என்ன என்பதையாவது எனக்குச் சொல்.”

”பிழை அல்ல, தவறு. குற்றம். உனக்கு 24 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கிறேன். நீயே யோசி. யோசித்து என்ன குற்றம் செய்தாய் என்பதை உணர்ந்தால் நீ சொன்ன சிலப்பதிகார கதையின் தீர்ப்புப்படி உன்னை நீயே மாய்த்துக் கொள். உன் கைக்கு எட்டிய தூரத்தில்தான் இந்த துப்பாக்கி இருக்கிறது”.

கைக்கு அடக்காமான துப்பாகியை அருகில் இருந்த ஸ்டூல் மீது வைத்தான்.

”வால்தர் பிபிகே” ரக துப்பாக்கி. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பார்த்து இருக்கிறேன். இது நம் நாட்டில் கிடைக்காதே. ஆள் கடத்தல் செய்த குற்றம் போதாதென்று உயிர் கொல்லி ஆயுதத்தைக் கள்ளக் கடத்தல் செய்தது ஆகிய குற்றங்களும் புரிந்த நீ என்னை விசாரிக்கிறாய், தண்டனை அளிக்கிறாய். எனக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.”

”குற்றச் செயல்பாடு மற்றும் குற்றமுள்ள மனது, உங்கள் சட்ட அகராதிப்படி ஆக்டுஸ் ரேயுஸ் மற்றும் மென்ஸ் ரியா என்பதை நீ உணராமலே பேசிக் கொண்டு இருக்கிறாய் உன்னைப் பார்த்தால் எனக்கு எரிச்சல்தான் வருகிறது.”


”இப்போது எனக்கு ஞாபகம் வந்து விட்டது. நீ அந்த சங்கர் வழக்கில் அவனுக்கு வாதியாக வந்த கிருஷ்ணமாச்சாரியின் ஜூனியர்தானே. ஒரு நாள் கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்து கொண்டு இருக்கும்போதே, நடைமுறை தெரியாமல் திடீரென வாய்தா கேட்டு வந்தாயே. உன் செயலைக் கண்டு கோர்டு முழுவதும் சிரித்ததே. அந்த ஜோக்கர்தானே நீ. நீ இப்போது எனக்கு சட்டத்தில் பாடம் எடுக்கிறாயா?

”இந்த நேரத்திலும் உன் திமிர் அடங்கவில்லை பார். உன்னை நான் அப்புறம் சந்திக்கிறேன். அதுவரை உன்னைப் பற்றிய செய்திகளை நீ ஜாலியாக இந்த தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டு இரு”.

அவன் ’ஜன் கல்யான்’ என்ற தொலைக் காட்சி செய்தி சானலை அவர் பக்கம் திருப்பி வைத்து விட்டுச் சென்றான்.

’கொங்கு தங்கம்’ என பெயர் வாங்கியிருந்த அந்த முன்னாள் காவல்துறை ஆய்வாளரும் இன்றைய பரபரப்பு செய்திகளை ’யூ ட்யூப்’ வாயிலாக பரப்பி வருபவரும் ஆகிய அந்த கொடுவா மீசைக்காரர் காவல் துறையைக் குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தார்.

’இந்த கோவை மாநகரம் ஆளும் கட்சிக்கு இல்லாமல் போனதில் இருந்து இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. காவல் துறை முதல்வர் வசம் இருந்தும் அவர் ஒன்றுமே கண்டு கொள்வதில்லை. அதனால், போலீஸ்காரர்களுக்கு கொண்டாட்டமாகப் போய் விட்டது. ஒரு பிரபல நீதிபதி கடத்தப்பட்டு இருக்கிறார். அவர் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட ரேப் மற்றும் கொலை வழக்கில் சங்கர் என்ற குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியவர். அந்த கோணத்தில் சங்கருக்கு வேண்டியவர்கள் எவரேனும் அவரை கடத்தினரா என்றெல்லாம் பார்க்காமல், மீண்டும் மீண்டும் பாவம் அந்த டவாலியை விசாரித்து அவன் மேல் குற்றம் சுமத்திக் கொண்டு இருக்கிறது காவல் துறை. உண்மைக் குற்றவாளியை விட்டு விட்டு கிடைத்தவன் மேல் குற்றம் சுமத்துவதே இவர்கள் வேலை என்றாகி விட்டது.

அவரைத் தொடர்ந்து வந்த செய்தி வாசிப்பாளர் அவருக்கு பதில் அளிப்பது போல்,

“கொங்கு தங்கம் அவர்களது பேட்டியில் குறிப்பிட்ட அந்த கோணம் என்னவென்று நமது தொலைக் காட்சியின் கிரைம் பிரிவு, அந்த சங்கர் வழக்கினை எடுத்து ஆய்வு செய்து இன்று காலை 11.00 மணிக்கு சிறப்பு செய்தி வெளியிடுகிறது. அத்துடன் சங்கருக்கு தண்டனை வழங்கியது சரியா தவறா என மக்களின் கருத்தும் கேட்கப்பட உள்ளது” என ஒரு அறிவிப்பும் செய்தனர்.

சிறிது நேரத்தில், வெற்றி ஆர்ப்பரிப்பு முழங்கும் இசைப்பின்னணியுடன் ஒரு செய்தி வாசிப்பாளர் தோன்றினார். அவர் புன் சிரிப்புடன் படிக்க ஆரம்பித்தார். இதோ உங்களுக்கான மாளவிகா கொலை வழக்கின் தொகுப்பு.
“36 வயது மதிக்கத்த சங்கர் கேந்திரிய வித்யாலயாவில் பணி புரியும் ஆசிரியர். அவரது வீட்டின் கார் கெராஜில் அவரிடம் ட்யூஷன் பயின்று வந்த மாளவிகா எனும் 16 வயதுடைய பெண்பிணமாக இருப்பதைக் கண்டனர். அவள் கொலையுண்டு இறந்து கிடந்ததைக் கண்ட போலீசார் சங்கரை விசாரணைக்கு கைது செய்தனர்”. மாளவிக்கா இறந்து கிடந்த இடம் இதுதான் என ஒரு பழைய கெராஜில் சாக் கட்டியால் பெண்ணில் உருவம் வரையப்பட்டு இருப்பதைக் காட்டினர்.

அடுத்து சங்கர் எனும் குற்றம் சாட்டப்பட்ட நபர் அழுது கொண்டே காவல் துறை காவலர்கள் இருவர் நடுவில் தன் முகத்தை மறைத்துச் செல்வதைக் காட்டினர்.

அதை அடுத்து, பலப்பல செய்தித்தாள்களை வெட்டி, ஒட்டிய காகிதத்தில், உடற்கூறு ஆய்வில் கற்பழிக்கப்பட்டது உறுதி, சங்கர்தான் கொலையாளி என்பது உறுதி செய்தனர் போன்ற செய்தித் தலைப்புகளைக் காட்டினர்.

அடுத்து, நீதி அரசர் ஆனந்த் இந்த வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்குவார். திடீரென அவருக்கு வந்த மொட்டைக் கடிதத்தால் தீர்ப்பு மேலும் ஒரு வாரம் ஒத்தி வைப்பு போன்ற விவரங்கள் காட்டப்பட்டன.

நீதி அரசர் தனக்கு வந்த மொட்டைக் கடிதத்தை காவல் துறையிடம் கொடுத்து சங்கர் குற்றவாளி அல்ல தானே குற்றவாளி எனும் அந்த கடிதத்தை எழுதியவரை பிடிக்குமாறும் மீளவும் தீர விசாரிக்குமாறும் காவல் துறைக்கு ஒரு மாத காலம் அவகாசம் அளித்தது போன்ற விவரங்கள் செய்தியாகக் கூறப்பட்டன.

தொடர்ந்து விளம்பரங்கள் ஓடின.

நான் என் கடமையினை சரியாகத்தானே செய்து இருக்கிறேன். இதில் சரி- தவறு என மக்கள் கருத்துக்கு என்ன வேலை. இது யாருடைய வேலை. இந்த தொலைக்காட்சி நிறுவனம் யாருக்கு சொந்தமானது என அவர் சிந்தித்துக் கொண்டு இருக்கும்போதே,” பிரேக்கிங் நியூஸ்” என திரும்பத் திரும்ப காட்டினர். கூடவே பல விளம்பரங்களை ஓட்டினர். மீண்டும் அது தொடர்ந்தது.

”நீதி அரசர் ஆனந்தைக் கடத்திய குற்றவாளியை காவல் துறையினர் அடையாளம் கண்டனர். வெகு விரைவில் அவனைப் பிடித்து விடுவோம்” என காவல் ஆணையர் பேட்டி கொடுப்பதைக் காட்டினர்.

”கிழிச்சானுங்க. அப்படித்தான், நீங்க கொடுத்த ஒரு மாத அவகாசத்துல குற்றவாளி இருந்த வீட்டிற்கு வந்தவர்கள் அவனைப் பிடிக்காமல், அவன் வீட்டு வேலைக்காரியிடம் விசாரித்து விட்டுச் சென்றனர்.”




“குற்றவாளி என யாரோ போல் பேசுகிறாயே. நீதானே அந்தக் குற்றவாளி”

”பரவாயில்லையே. உனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கிறது. ஆனால் என்ன பிரயோசனம். நீ அந்த அறிவை சரியாக பயன்படுத்தவில்லையே”

”நீதான் குற்றவாளி என்பதை நீ இப்போது ஒத்துக் கொள்கிறாயா?”.

”ஆமாம், நாம் பேசுவதை அந்த தொலைக் காட்சி நிறுவனம் ரிக்கார்ட் செய்து கொண்டே இருக்கிறது. ஆயினும் நாம் இருக்கும் இடம் அதற்கும் தெரியாது. எந்த போலீஸ் நாயும் வராது.”

”அந்த தொலைக் காட்சி நிறுவனத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”

”இங்கு நீதான் விசாரணைக் கைதி நான் அல்ல. சரி உனக்கு நான் நடந்த உண்மையைக் கூறுகிறேன். அந்த மாளவிக்கா ட்யூஷன் வந்த போதெல்லாம் நான் அவளைப் பார்ப்பேன். அவளது அதீத திரட்சியும், மின்னிடும் தோலும் என்னை தினந்தோறும் சித்திரவதை செய்தது. ஒரு நாள்,அவள் வெளியே வருவதற்குக் காத்திருந்த நான் அவளை அந்த கெராஜுக்குள் இழுத்துப் போட்டு மயக்க மருந்து கலந்த கொக்கோ கோலாவை ஊற்றி மயங்க வைத்தேன். பின் அவளை கற்பழித்தேன். மாலையில் திரும்பி வந்து அவள் மயக்கம் கலையவில்லை என நினைந்து மீளவும் கற்பழித்தேன். அவள் என்னை அடையாளம் கண்டு விடக் கூடாது என என் முகத்தை மறைத்து இருந்த துணியை திடீரென அவள் விலக்கி என்னைப் பார்த்து விட்டாள்.
வேறு வழி இல்லாமல் அதே மயக்க மருந்தினை அதிக அளவில் அவள் வாயில் நேரிடையாக ஊற்றி விட்டேன். அவள் இறந்து விட்டாள்.”

சிறிது நேர மவுனம்

”அந்த சங்கர் எனது பக்கத்து வீட்டுக்காரர் மட்டுமல்ல. எனது சொந்த அண்ணன்.அவர் அழுததைப் பார்த்து எனக்கு பாவம் செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு அரிக்க ஆரம்பித்து விட்டது. அவரைப் பார்த்தால் மிகவும் கஷ்டமாக இருந்ததால் சென்னைக்கு சென்று சட்டத்தில் முடிக்காமல் இருந்த முதுகலை பட்டம் பயின்றேன். இந்த வழக்கின் போக்கினை கவனிப்பதற்காகவே நான் சங்கரின் வாதியாகிய கிருஷ்ணமாச்சாரியிடம் ஜூனியராக சேர்ந்தேன். அவரிடம் ஜூனியராக சேருவதே பெருமைக்குரிய விஷயம். சங்கரின் தம்பி என்பதாலேயே என்னைச் சேர்த்துக் கொண்டார்.”
அவனே தொடர்ந்து பேசினான்.

” நான் கொடுத்த பாயிண்டுகளைப் பார்த்து என்னை வாய் நிறையப் பாராட்டியவர் அந்த நல்ல வக்கீல். மிக நல்ல மனிதர். ”அம்பி,” ”அம்பி” என என் மீது பாசத்தைப் பொழிந்தவர். அவரது வாழ்க்கையில் அதுவரை தோல்வியே கண்டதில்லை. உமது தீர்ப்பில்தான் அவர் தோல்வியை முதல் முதலாக சந்தித்தார். அன்று அவரைப் பிடித்த சோகம் அவரை மன நோயோளியாக மாற்றியது. இதய நோயில் ஒரே மாதத்தில் இறந்தும் போய் விட்டா
சிறிது நேரம் அவரது மரணத்திற்கு மொளன அஞ்சலி செலுத்துபவன் போல் கண்களை மூடி நின்று இருந்தான். “இத்தனைக்கும் காரணமான, உன்னை, கோர்ட்டில் என்னைக் கேலி செய்த உன்னை, பழி வாங்க வேண்டும் என அப்போதே முடிவு எடுத்தேன். இப்போது சொல். நீ குற்றவாளியா? இல்லையா? அநியாயமாக இரண்டு உயிர்களைப் பறித்த நீ எவ்வளவு பெரிய குற்றவாளி என்பதை இப்போதாவது உணர்கிறாயா. “ திடீரென்று பெரும் சத்தம் கேட்டது. பூட்ஸ் கால்கள் ஓடும் அரவம் அதிகரித்தது.

ஒரு சன்னலைத் திறந்து பார்த்தவன், அவசரமாக அங்கிருந்த மின் விசிறியில் ஒரு கயிற்றினை சுருக்கு மாட்டும் வகையில் கட்டினான். கதவுக்கருகில் திறக்க இயலாதபடி மேஜையை தள்ளிப் போட்டான். போலீஸ் வந்தால் நான் இறந்து போவேன். அவர்கள் என்னைச் சுட்டுக் கொன்றாலும் எனக்குக் கவலை இல்லை. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் எனும் பழைய சட்டத்தைத் தான் நான் கைக் கொண்டேன்.

“யாரும் அசையாதீர்கள்” என கைத்துப்பாக்கியுடன் அங்கு வந்த மாவட்ட காவல் அதிகாரி, ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் அவன் மின் விசிறியை நோக்கி ஓடினான். ”டுமீல்” என்ற வெடி ஓசைக்குப் பிறகு அவன் தரையில் தொப்பென விழுவதைக் கண்டவர்கள் அவன் உயிரோடு இருக்கிறானா எனப் பார்க்க மேலும் நான்கு பேர் அவனைச் சூழ்ந்தனர்.

மீண்டும் ”டுமீல்”எனும் வெடியோசை. நீதி அரசர் தனக்குத் தானே சுட்டுக் கொண்டார்.

“ஏன் சார் இப்படி செய்தீர்கள்?” அருகில் வந்த மாவட்டக்காவல் அதிகாரி கேட்டார்.

”உண்மைக் குற்றவாளிகள் ஆகிய உங்களை நான் போக விட்டதற்கு எனக்கு நானே கொடுத்துக் கொண்ட சரியான தண்டனை இது”

சிறிது நேரத்தில் அவர் சுட்ட இடமாகிய வலது நெற்றியின் ஓரத்தில் இருந்து வழிந்த இரத்தம் கீழே இறந்து கிடந்தவனின் முகத்தில் படிந்து தேங்கி நின்றது.

அருகில் இருந்த தேவாலயத்தில் ஒருவர் மைக்கில் சப்தமாக தொடக்க நூலில் இருந்து வாசகம், அதிகாரம் ஒன்பது எனபடிப்பது எல்லோருக்கும் துல்லியமாகக் கேட்டது.

“உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள், மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்.”

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (5-Jun-24, 4:07 pm)
சேர்த்தது : T. Joseph Julius
Tanglish : irtham
பார்வை : 88

மேலே