இரண்டு ஜோடிகள், நான்கு திருமணங்கள்

வேணு, 30 வயது பட்டதாரி, ஒரு சிறிய தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தான். காலம் கனிந்தது. வீணா எனும் இளம்பெண்ணை யதேச்சையாக ஒரு நிகழ்ச்சியில் கண்டான். முதலில் கண்கள்தான் சந்தித்தன, பிறகு இரு மனங்களும் சிந்தித்தன. அதன் விளைவு, இருவரும் ஒருவரை ஒருவர் பலமுறை கண்டனர். வேணுவின் பணிவும் கனிவான பேச்சும் வீணாவுக்கு பிடித்துவிட்டது. வீணாவின் அழகும் அறிவும் வேணுவை வெகுவாக தாக்கின. இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே அடிக்கடி மரீனா கடற்கரை சென்று வந்தனர். கடற்கரை காற்று வாங்கச்சென்ற இருவர் மேலும் திருமணக்காற்றும் அடித்தது. காதல் கனிந்து அடுத்த ஆறுமாதங்களில் தேன் சிந்தியது. வீணா என்ற தேனை சுவைக்க வேணு எனும் வண்டு சிறகடித்து வண்ணம் பறந்து வந்தது. வேணு வீணாவை மணந்தான். தேனை நுகர்ந்தான். அந்த தேன் உண்மையிலேயே எப்படிப்பட்ட தேன் என்பதை சிறிது நாட்களில் காலம் அவனுக்கு உணர்த்தியது.

திருமணத்தின்போது வீணா இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில காவல்துறையில் சேர விருப்பம் கொண்டு, நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். இருவரும் ஒரு வருட திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்தனர். அடுத்த ஆண்டில், வீணா, போலீஸ் பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக முடித்து, போலீஸ் கான்ஸ்டபிளாகத் தேர்வு செய்யப்பட்டாள். மூன்று ஆண்டுகளுக்குள், அவரது திறமையான சேவைகள் மற்றும் அசாதாரண அர்ப்பணிப்பு காரணமாக அவள் சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு உயர்த்தப்பட்டாள்.
வேணுவின் உத்தியோகத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை, மாத சம்பளத்திலும்தான். காலப்போக்கில், வேணுவிற்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை வரத்துவங்கியது. அதை வீணாவும் கவனிக்கத் தொடங்கினாள். அவனது இந்த மனநிலையை மாற்றி அவனை சரிபடுத்துவதற்கு பதில் அவள் அவனது தாழ்வு மனப்பான்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தாள். வீணாவின் வேலை நேரங்கள் ஒவ்வொரு வாரமும் ஒருவிதமாக இருந்தன. அதனால் வீணா வேணுவிற்கு சமையல் செய்ய சொல்லிக்கொடுத்தாள். ஒரு மாதத்திற்குள்ளாகவே வேணு நன்கு சமையல் செய்ய ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு வாரத்தில் ஐந்துநாள் தான் வேலை என்பதால், சனி ஞாயிறு இரு தினங்களிலும் வேணுதான் சமையல் செய்தான்.
வேணு, வீணாவின் காவல் துறையில் பணிபுரியும் சூழ்நிலையை அறிந்துகொண்டு ஆரம்ப கட்டங்களில் வீணாவுடன் ஒத்துழைத்தான். வீணா கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்துக் கொண்டு, குடும்ப விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தினாள். வீட்டு வேலைகளில் பெரும்பகுதியை வேணுவே செய்ய வேண்டும் என்று அவள் விரும்பினாள்.
இதனால் வேணுவிற்கு வீணாவின் மேல் அதிருப்தி வரத்தொடங்கியது . இந்த நிலை நீடித்ததால், இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய கண்ணுக்குத் தெரியாத முக்காடு விழுந்தது. வீணாவின், வேணுவிடம் நல்ல நோக்கத்துடன் செய்யப்படாத அணுகுமுறை மற்றும் சைகைகள் வேணுவை சங்கடபடச்செய்து மேலும் தாழ்வாகவும் உணர வைத்தது. அவளிடமிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு நாள் வெகு தொலைவில் தான் இருப்பதைக் கண்டான்.
கடந்து சென்ற ஒவ்வொரு நாளும், இருவருக்கிடையே உள்ள உறவை மேலும் மேலும் பிரித்து வைக்கும் நிலையாக மாறியது. அவளை தவிர்க்க வேணு சில இரவுகளில் வீட்டிற்கு வராமல் வெளியில் தங்கினான். இதற்கு பதில் தரும் விதமாகவே என்னவோ வீணாவும் சில இரவுகள் வெளியிலேயே தங்கினாள். இது போதாதா, நிலைமை மேலும் மோசமடைய. அதைப்போலவே நிலைமை மோசமடைந்தது.
ஒரு நாள் ஆத்திரத்திலும் கோபத்திலும் ஆதங்கம் மற்றும் உணர்ச்சிவயப்பட்டு, வேணு தனது நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தான். மூன்று நாட்களில் அவனுக்கு பைனல் செட்டில்மென்ட் ஆகி கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்தது. தனது ராஜினாமா குறித்து வீணாவிடம் அவன் தெரிவிக்கவில்லை. ராஜினாமா செய்த ஒரு வாரத்தில், வீணாவிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் வேணு வீட்டை விட்டு வெளியேறினான். அவன் தன்னுடன் இரண்டு சூட் கேஸ்களில் அவனது முக்கிய ஆடைகளை மட்டும் எடுத்துச் சென்றான். சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தான். எங்கு செல்ல வேண்டும் என்று அவன் திட்டமிடவில்லை. திடீரென்று நினைத்துக்கொண்டு மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் செல்ல முடிவு செய்து, ரயில் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மும்பை செல்லும் ரயிலில் ஏறினான்.
ஷோலாப்பூரை அடைந்ததும், குறைந்த பட்ஜெட்டில் தங்கும் விடுதியில் நுழைந்தான். அங்கே ஹோட்டல் ஹோட்டலாக ஏறி வேலை தேடத் தொடங்கினான். மூன்று நாட்கள் கழிந்து ஹோட்டலை காலிசெய்துவிட்டு ஒரு சத்திரம் போன்ற ஒரு இடத்தில் குடியேறினான். இது லாட்ஜுடன் ஒப்பிடுகையில் மிகவும் செலவு குறைவாக இருந்தது. ஏற்கெனவே கொஞ்சம் ஹிந்தி பேசத்தெரிந்திருந்ததால், வேணு உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. வேலை தேடி வாரக்கணக்கில் அலைந்ததை தவிர வேறு உபயோகம் ஏதும் இல்லை. எந்த வேலையும் கிடைக்காமல் மனமுடைந்து போனான்.
திடீரென்று ஒரு நாள், அவன் குடிசையை காலி செய்துவிட்டு, ஷோலாப்பூரிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள புனித யாத்திரை நகரமான பந்தர்பூருக்கு பஸ்ஸில் ஏறினான். பண்டர்பூரில் ஒரு சிறிய குடிசை வீடு ஒன்றில் அவன் தங்கினான். வேலைக்காக தினமும் அந்த ஊரில் இருந்த பல்வேறு உணவகங்களை அணுகினான். அவனுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில், மூன்று நாட்கள் வேட்டைக்குப் பிறகு அதிர்ஷ்டம் அவனைப் பார்த்து சிரித்தது. அவன் ஒரு சைவ உணவகத்தில் பணியாளராக அமர்த்தப்பட்டான்.
ஒரு மாதத்தில், அவன் உணவகத்தில் சேவைகளில் தனது அர்ப்பணிப்பை நிரூபித்தான். உணவகத்தின் உரிமையாளர் அவனை விரும்ப ஆரம்பித்தார். ஆறு மாதங்களில், வேணு ஒரு விசுவாசமான ஊழியரானான். மேலும் அவனுக்கு மாத ஊதிய உயர்வு வெகுமதி அளிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட மாதச் சம்பளம் தவிர, உணவகத்திற்குச் வந்து செல்லும் பலரிடமிருந்து அவனுக்கு டிப்ஸ் கிடைத்தது.
வீணா சில சமயங்களில் வேணுவுக்கு போன் செய்து அவன் இருக்கும் இடத்தைப் பற்றி விசாரித்து, மீண்டும் சென்னைக்கு வரும்படி செயற்கை வேண்டுகோள் விடுத்தது வந்தாள். அது முதலைக் கண்ணீரைப் போன்றது என்று வேணுவுக்குத் தெரியும். எனவே அவன் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
ஹோட்டலில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள், உபியை சேர்ந்த மதுமிதா என்ற பெண் அதே உணவகத்தில் பணிப்பெண்ணாக சேர்ந்தாள். சில நாட்களுக்குள் வேணுவும் மதுமிதாவும் நல்ல நண்பர்களாக மாறினர். தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். இருவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. இருவரும் திருமணமாகி, மனஸ்தாபங்கள் காரணமாக தங்கள் வாழ்க்கை துணையை விட்டு விலகி வெளியேறியவர்கள். வேணு தனது போலீஸ் மனைவியைப் பற்றி மதுமிதாவிடம் கூறினான். அவள், மதன் என்னும் தனது கணவர் ஒரு இராணுவ அதிகாரி என்று பகிர்ந்து கொண்டாள்.
சிறிது நாட்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டனர். வேணு வீணாவிடம் ஹிந்தி கற்று மேலும் சிறப்பாக ஹிந்தியில் பேச கற்றுக்கொண்டான். ஆறு மாதங்கள் தனிமையில் சந்தித்து, அரட்டையடித்து, தங்கள் மனதையும் இதயத்தையும் பகிர்ந்து கொண்ட பிறகு, தம்பதியினர் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் ஆசீர்வாதத்துடன் எளிமையான விழாவில் திருமணம் செய்து கொண்டனர். வீணாவிற்கு இந்த விஷயம் குறித்து அறிய வாய்ப்பு உள்ளதா என்ன?
அவர்களின் உரிமையாளரின் அனுமதியுடன், வேணு-மதுமிதா ஜோடி தென்னிந்தியாவில் உள்ள ஊட்டி மலைப்பகுதிக்கு முதல் தேனிலவுக்குச் சென்றனர் (அல்லது இரண்டாவதா?). திரும்பும் வழியில் சென்னையில் சில நாட்கள் தங்கினார்கள். வேணு மதுமிதாவை மகாபலிபுரம், மவுண்ட் ரோடு, மற்றும் சென்னையில் உள்ள சில பெரிய கோவில்களுக்கு அழைத்துச் சென்றான். பண்டரிபுர் புறப்படவேண்டிய கடைசி நாளில், அவர்கள் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். மதுமிதாவுக்கு கடற்கரை மிகவும் பிடித்திருந்தது. அவளும் வேணுவும் கரையில் நின்று, உள்வரும் அலைகள் தங்கள் கால்களைத் தொட அனுமதித்து, அலை நீர் மீண்டும் கடலுக்குள் சென்றபோது, அவர்களின் கால்விரல்களை மெதுவாகத் தழுவி அந்த உணர்வை அனுபவித்தனர். அது இருவருக்கும் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அதன் பின்னர் இரவு உணவை ருசிப்பதற்காக இருவரும் ஒரு உணவகத்திற்குச் சென்றனர். உணவகத்தில், மெனு கார்டை ஸ்கேன் செய்து கொண்டிருந்த வேணு, தற்செயலாக சுற்றும் முற்றும் பார்த்தான், தன் வாழ்வின் இன்னொரு அதிர்ச்சியை கண்டான். சாப்பாட்டு அறையின் தொலைவில் ஒரு இளைஞனுடன் வீணா அமர்ந்திருந்தாள். அதே சமயம் மதுமிதாவும் அமர்ந்திருந்தவர்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள். மறுமுனையில் சில மேசைகளுக்கு அப்பால் ஒரு பெண்ணுடன் தன் கணவர் மதனை கண்டாள். திடுக்கிட்டாள். இரண்டு ஜோடிகள் ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்தன ஒரு கணம். ஆயினும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காதது போல் நடிக்க முயன்றனர்.
வேணு ஏற்கனவே அவன் பார்த்துக் கொண்டிருந்த ஜோடியை நம்ப முடியாமல் இருந்தபோது, மதுமிதா, அந்த ஆள்தான் தன் முன்னாள் கணவர் மதன் என்று திகைப்புடன் அவனிடம் தெரிவித்தாள். வேணுவால் தன்னையே நம்ப முடியவில்லை. அவனை கிள்ளிகொண்டு மதுமிதாவையும் கொஞ்சம் கிள்ளிவிட்டான், நடப்பவை எல்லாம் கனவு இல்லை என்று அறிந்துகொள்ள.
அடுத்த சில நிமிடங்களில் அந்த உணவகத்தில் இருந்த இரண்டு ஜோடிகளின் மனங்களில், கடும் குழப்பமும், வேதனையும் சண்டையும் போராட்டமும் மோதலும் ஏற்பட்டன. வேணுவும் மதுமிதாவும் உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வீணாவும் மதனும் உணவை முடித்தனர். வீணா, ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது, ஒரு கணம் குற்ற உணர்வுடன், அனிச்சைச்செயலாக வேணுவின் அருகில் வந்து அவன் நலம் விசாரித்தாள். வேணு திருதிருவென்று விழித்தான். மதன் கருகருவென்று முகத்தை வைத்துக்கொண்டு மதுமிதாவை பார்த்தான்.
அந்த நால்வரின் அறிமுகம் அதிக நேரம் எடுக்கவில்லை, ஆனால் அவர்கள் கண்களில் திகைப்பும் ஒருவித மிரட்சியும் அதிகமாக இருந்தது. மதன் மதுமிதாவிடம் தனியாக சில நிமிடங்கள் பேசினான். வீணாவும் வேணுவை இரண்டு நிமிடம் சந்தித்து பேசினாள்.
சென்னையில் அரசு விழா ஒன்றில் மதன் வீணாவை சந்தித்தான். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மதன் சென்னையில் இரண்டு வருட பணிக்காக நியமிக்கப்பட்டார் என்பது இந்த சந்திப்பின்போது தெரியவந்தது. இருவரும் தங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டனர். சிறிது நாட்களில் ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமே மற்றவரின் தாய்மொழி தெரியாததால் ஆங்கிலம் அவர்களின் தொடர்பு ஊடகமாக இருந்தது. அந்நேரத்தில், வீணாவும் மதனும் தங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை ஒருவருக்கொருவர் தெரிவிக்கவில்லை.
ஆனால் அன்று திடீரெண்டு இவர்கள் இருவரும் தனது வாழ்க்கை துணையை நேரில் பார்த்தபோது, வண்டவாளம் தண்டவாளத்தில் உருண்டது. மதன் மதுமிதாவிடம் தான் சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் தேடுவதாகவும், அப்படி ட்ரான்ஸ்ஃபர் கிடைக்காத பட்சத்தில் வீணா தன் வேலையை விட்டுவிட்டு தான் இருக்கும் இடத்தில் செட்டில் ஆகிவிடுவாள் என்றான். வேணு வீணாவிடம் தான் பண்டரிபூரிலேயே செட்டில் ஆகிவிடப்போவதாக சொன்னான்.
அப்போது எதிர்பாராத, நல்ல செயல் ஒன்று நடந்தது. மதன் மதுமிதாவின் பெற்றோர் கொடுத்த வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்க விரும்பினான். வீணாவும் வேணுவுக்கு ஒருமுறை கொஞ்சம் பணம் கொடுக்க விரும்பினாள். இந்த விஷயத்தில் வேணு ஆர்வம் காட்டவில்லை என்றாலும், மதுமிதா அவர்களின் விருப்பத்திற்கு சம்மதித்து தனது வங்கிக் கணக்கைக் கொடுத்தாள். எதிர்கால வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு முக்கியம் என்பதை ஆண்களை விட பெண்களே நன்றாக உணருகிறார்கள் என்பதற்கு இது உதாரணம்.

மாற்றப்பட்ட இரண்டு ஜோடிகள் ஒருவருக்கொருவர் விடைபெற்று நண்பர்களாக பிரிந்தனர். பண்டரிபுரத்தில், சென்னை ஜோடியிடம் இருந்து கிடைத்த நிதிப் பணத்தைக் கொண்டு, வேணுவும் மதுமிதாவும் ஒரு சைவ உணவகம் திறந்து, அதை நன்றாக நடத்தி சௌக்கியமாக வாழ்ந்தனர்.
இரண்டு ஜோடிகளும் சென்னையில் நண்பர்களாக விடைபெற்றாலும், அவர்களது வியக்கவைக்கும் அன்றைய சந்திப்பு, அவர்கள் வாழ்வில் கடைசி சந்திப்பாகவும் அமைந்தது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Jun-24, 1:46 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 28

மேலே