தெய்வக் குரலோன் TMசௌந்தரராஜன்
#தெய்வக் குரலோன் T.M.சௌந்தரராஜன்
நெஞ்சக் கூட்டில் நின்றி னிதாய்
ஒலிக்கு முந்தன் பாட்டு
நேர மின்றிக் கேட்கத் தூண்டும்
நிம்ம தித்தா லாட்டு..!
ஆண்ட வனின் வரத்தி னாலே
ஆற்றல் பெற்றக் குரல்தான்
அகில மிதிலே உண்டா நீசொல்
அடுத்து னக்கு இணைதான்..,?
எங்கி ருந்தோ பாட்டு வரும்
எங்கள் செவிக்குத் தேனாய்
இன்ப மூட்டும் உந்தன் குரலில்
துள்ளு கிறோம் மானாய்..!
ஆண்ட வனைப் பாடு கின்றாய்
அருகி லவன் காட்சி
அழுத ழுதே பாடு கிறாய்
அருவி கண்ணில் ஆச்சி..!
உச்சத் திலே ஏறும் ஸ்வரம்
உனக்கு மட்டுந் தானா
உய்த்தி ருப்போம் கேட்டு நாங்கள்
உயர்ந்த பாட்டுக் காரா..!
புரட்சித் திலகம் நடிப்புத் திலகம்
பொருந்துங் குரல் உனது
புதிய பல நடிக ருக்கும்
பூத்துக் கவரும் மனது ..!
ஆட்டி வைத்தாய்ப் பாடிப் பாடி
ஆயி ரங்கள் பாட்டு
ஆண்டு நூறு கடந்த போதும்
அகம் மகிழ்வார் கேட்டு..!
சிறுசு களும் பாடு கிறார்
சிந்தை யிலே வைத்து
"சிக்க்" என்றே பிடித்துக் கொண்டார்
சீனி மிட்டாய்ச் சுவைத்து..!
திரு விளை யாடல் படத்தில்
தெய்வத் தன்மை பாட்டாம்
டி... எம்எஸ் அருள் பாட்டு
தெம்பைத் தரும் கேட்டால்….!
நாவி னிலே ஊறும் சொல்லில்
நறுந்தேன் அருவி வீழ்ச்சி
நாங்க ளள்ளிப் பருகு கின்றோம்
நாளு மின்பங் கூட்டி..!
எட்டுக் கட்டில் பாடும் வித்தை
இறைவ னளித்த வரமாய்
எங்கி லுமே ஒலிக்கு தன்றோ
உந்தன் நாவின் சுரமாய்..!
அரி மாவின் கர்ஜ னைகள்
அருமைக் குரலில் கண்டோம்
ஆகா.. குயிலாம் உந்த னுள்ளே
ஆரா திக்கக் கண்டோம்..!
பாட்டுத் தலைவன் நீதான் ஆனாய்
பண்ணுக் குள்ளே கரைந்தாய் - உன்
பாடல் கேட்ட நெஞ்சி லெல்லாம்
பரம்ப ரையாய் நிறைந்தாய் ..!
சொ. சாந்தி