அரவணைக்கும் காதல்
*************************
இருகண்கள் ஒளிவீசி இதயத்தை ஈர்க்கும்
இதமான பருவத்தில் இளங்காற்று வீசும்
கருவண்டு அதற்குள்ளே கடல்மீனாய் நீந்திக்
களிக்கின்ற ஒருகாட்சிக் கற்கண்டாய் தோன்றும்
கருமேகக் கூட்டங்கள் கலைந்தாடு கின்ற
கார்கூந்தல் தானென்றுக் கவிபாடக் கூடும்
அரும்பிவரும் மீசையொடு ஆசைகளும் பூக்கும்
அடங்காத மனசோடு அலையாகி மோதும்
*
தெருநாயைப் போல்நெஞ்சு திசையின்றி ஓடும்
திருவோடாய் மனம்நீட்டித் தினம்பிச்சைக் கேட்கும்
கருதாத ஒருத்திக்காய் கருவாடாய்க் காயும்
கரும்புண்ண வேம்பாகி கசந்தேதான் போகும்
இரும்பாக இதயத்தை ஏன்வைத்துக் கொண்டாள்
எனும்கேள்வி பதிலின்றி இடர்வித்து நாட்டும்
நெருப்பாகிச் சுடுகின்ற நிமிசங்கள் கூடி
நினைவோடு போராட்டம் நிகழ்த்திவிடும் நாளும்
*
திறக்கின்ற புத்தகத்தில் தேவதையைக் கண்டுத்
திகைப்பதற்குப் பேரின்பத் தேனாறு பாயும்
மறக்கின்ற கல்விக்கு மனமார்ந்த வாழ்த்தை
மங்கைப்பூ முகந்தானும் மலாரகத் தூவும்
இறக்கின்ற எதிர்காலம் இருவிழியின் முன்னே
இருப்பதனை எண்ணாமல் இழந்துவிடும் உன்முன்
சிறப்பாகத் தேர்வெழுதி சித்தியுறும் பெண்ணாள்
சிறகடிக்கும் நிலைதோன்ற சிலையாவாய் நீதான்
*
படிக்கின்ற காலத்தில் பயமின்றிக் காதல்
பயணத்தை தொடங்குவதில் பயனேது மில்லை
இடித்துரைத்தப் போதினிலும் ஏற்காது விட்டால்
எதிர்காலம் பாழாகும் என்பதுண்மை கேளாய்
வடிக்கவுள கண்ணீர்க்கு வடிகாலை காதல்
வடிவாக வெட்டுமெனும் வரலாற்று உண்மை
அடித்துச்சொல் லும்மூத்தோர் அனுபவத்தைக் கேளு
அடித்தநொடி காதலுடன் அரவணைக்கும் கல்வி
**