தனியே ஒரு ரயில் பயணம்
தனியே ஒரு ரயில் பயணம்
என் பெயர் சங்கரன் என் அப்பா சிதம்பரத்தில் அரிசி வியாபாரம் செய்து வந்தார்.அரிசி வேம்பு ஐயர்
என்றால் எல்லோருக்கும் நன்றாக தெரியும். விவசாயிகள் யாவரும் அவரிடம் வந்து அவரது
அறிவுரைகளைக் கேட்டு அதன் படி என்ன அரிசி வகை பயிர் செய்ய வேண்டும் எனத் தெரிந்து
கொண்டு அதை அறுவிடை செய்த உடனே அப்பாவிடம் வந்து மொத்தமாகக் கொடுத்து விடுவார்கள்.
இதனால் அப்பாவிடம் பல வகையான அரிசி வகைகள் கிடைக்கும்.சிதம்பரத்தில் மட்டும் இல்லாமல்
கேரளாவில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் பல வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள்.
அப்பாவுடைய பால்ய நண்பர் ஆறுமுகம் மதுரையில் இருந்து சிதம்பரம் வந்து எங்களுடன் சில
மாதங்கள் தங்கினார். அப்பொழுது வாழ்க்கை நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது தன்
மகளை பற்றிக் கூறியபடி அவளுக்கு ஒரு நல்ல பிள்ளையைத் தேடுவதாக கூறிட,நான் அந்த நேரத்தில்
அங்கு வர என் அப்பா என்னைப் பற்றி அவரிடம் சொல்ல அவர் உடனே என் பெண்ணை உன்
பையனுக்குத் திருமணம் செய்து கொள்கிறாயா என வினவ அப்பாவும் சம்மதிக்க என் திருமணம்
உண்மையாகவே பெரியோர்களால் நிச்சியக்கப் பட்டது. நானும் ஆனந்தியும் திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை சென்னை நகரத்தில் தொடங்கிய பொழுது,ஒரு வாடகை வீட்டில் குடி
இருந்தோம்.இருவரும் வேலைக்காக அம்பத்தூர் சென்று வர வேண்டியிருந்ததால் மேற்கு
அண்ணாநகரில் என் நண்பன் குடியிருந்த அரசாங்கம் கட்டிய நடுத்தர குடும்பங்கள் வசிக்கும்
வீடுகளில் ஒன்றை அவன் எங்களுக்கு பேசி அங்கு வாழ வழி அமைத்தான். நானும் ஆனந்தியும்
அங்கிருந்து அம்பத்தூர் செல்ல ஒரு இருசக்கர வாகனம் வாங்கினோம்.அதில் இருவரும் காலையில்
சென்றால் வருவதற்குள் இரவு வந்ததன் அடையாளமாக தெருவில் விளக்குகள் எரிய
ஆரம்பித்துவிடும்.என் அலுவலகத்தில் இருந்து அவள் வேலை செய்யும் இடம் சிறிது தூரம் தான்
ஆயினும் மாலை வேளை டிராபிக் நெருக்கடியால் அங்கு செல்ல ஒரு முப்பது நாற்பது நிமிடங்கள்
ஆகிவிடும். அதன் பின்னர் இருவரும் தெரு நெருக்கடியைத் தாண்டி வர வேண்டும். அண்ணாநகர்
நன்றாக வளர்ந்து அதன் தெருக்களும் ஓட்டுவதற்கு கடினமாக தான் இருக்கும்.இரு சக்கர
வாகனமானதால் சிறு இடைவெளிகளில் புகுந்து வந்து விடமுடியும். வீட்டிற்கு வந்தவுடன்
இருவருக்கும் அசதியாக இருக்கும் அதைப் பொருட்படுத்தாமல் ஆனந்தி உடனே இரவுக்கு வேண்டிய
உணவு தயாரிக்கச் சென்று விடுவாள்.சில நாட்கள் நான் அவளிடம் சாப்பிட வெளியே செல்லலாம்
என்று கூறினால் இதோ இப்ப பத்து நிமிடத்தில் செய்து விடுகிறேன் எனச் சொல்லி சுவையான
உணவைச் செய்து விடுவாள்.என் நண்பன் வந்து அழைத்தால் ஓரிரு முறை வெளியே சென்று
உண்ணும் நேரத்தில் தான் அவள் கைப்பக்குவம் நன்றாக தெரியும்.
இப்படியே ஆண்டுகள் உருண்டன ஆனந்தியும் தாயானாள்.அதன் பின் அவள் வேலையை விட்டு
குழந்தையைக் கவனிக்க வீட்டிலேயே இருந்தாள். குழந்தைக்கு இரண்டு வயதானதும் அவள்
என்னிடம் வெட்கம் கலந்த முகத்தோடு காதில் அந்த நற்செய்தியை கூறினாள்.தான் மீண்டும் ஒரு
குழந்தைக்குத் தாயாக போவதாக, அதைக் கேட்டதும் நானும் மகிழ்ச்சியில் திளைத்தேன். எனக்கு
அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஒரு நற்செய்தி என்னை அதிகாரியாக்கிப் பதவி உயர்வு கொடுத்து
சென்னையில் உள்ள அனைத்துக் கிளைகளையும் கவனிக்கும் பொறுப்பையும் தந்தனர். என் மனதைக்
கொள்ளை கொண்டு பிறந்தாள் என் இரண்டாவது குழந்தை . மகள் பிறந்த அதிர்ஷ்டம் தான் இந்த
உயர்வு என யாவரும் கூறிட அவளுக்கு நாங்கள் ஐஸ்வர்யா எனப் பெயர் சூட்டினோம். இரு
குழந்தைகளும் எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றியது. வீட்டில் ஒரு புதிய உலகமே
உண்டாக்கியது. வீடு முழுதும் நடந்தும்,தவழ்ந்தும் சிறு ஓசைகள் எழுப்பியும் குழந்தைகள்
எங்களுக்குள் ஒரு இன்பமான உணர்ச்சியை உண்டாக்கின. நாட்கள் மாதங்களாகி, மாதங்கள்
வருடங்களாகி உருண்டோடின. குழந்தைகள் இப்பொழுது ஆரம்பப் பள்ளிக்குச் செல்கின்றனர்.
ஆனந்தி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பின்னர் அவளும் பள்ளியில் ஒரு ஆசிரியையாக
வேலை செய்ய ஆரம்பித்தாள். இவ்வாறு வாழ்க்கை நாட்கள் சென்று கொண்டிருந்த வேளையில் நாம்
நமக்கென்று ஒரு சிறிய வீடு கட்டினால் நன்றாக இருக்குமே என்ற ஒரு எண்ணம் எங்களுக்குள் வளர
ஆரம்பித்தது.
மும்மரமாக நானும் ஆனந்தியும் இந்த எண்ணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தோம்.மாதம் வரும்
சம்பளத்தை கணக்கிட்டு நம்மால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதைப் பற்றி குழந்தைகள்
தூங்கியவுடன் பேசுவோம். தாம்பரத்தில் குறைந்த விலையில் வீட்டு மனைகள் விற்பனைக்கு என்ற
செய்தி எங்கள் காதில் தேனாக பாய்ந்தது. நாம் அங்கு சென்று அதில் நமக்கு சிறிய ஒரு வீடு கட்டி
குடியேறலாம் என்று எண்ணம் வந்தது. திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஓடி விட்டது.
ஆனந்தியின் அப்பாவிடம் இதை பற்றி கூறினோம் அவர் இந்த செய்தியை மிக சந்தோஷத்துடன்
கேட்டது மட்டுமல்லாமல் தன்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்வதாகவும் வாக்களித்தார்.
ஆனந்தியின் அப்பாவும் என் அப்பாவும் எங்களிடம் உங்களையும் குழந்தைகளையும்
பார்க்கவேண்டும் சிதம்பரத்திற்கு வாங்கள் என்று பலமுறை அழைத்தும் எங்களால் சென்னையில்
இருந்து கிளம்ப முடியவில்லை.எங்கள் வேலையும் குழந்தைகளின் பள்ளிப் படிப்பும் புது வீட்டுப்
பணியும் அதற்கான காரணம். பள்ளி கோடை விடுமுறை ஆரம்பித்தது உடனே நான் ஆனந்தியிடம்
நீயும் குழந்தைகளும் சிதம்பரம் செல்லுங்கள்.நான் பின் வந்து சேர்ந்து கொள்கிறேன் என கூறி ரயிலில்
டிக்கெட் எடுத்து வைத்தேன்.
ஆனந்திக்கு இது முதல் ரயில் பயணம் அதாவது,ஆண் துணை இல்லாமல், தனது இரண்டு
பிள்ளைகளுடன், தாம்பரத்தில் ஏறி சிதம்பரம் வரை பயணிக்கிற முதல் பயணம்.ஆனந்திக்கு
பயமாகத்தான் இருந்தது.
தைரியமா போம்மா . சிதம்பரம் ஸ்டேஷனில் அப்பாவும்,மாமாவும் நிற்பாங்க.அடிக்கடி என்னோட
கைப்பேசியிலே தொடர்பு கொள் என்று சங்கரன் சொல்லி ரயிலில் அவர்களை ஏற்றிவிட்டு
ஜன்னல் வழியாக டாட்டா காட்டினான் .பிள்ளைகள் டாட்டா காட்டிய போது,ரயில் மெல்ல நகர
ஆரம்பித்தது.
ஆனந்திக்கு இப்போது ஒரு உள்ள பயம்,அந்த பெட்டியில் மற்ற பயணிகள் யாருமில்லாதது தான்.
ரயில் ஓட ஆரம்பித்தவுடன் ஆனந்தி குழந்தைகளைத் தொட்டுக் கொண்டு சாய்ந்தபடி கண்களை மூடி
ஆண்டவனை நினைத்து மந்திரங்களை கூறஆரம்பித்தாள் ,ரயில் மெல்ல சென்று செங்கல்பட்டு
ஸ்டேஷனில் நிற்க அவள் அமர்ந்த பெட்டியில் பலர் ஏறினார்கள். ஆனந்தியின் பயம் அவர்களை
பார்த்ததும் மேலும் அதிகரித்தது. இவர்களில் யாராவது வந்து நம்மைத் தொல்லை செய்வார்களோ என
மனம் நினைக்க குழந்தைகளோடு மேலும் நெருக்கமாக அமர்ந்தாள்.
தனியாக இருக்கையில் இருந்த அவளிடம் ஒருவன் வந்து அம்மா தண்ணி ஏதாச்சும் வேணும்களா என
வினவ வேண்டாம் வேண்டாம் என மறுத்தாள்.மனம் படபடக்க ஆரம்பித்தது.அதற்குள்
மேல்மருவத்தூர் வந்தது மேலும் பலர் ஏறினார்கள்,பேட்டி நிறைய இப்பொழுது ஆட்கள். ஆள்
இல்லாத பயம் மாறினாலும் இவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்ற எண்ணம் அவளை
உறுத்தியது. காலையில் சிதம்பரம் சென்று இறங்கும் வரை கண் விழித்துக் கொண்டு தான் இருக்க
வேண்டும் என முடிவு செய்து கொண்டாள்.
ஜன்னலோரம் அமர்ந்துக்கொண்டு,வெளியே வேடிக்கைப் பார்த்த பிள்ளைகள்,''ஜிலு ஜிலுன்னு
காத்து வருதும்மா ''என்று மகிழ்ச்சியில் கூறிய பொழுது ஆனந்தி கடமைக்கு,''ம்ம்..'' என்று சொல்லி
விட்டு, 'சிதம்பரம் வரைக்கும் நல்ல படியே போய் சேரணுமே என்று உள்ளுக்குள்
வேண்டிக்கொண்டாள். அவள் வேண்டிக்கொண்டு கண்களை மூடி குழந்தைகளை அணைத்து
கொண்டிருக்க சில நிமிடங்களில் ஒருவன் சூடான டீ,சப்பாத்தி குருமா என கூவிக்கொண்டே
வந்தான்.கூடவே இன்னொருவன் குழந்தைகளுக்கான பொம்மைகளுடன் சில கலர் செய்யும்
புத்தகங்களையும் விற்பனைக்கு கொண்டு வந்தான்.ஆனந்திக்குஇப்பொழுது இருந்த பயம் இவர்கள்
தங்கள் உடைமைகளை கண்காணிக்க இவ்வாறு வேடமிட்டு வருகின்றாரோ என்பதுதான்.மேலும்
இறுக்கமாக குழந்தைகளுடன் ஒன்றி கொண்டாள்.
அவளை, மேலும் அச்சம் உண்டாக்கும் வகையில்,ஒரு அம்பது வயது மதிக்கத் தக்க தடித்த மனிதர்
ஒருவர் ஏறி, அவர்கள் எதிரில் அமர்ந்தார். அவர் மிகவும் களைத்திருந்தார்.
அடிக்கடி தன் முகத்தை குற்றால சிகப்பு துண்டால் துடைத்துக்கொண்டார். எதிரில் அமர்ந்து
பயணித்துக்கொண்டிருந்த ஆனந்தியிடம்,
''மகளுக்கு தலைப்பிரசவம். மருமகன் வெளிநாட்டில் இருக்கான் அவளுக்கு அம்மாவும் இல்லை ..
அதனால ஊருக்கு அழைச்சுகிட்டுப் போகலை ..இங்கேய வச்சுப் பிரசவம் பார்த்தாச்சு..நாலு நாள்
ஆச்சு குளிச்சு..இப்போ தான் ஊருக்கு போறேன்..சீர்காழிக்கு ..''என்று சிரித்தவர்,
''ஆமா. உனக்கு எந்த ஊரும்மா ?'' என்றார்.
அந்த ஆளின் தோற்றம், ஆனந்திக்கு பயத்தை உண்டாக்கியது.
திருடர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசி, ஏமாற்றுவார்கள் என்று, உள்ளறிவு உணர்த்த,''சிதம்பரம் ''
என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி,முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.
அட...நமக்கு பக்கம் தான் ''என்றவர், பிள்ளைகள் பக்கம் திரும்பி,
''அருமையான புள்ளைங்க'' என்று அவர்களின் தாடையை தடவி கொஞ்சினார்.
பிள்ளைகள், வெட்கத்தை விடையாக தந்துவிட்டு, ஜன்னலோரோம் திரும்பிவிட்டார்கள்.
இந்த இடைப்பட்ட நேரத்தில்,ஆனந்தி ,அப்பாவுக்கு ஒரு போனை போட்டு பிள்ளைகலும் நானும்
வந்துகிட்டு
இருக்கோம் பா என்றாள்.
[உண்மையில், அந்த அழைப்பு சென்று சேரவில்லை..] '
விடிஞ்ச பிறகு போய் சேரப்போற வண்டிக்கு,இப்பவே வந்து ,கொசுக்கடியிலே ஸ்டேஷன்லயே
காத்திகிட்டு இருப்பாரே
அப்பா..ஹஹஹஹா...அதான் அப்பா..'' என்ற அந்த ஆளைப் பார்த்து ஆனந்திக்கு இனம் புரியாத ஒரு
பயம் வந்தது. எப்படி இந்த இரவைக் கடத்தப் போகிறோம் என்று நினைத்தபடி தன் குழந்தைகளிடம்
பேச முற்பட்டாள்.
அவர் தன் மடியில் வைத்திருந்த பொட்டலத்தை பிரித்து,
''இன்னிக்கு முழுக்க சாப்பிடவில்லை. வரும்போது அவசரமா ஆறு மெதுவடை வாங்கினேன்..எனக்கு
மூணு போதும்.. இந்தாங்க ஆளுக்கொன்று சாப்பிடுங்க ''என்று அந்த பொட்டிலத்தை நீட்டினார் .
முதலில் வடையை ஆனந்தியிடம் எடுத்து கொள்ள நீட்டினார்.
''ஸாரி. எனக்கு இதெல்லாம் பிடிக்காது..''என்ற ஆனந்தி,
தனது பிள்ளைகளுக்கு அவர் கொடுக்க போனதையும் தடுத்தாள்.
''எண்ணைப் பலகாரம், அவங்களுக்கு ஆகாது ''என்று சொன்னாள்.
''ஓ சாரியம்மா"என்ற அந்த நபர், பொட்டலத்தை மூடி வைத்து விட்டு கொஞ்சம் நேரம் கம்மென்று
ஒன்றும் பேசாமல் பயணித்தார்.
ரயில் விரைந்துக்கொண்டிருந்தது இருட்டிய பின்
ஆனந்திக்கு கண்களை மூடித் தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் எதிரில் இருப்பவர் என்ன
செய்வாரோ என்ற பயம் அவளை தடுத்து நிறுத்தியது. சிறிது நேரத்திற்கு பின்
அந்த ஆள்,தன் இருக்கையை விட்டு,பொட்டலத்தோடு கிளம்பிவிட்டார்.ஆனந்தி மனதில் ஒரு சிறிய
மகிழ்ச்சி.
ஆனந்திக்கு தெரியாததா எத்தனை முறை பேப்பர்களில்
படித்திருக்கிறாள்
ரயில் பயணத்தில், சிலர் பலகாரத்தில் மயக்க மருந்தை கலந்து, கொடுத்து, கொள்ளையடிக்கிற
விசயத்தை ?
தான் உஷாராக நடந்துகொண்டதில், ஆனந்திக்கு திருப்தியாக இருந்தது.
தன்னை ஏமாற்ற முடியவில்லை என்பதால், அந்த ஆள் இடத்தை காலி செய்து போய்விட்டதாக
ஆனந்தி நினைத்தாள். ஆனால் அடுத்த பத்து நிமிடத்தில், அந்த ஆள் மீண்டும் வந்து எதிர்
இருக்கையில் அமர்ந்தார்.
இப்போது அவர் கையில் அந்த பொட்டலம் இல்லை. பிள்ளைகள் இப்போது தூங்க
தொடங்கியிருந்தனர்.இருவரையும் தனதருகில் முதுகில் தட்டியவாறு இருந்த பொழுது, தனது அப்பா
தன்னை மடியில் வைத்து தட்டுவதை நினைவு கூர்ந்தாள். எவ்வளவு இன்பமான நாட்கள் அவை என
நினைக்கையில் கண் தனியே கலங்குவதை உணர்ந்தாள். .
சிறிதாய் ஒரு ஏப்பம் விட்டு விட்டு எதிரில் அமர்ந்தவர் ஆனந்தியைப்பார்த்து,''ரொம்ப பசித்ததம்மா.
புள்ளைகள் முன்னாடி, வடையை சாப்பிட மனசு கேட்கவில்லை .. அதான்,படிக்கட்டுல் போய்
உட்கார்ந்து, சாப்பிட்டு விட்டு வந்தேன் . என்றார். ஆனந்திக்கு இந்த வார்த்தைகள் அவள் அப்பா
கூறுவதுபோல் இருந்தது
இவரை போய் சந்தேகப் பட்டோமே என த் தலையை மெல்ல தூக்கி அவரை பார்த்து புன்னகை
செய்தாள்.
அவளது கண்கள் மெல்ல மூடியது பயணம் இப்பொழுது பயமில்லாமல் மாறியதை உணர்ந்தாள்.

