நடிப்பு
நடிப்பு
காலை ஆறு மணிக்கு ஸ்டுடியோ வாசலில் காரை விட்டிறங்கிய நடிகை சுஷ்மிதா, அங்கு எல்லோருமே பரபரப்பாய் இருப்பதை பார்த்தாள். ஒவ்வொருவரும் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். இவள் இறங்கி உள்ளே நுழைந்த பொழுது அவளை எதிர் கொண்டு அழைக்க ஓடி வந்தான் ‘அசிஸ்டெண்ட் டைரக்டர் கதிரவன்’.
பரபரப்பாய் அவளிடம் ஓடி வந்தவன் “வாங்க, நீங்க பத்து நிமிசம் லேட்” சேகர் சார் வந்துட்டாரு, சத்தம் போடறாரு, ஒன்பது மணிக்கு இன்னொரு ‘சூட்டிங் போகணுமாம்’. அவள் காதில் மட்டும் விழுமாறு முணு முணுத்தான்.
இவளுக்கு முணுக்கென்று கோபம் வந்தது, நேற்று இரவு ஒன்பது மணிக்கு ‘சூட்டிங்’ முடியும் போது டைரக்டர் சொன்னபடி ஆறு மணிக்கு ‘டாணென்று’ வந்து விட்டாள், இதில் கதாநாயகனாக நடிக்கும் ‘சேகர்’ கொஞ்சம் முன் நேரத்தில் வந்து விட்டால் அதற்கு இவள் என்ன செய்ய முடியும்? சரியான நேரத்துக்கு வந்த இவளை தாமதம் என்று எப்படி சொல்ல முடியும்?
இவளை பார்த்த ‘சேகரின்’ முகம் சற்று சுருங்கியது போலிருந்தது, கோபமாயிருக்கிறானாம், தன்னை காத்திருக்க வைத்து விட்டாள் இவள் என்னும் எண்ணமாக கூட இருக்கலாம். இவளும் கண்டு கொள்ளாமல் “மேக்கப்” அறைக்குள் நுழைந்தாள்.
இரண்டு மூன்று ‘டேக்’ வாங்கினான் சேகர், அவன் முகத்தில் “எள்ளும் கொள்ளும் வெடிததது போல் இருந்தது. எப்படியோ ‘ஒப்பேற்றி’ அடுத்த காட்சிக்கு சென்றார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போல் வரிசை கிரமமாக காட்சிகள் எடுக்கப்பட்டது. அவன் பகுதி முடிந்ததும், டைரக்டரிடம் எதையோ சொல்லி விட்டு அங்கிருந்து “விர்ரென” கிளம்பி விட்டான்.
டைரக்டரின் முகம் அவன் போன பின்னால்தான் சற்று தெளிவானது. இவரின் இரண்டாவது படம் இது. அதிர்ஷ்டவசமாக ‘மார்க்கெட் வேல்யூ’ இருந்த ‘சேகரின்’ கால்ஷீட் கிடைத்திருக்கிறது. சேகர் நாற்பதை தொட்டு விட்டாலும் அதன் தாக்கம் தெரியாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவன்.
அவனது இயல்பான தடுமாற்றமே தனக்கு இணையாக நடிக்கும் நாயகியும் தன்னை போல் “ஜோவியலாக” இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான். அதே நேரத்தில் அவள் அறிவு ஜீவியாக இருந்து விட்டால்…!
சுஷ்மிதா இரண்டு படங்களின் அவனுக்கு இணையாக நடித்திருந்தும் அவளது நடவடிக்கைகள் மற்ற கதாநாயகியாக நடித்து கொண்டிருப்பவர்களை விட சற்று வித்தியாசமாக இருந்தது.
இரண்டு மூன்று முறை இவளுடன் ‘ஜோவியலான நட்பை” எதிர்பார்த்தவனுக்கு அவளது நடவடிக்கைகள் சலிப்பையும் கோபத்தையும் தந்தது. சூட்டிங் இடைபட்ட நேரத்தில் அவள் புத்தகங்களை படித்து கொண்டிருப்பதும், இல்லாவிட்டால் அவர்களது இயக்க தோழர்களிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறான். இந்த படத்தில் இவனோடு நடிக்க இவளை கூப்பிட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட போதே டைரக்டரிடம் முணுமுணுத்தான்.
அவர் “சார் தயாரிப்பாளர்” இந்த கேரக்டருக்கு அவங்க நடிச்சாத்தான் நல்லா இருக்கும், அப்படீன்னு முடிவு பண்ணிட்டாரு, ‘சேகரை’ சமாதானப்படுத்தினான்.
சுஷ்மிதாவுக்கும் அவனது நடவடிக்கைகள் புரிந்துதான் இருந்தது. அவன் மீது கோபம் வரவில்லை அவளுக்கு, காரணம் ‘சேகர்’ திரை உலகில் முன்ணனிக்கு வந்து விட்டானே தவிர மற்ற எந்த சமூக நலன் சார்ந்த எதிலும் ஈடுபாடு கொள்ளாதவனாய் இருந்து விட்டான். அவனை அதற்கு எப்படி குறை சொல்ல முடியும் ? நான்கைந்து வருடங்களாக அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு மேடேறி வந்தவன். இப்பொழுதாவது வாழ்க்கையை அனுபவிக்க துடிக்கிறான். அவனது எண்ணத்தில் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது இளம் பெண்களின் நட்பு, டின்னர், பார்ட்டி, அடுத்து இப்படியாக சென்று கொண்டிருப்பது.
சுஷ்மிதா எல்லாரையும் விட வித்தியாசமாய் இருந்தாள். சூட்டிங் பொழுது மட்டுமே நடிப்பில் கலந்து கொள்வது, மற்ற நேரங்களில் சமுதாய பணிகள் செய்து கொண்டிருப்பது, இப்படியாக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. இதற்கு காரணம் ஆரம்பத்திலிருந்தே அவள் சிரமபட்டு படித்தவள். தந்தை சாதாரண ஆட்டோ ஓட்டுனராக இருந்ததும், அவர் கம்யூனிச இயக்கத்தில் இருந்ததால் சிறு வயதில் இருந்தே எல்லா கூட்டங்களுக்கும் அவளை அழைத்து சென்று மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்க பழக்கி இருந்தார்.
இவள் ‘பத்தாவது’ முடித்திருந்த போது தந்தை இறந்து விட இவர்கள் குடும்பம் பொருளாதார சிரம திசையில் தத்தளித்தது. ‘சுஷ்மிதாவின்’ படிப்பை இயக்கம் ஏற்று கொண்டதால் கொஞ்சம் சிரமம் குறைந்தது. அது மட்டுமல்ல, இவளின் அம்மாவுக்கும் ‘ஆட்டோ ஓட்ட’ கற்று கொடுத்து கணவனின் பணியை அவள் தொடர்ந்து செய்ய உதவி செய்தது.
‘ பிளஸ் டூவில்’ நல்ல மதிப்பெண் பெற்று வெளி வந்தவள் கணிணி பொறியியலிலும் நல்ல மதிப்பெண் பெற்று வெளி வந்தாள். அப்பொழுது எல்லாரையும் போல கணிணி பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்த பொழுதுதான் சினிமா வாய்ப்பு அவளை அதிர்ஷ்டவசமாக தேடி வந்தது.
அவள் நடித்த இரண்டு படங்கள் தொடர் வெற்றி பெற, ஓரளவு தன்னை நிலைபடுத்தி கொண்டாள். வருமானமும் உயர ஆரம்பித்தது.
தனக்கு இயக்கம் செய்த உதவிகளை மறக்காததால் தன்னை போல மற்ற பெண்களை படிக்க வைக்க இவளும் இயக்கத்திற்கு தன்னாலான உதவிகளை செய்து கொடுக்க ஆரம்பித்தாள்.
அது மட்டுமில்லாமல் தன்னை வெளிப்படையாக இயக்கத்தை சார்ந்தவளாக நிறைய மேடைகளிலும் பேச ஆரம்பித்தாள்.
இதனால் திரை உலகில் , இவளுடன் பணியில் இருப்பவர்கள் இவளை பற்றிய மதிப்பீடுகள் வித்தியாசமாக கண்டனர். தேவையற்ற’ டூயட் காட்சிகள்’, மற்றும் தாராள உடையுடன் தோன்றும் காட்சிகளை வலிந்து அவளிடம் திணிக்க தயங்கினர். அது மட்டுமில்லாமல் கண்ணியமான கதாபாத்திரங்களையும் கொடுத்தனர்.
கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களாக அவள் நடித்து கொண்டிருந்தாலும், இதனால் இவளுக்கு அதிகபட்ச தொல்லைகளும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட குணங்கள் ஒரு சில உச்ச கதாநாயகர்களாக நடித்து கொண்டிருப்பவர்களின் மனதுக்குள் ஏற்று கொள்ள முடியாமல் இதோ இந்த ‘சேகர்’ போல நிறைய இடங்களில் அவமானப்படுத்தபட்டிருக்கிறாள்.
‘இவளும் சேகரும்’ நடித்து எப்படியோ படம் முடிந்தது. டைரக்டருக்கு இரண்டாவது படமாகையால் மிகுந்த பதட்டத்தில் இருந்தார். முதல் படத்தில் பெற்ற வெற்றியை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்னும் பதட்டம் அவருக்கு.
தயாரிப்பாளரையும் டைரடரையும் ‘சேகர்’ போனில் அழைத்தான். அவர்கள் அவன் வீடு தேடி சென்றனர்.
பட விளம்பரங்களில் சேகரையும், மூன்றாவதாக நடித்த ஒரு கதாபாத்திரத்தையும் “ஆஹா ஓஹோ”வென்று புகழ்ந்து விளம்பரங்கள் வெளி வந்தன. சுஷ்மிதாவின் கதாபத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாதது போல ‘வழக்கமான கதாநாயகியாக வந்து சென்றார்’ என்னும் அளவிலேயே விமர்சனங்களை வெளி வர செய்தனர்.
படமும் வெளிவந்து ‘நஷ்டமாகாமல் குறைந்த லாபத்தில்’ படம் தப்பித்தது என்றாலும், அது என்னவோ படம் பார்த்த இரசிகர்களால் “சுஷ்மிதாவின்” நடிப்பு மட்டுமே பெருமளவு பாரட்டப்பட்டது, பேசப்பட்டது என்பதுதான் இந்த கதையின் திருப்பம்.