இவனை பைத்தியமாக்கு

இவனை பைத்தியமாக்கு

வழக்கம்போல அந்த சிறைச்சாலையில் விடியற்காலையில் கைதிகள் இருக்கிறார்களா என்பதற்காக நடத்தப்படும் “பேரேடுக்கு’ பாண்டியன் வரவில்லை, அவன் பெயரை பலமுறை உச்சரித்தார்கள்.
“பாரா சென்ட்ரி” முன் வந்து வரிசையாய் நின்றிருந்த சிறை கைதிகளிடம் எங்கடா அவன்? அவன் “செல்லுல’ இருந்து நான் தான வெளிய அனுப்பிச்சேன்.
அவன் எங்களோட வரிசையிலதான் வந்தான், ஆனா..சிரித்தான் ஒரு கைதி
என்னடா அவன எங்கன்னு கேட்டா சிரிக்கறே? ரூல் தடியை ஓங்கியபடி அடிக்க வந்தார் “பாரா சென்ட்ரி”
என்னைய எதுக்கு அடிக்க வர்றீங்க? அவன் கொஞ்ச நாளாவே ‘தானே பேசி சிரிச்சுகிட்டு பைத்தியமா அலையறான்’, இப்ப கூட எங்களோடதான் வந்தான், எங்காச்சும், சுவத்துல சாஞ்சு நின்னுகிட்டு தானா பேசிகிட்டிருப்பான்.
அப்படியும் இருக்குமோ? கைதிகள் இரண்டு பேரை கூட்டிக்கொண்டு ஒரு சிறை காவலர் அவர்கள் நின்றிருந்த மைதானத்திலிருந்து கட்டிடத்தை நோக்கி நடந்தனர்.
அங்கே யார்? சற்று தூரத்தில் சுவற்றில் காலை வைத்து கீழே படுத்தபடி தானாக பேசியபடி கிடந்தான் ஒருவன், அவன் அருகில் சென்று பார்த்தால் பாண்டி..
எலே பாண்டி எந்திரிடா, சிறை காவலர் அவனை குச்சியால் தட்டி எழுப்பினார், அவன் தலையை மட்டும் திருப்பி பார்த்து நீங்க யாரு? சிரித்து விட்டு மீண்டும் பழையபடி அவனாக பேச ஆரம்பித்தான்.
அவனை “குண்டு கட்டா தூக்குங்கய்யா”, கைதிகள் இருவரும் அவனை அப்படியே தூக்கி கொண்டு மைதானத்துக்குள் கொண்டு வந்தனர்.
பாண்டி உட்கார்ந்தபடியே தானாக பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருப்பதை பார்த்தபடியே அங்கிருந்த கைதிகள் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்ய சென்று கொண்டிருந்தார்கள்.
என்னாச்சு பாண்டிக்கு? பைத்தியம் புடிச்சிடுன்னு நினைக்கிறேன், எப்ப பாரு புலம்பிகிட்டே இருந்தான், அவனோடு “செல்லில்” ஒன்றாக இருந்து கொண்டிருப்பவன் சொல்லி கொண்டிருந்தான், என்னை முடிச்சிடுவானுங்க முடிச்சிடுவாங்கன்னு, கடைசியில இவனே ஒரு மாதிரி ஆயிட்டான் போல.
‘சூப்பிரண்டெண்ட்’ வார்டனிடம் விசாரித்து கொண்டிருந்தார், எத்தனை நாளாயா இப்படி நடந்துகிட்டிருக்கான்?
சரியா தெரியலை சார், அவனுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கும் விடுதலையாகறதுக்கு, இதை போன வாரம் கூப்பிட்டு சொன்னேன், அவ்வளவுதான் அதுக்கப்புறம் அவனை தனியா பார்க்கலை சார்.
அவனை இரண்டு போலீஸ்காரங்களை வச்சு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக சொல்லுய்யா, சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
மருத்துவமனையில் எல்லா பரிசோதனைகளும் செய்து பார்த்தார்கள். ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை, மன நலம் ஏதாவது பாதிக்கப் பட்டிருக்குமா? மன நல மருத்துவர் அவனை சோதித்தார். எதற்கும் இரண்டு நாள் இங்கிருக்க வேண்டும் என்று இறுதியில் சொன்னார்.
பாண்டியனுக்கு “மன கோளாறு” வெளியே போனால் என்ன ஆகுமோ? என்னும் பயமே அவனை இந்த நிலைமைக்கு கொண்டு போய் விட்டிருக்கும் சிறை கைதிகளுக்குள் பேச்சாக இருந்தது.
ஒரு வாரம் ஓடியிருந்தது, மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை கொடுத்து கொண்டிருந்தார்கள். இதற்கு இடையில் அவனுக்கு விடுதலையும் வந்து விட்டதால் மேற்கொண்டு சிறைத்துறை பொறுப்பெடுத்து கொள்ளவில்லை என்றாலும், நிர்வாகத்தில் இருந்த ஒரு சில அதிகாரிகள் அவனை மருத்துவர்கள் கவனித்து சரி செய்து அனுப்பி வைப்பதற்கு ஆகும் செலவை தனிப்பட்ட முறையில் ஏற்று கொள்வதாக சொல்லி விட்டார்கள்.
அன்று “சிறைச்சாலை வார்டன்” தெரிந்தவர் ஒருவரை பார்க்க, மருத்துவமனைக்கு வந்தவர், அப்படியே இவனையும் பார்த்து விட்டு போகலாம் என்று அவன் இவன் நோயாளியாய் அனுமதித்திருக்கும் வார்டுக்கு வந்தார்.
ஒரு நாற்காலியில் தனியாக உட்கார்ந்தபடி இவர் வருவதை பார்த்து கொண்டிருந்தாலும், இவரை அடையாளம் கூட தெரியாதது போல் உட்கார்ந்திருந்தான்.
பரிதாபமாய் அவனை பார்த்தவர், டாக்டரின் அறைக்கு சென்று இவனுக்கு ஏதாவது குணம் தெரிஞ்சுதுங்களா டாக்டர்? கேட்டார்.
டாக்டர் சிரித்தபடியே அவன் நல்லா குணமாகணும்னா கண்காணாத ஒரு இடத்துல போய் இருக்கணும்.
அதுக்கு ஏதாவது வழி செஞ்சு கொடுங்க டாக்டர்.
அவனை மைசூருல இருக்கற என்னோட தோட்டத்துல வேலை செய்ய போறியான்னு கேட்டேன், தலையாட்டினான். பார்க்கலாம், இந்த வாரம் ஞாயித்து கிழமை நான் அங்க போவேன், அங்க கூட்டிட்டு போய் வேலைக்கு விட்டுட்டு வந்துடறேன், போதுமா?
ரொம்ப நன்றி டாக்டர், நீங்க செய்யற உதவிக்கு.
நீங்க அன்னைக்கு வந்து கேட்டுகிட்டீங்கன்னுதான் இந்த திட்டத்துக்கே நான் ஒத்துகிட்டேன்.
எனக்கு தெரியும் டாக்டர், அவன் இப்ப வெளியில வந்திருந்தான்னா உயிரோட இருக்கறதுக்கு வாய்ப்பு இல்லை, அதனாலதான் நான் அவனை அப்படி நடிக்க சொல்லி உங்க கிட்ட இப்படி ஒரு உதவி கேட்டேன். இப்ப அவனுக்கு “பைத்தியம்னு” பரவுனதுனால அவங்க ஆளுங்க கொஞ்சம் தள்ளி போயிட்டாங்க. அதனாலதான் இப்ப கூட அவன் என்னை தெரிஞ்சுகிட்டதா காட்டவே இல்லை, எங்கியாவது அவன் ஆளுங்க பார்த்துட்டாங்கன்னா எதிரியா நினைச்சு இவனை முடிச்சிடுவானுங்க டாக்டர்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த ஜெயில் வார்டனுக்கு மனசுக்குள் ஒரு நிம்மதி வந்திருந்தது. எப்படியாவது இவன் இங்கிருந்து எங்காவது போய் உசிரோட இருந்தா போதும் என்னும் எண்ணமே நிறைந்திருந்தது.
வீட்டை நோக்கி நடக்க, நடக்க அவனுடன் சிறையில் பேசியதெல்லாம் ஞாபகத்தில் வந்தது.
வெள்ளி கிழமை காலையில் உனக்கு விடுதலை.
பாண்டியனிடமிருந்து எந்த மாற்றத்தையும் இந்த செய்தி கேட்டு வெளிப்படாததால் செய்தியை சொன்ன சிறை வார்டன் என்ன உனக்கு சந்தோசமில்லையா?
இதற்கு அவன் கீழ் உதட்டில் இருந்து சின்ன சுழிப்பு மட்டுமே காட்டினான். இதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் சிரிக்கிறயா? இல்லை அழுகறயா?
அழுகையா? இப்பொழுது சத்தமாய் சிரித்தான். நான் அழுதது முதன் முதல் ஒருவனை வெட்டும் போதுதான், அதற்கு பின்னால்… சிரித்தான்.
போதுண்டா பாண்டி, எத்தனை நாளைக்கு இப்படி வெட்டு குத்துன்னு இருப்பே, போ வெளியே, எங்காவது நல்ல இடத்துல ஒரு வேலைய பார்த்து செட்டிலாகு,
பாண்டி செட்டிலா? என்னை ‘செட்டில்மெண்ட்’ முடிக்கறதுக்கு இந்நேரம் எத்தனை பேரு “ஸ்கெட்ச்” போட்டிருப்பானுங்கன்னு தெரியலை சார், குரலில் வருத்தமா, பயமா? எனக்கு போதும்னு ஆயிடுச்சு சார், என்னைய சின்ன வயசுல இருந்து வளர்த்தறேன்னு சொல்லி “வெட்டு குத்துன்னு” அனுப்பிச்சு என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாங்க சார். எத்தனை நாள் சார் இப்படி யாராவது என்னைய ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயந்து பயந்து வாழறது? ஏதோ ஒரு வேலை அது கூலி வேலையா இருந்தாலும் சரி, கூலிய வாங்கி அன்னை அன்னைக்கி சாப்பிட்டு நிம்மதியா வாழனும் சார் அதுதான் சார் எனக்கு இப்ப தேவை.
சிறை வார்டனுக்கும் அவனது எதிர்பார்ப்பும், ஆதங்கமும் புரிந்தது, இருந்தாலும், அவனது இப்போதைய சூழ்நிலையும் புரிந்தது. பத்து பனிரெண்டு வயசில இருந்து அடிதடியில் இருக்கிறான். தாய் தகப்பன் இல்லாதவனாய் இருந்ததால் அவனை சுவீகரித்து கொண்ட ‘ரவுடி’ ஒருவன் இவனை நன்றாக உபயோகப்படுத்தி அந்த ஏரியாவில் தன்னை ஒரு “தாதா”வாக உருவாக்கி கொண்டான்.
நல்லவேளையாக இவன் பனிரெண்டு வருடம் தண்டனையில் உள்ளே வந்த இரண்டு வருடத்திலேயே அவன் மற்றொரு கூட்டத்தால் கொலை செய்யப்பட்டு விட்டான். அதற்கே அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் உள்ளே வந்து இவனை உசுப்பேற்றி கொண்டிருந்தனர்.
என்ன நினைத்தானோ? ஆரம்பத்தில் கோபமாக இருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக சிறைச்சாலையிலேயே இருந்து விட்டான். அவர்கள் ‘மேல்கோர்ட்’, ‘கீழ் கோர்ட்’ போகலாம் என்று வற்புறுத்தியபோதும் மறுத்து விட்டான்.
அவனது நிதானம் அவர்களுக்கு எரிச்சலை தர கொஞ்சம் கொஞ்சமாக அவனை பார்க்க வருவதை நிறுத்தி விட்டார்கள். இப்பொழுது வேறு யாரோ அந்த குழுவுக்கு தலைவனாகி விட்டானாம். அதனால் இவனை கண்டு கொள்வதில்லை. என்றாலும் இவன் விடுதலை ஆவது அவர்களுக்கு இடைஞ்சல் என்று நினைத்து விட்டாற்கள் என்று இவனுக்கு தகவல் வந்திருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவனை முடிக்கவும் வாய்ப்பு உண்டு. இல்லையென்றால் அந்த குழுவில் இருப்பவர்கள் ஒரு சிலர் பிரிந்து இவனை தூண்டி “தலைவராக்கி” அதில் குளிர்காய நினைக்கலாம். எப்படி இருந்தாலும் அவனுக்கு உயிர் பாதுகாப்பு என்பது வெளியில் கிடைப்பது சிரமம். இதையும் சிறை வார்டன் புரிந்து வைத்திருந்தார்.
முதலில் அவன் வெளியே பத்திரமாக செல்ல வழி செய்ய வேண்டும், அதன் பின் பிழைப்பதற்கு ஒரு வழியை காட்டவேண்டும், மனதிற்குள் பல பல யோசனைகள். ஓரு வழியாக அவனை “பைத்தியக்காரனாக்கி” விட்டால்…! முடிவெடுத்தவர் அவன் வேலை செய்து கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்றார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Aug-24, 3:06 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 34

மேலே