வயதானால் வரும் தொல்லை

வயதானால் வரும் தொல்லை

என் பையனோடு நான் வந்து தங்கி நாட்களை கழித்து கொண்டிருந்தேன்.மனைவி இறைவனடி
சேர்த்து சில வருடங்கள் ஆகி விட்டது. என் வீட்டை விற்று வந்த பணம் அனைத்தையும்
அவனிடம் கொடுத்து அவன் வீட்டில் தங்கி இருப்பதற்கு உதவட்டும் எனக் கூறினேன் .அவனும்
முதலில் மறுத்துவிட்டு பின்னர் அதை வாங்கி கொண்டு வங்கியில் வைத்து என்னை வீட்டில் தங்க
வைக்க ஒரு வசதியான அறையை கட்டி அதில் எனக்கு வேண்டிய பொருள்களையும் நல்ல
கட்டில்,மெத்தை ஆகியவற்றையும் வைத்து அழகாக ஒரு அறையை அமைத்தான்.வீட்டில்
சமையல் செய்ய ஒருத்தி வீட்டை சுத்தம்செய்ய ஒருவன் என ஆட்களை வைத்து என் வேலைகளை
கவனிக்க ஒரு ஆளையும் வைத்து என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டான்.
அவன் ஒரு பெரிய மென்பொருள் அலுவலகத்தில் மேலதிகாரி. காலையில் சீக்கிரம் சென்று
மாலையில் வெகு நேரம் ஆனபின்பு வருவான். சில நாட்களில் நடுஇரவில் கூட வருவதுண்டு.
எனக்கு வயது எழுபதை தாண்டியதால் கண்ணும் காதும் சன்னமாகி இருந்தது.பார்ப்பவர்கள்
பார்ப்பவைகள் எல்லாம் மனதில் பதியவும் நினைவில் நிற்கவும் நேரமானது.பல நடப்புகள்
மனதில் பதியாமல் மறுபடி மறுபடி கேட்க தோன்றும்.
அது எல்லோருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் அது பின்னே கோபமாகவும் மாறும். என் மகன்
என்னிடம் மிகப் பிரியமாக இருந்தான். அவன் வேலை காரணம் சில நாட்கள் வீட்டிற்குள்
வந்தவுடன் இருப்பதை சாப்பிட்டு விட்டு என்னிடம் அப்பா சுப ராத்திரி எனக் கூறி விட்டு
படுக்கச் சென்றுவிடுவான்.அந்த நாட்களில் நான் என் தனிமையை உணர்ந்து சிறிது
வருத்தமடைவேன். அப்பொழுது என் மனைவியை நினைத்து மிகவும் சோகம் கொள்வேன்.
என் அறையில் சென்று படுத்து கொண்டு கண்கள் கலங்கிட தூக்கம் வராமல் படுக்கையில்
புரண்டு பின்னர் அசதியால் உறங்கி விடுவேன்.
காலையில் என் மகன் என்னை அழைத்து அன்று அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைச்
சொல்லி விட்டு காலை உணவை என்னுடன் அமர்ந்து அருந்தி விட்டு அலுவலகம் செல்வான்.
அந்த காலை முழுதும் என் மனம் மிக மகிழ்ச்சியுடன் இருக்கும்.
நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி உருண்டோடியது.
என் மகன் சென்றவுடன் அந்த ஜன்னனில் என் கன்னத்தை வைத்துத் தெருவையே பார்த்துக்
கொண்டிருப்பேன். வார விடுமுறை வரும் பொழுது அவன் என்னுடன் வீட்டில் இருந்து
கொண்டு அவனும் நானும் பல விதமான பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வோம். அவன்
அம்மாவைப் பற்றி பேசும் பொழுதெல்லாம் அவன் கண்கள் விரிந்து ஆவலை காட்டும். என்
கண்கள் நிறைந்து அன்போடு இருந்தவளை இழந்தோமே என்ற ஏக்கம் வெளிப்படும். இருவரும்
பின்னர் தொலைக்காட்சியை கண்டு அதில் மனதை செலுத்தி தங்கள் உணச்சிகளை அடக்கிக்
கொண்டு காட்சியில் வருவதைக் கண்டு ரசிப்பார்கள். தொலைக்காட்சியைப் பார்த்து பின்
அறைக்கு சென்று படுத்து தூங்குவார்கள். காலையில் மீண்டும் காலை உணவு அலுவலகம்
செல்லுதல் இரவு நேரம் கழித்து வருவது ஆகியவை எப்பொழுதும் போல் நடக்கும்.

ஒரு சனிக்கிழமை மகனும் தந்தையும் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்தனர்.
சற்றுத் தொலைவில் ஒரு காகம் வந்தமர்ந்தது.‘அது என்ன மகனே?’ என்று கேட்டார்
தந்தை.‘அப்பா, அது காகம்’ என்றான் தந்தை மீண்டும் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ‘அது என்ன?’
என்றார்.‘அது காகம்’ என்றான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.
மகனுக்கு கொஞ்சம் எரிச்சல். சற்று காட்டமுடன் ‘காகம்!’ என்றான்.
நான்காவது முறை தந்தை மகனிடம் அதே பறவையைக் காட்டி `அது என்ன ?’ என்று கேட்டார்.
மகனின் கோபம் எல்லையைக் கடந்தது. ‘காகம்… காகம்… காகம்… வயசாச்சுன்னா சும்மா
இருக்க வேண்டியதுதானே’ ஏன் இப்படி கேட்டதையே கேட்டு உயிரை எடுக்கிறீர்கள் என்று
கோபத்தில் எரிந்து விழுந்தான்.
தந்தையின் கண்கள் கண்ணீரால் நிறைந்திட, அவர் எதுவும் பேசாது மெதுவாக எழுந்து உள்ளே
போனார். ஒரு பழைய டைரியை எடுத்து கையில் கொண்டு வந்தார். அதில் ஒரு பக்கத்தைப்
புரட்டி எடுத்து மகனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.‘எப்பொழுதும் அம்மாவின் இடுப்பிலே
இருக்கும் என் செல்ல மகன் இன்று என்னுடன் ஜன்னலில் வந்தமர்ந்தான். ஒரு பறவையைச்
சுட்டிக் காட்டி அது என்னஅப்பா ? என்று கேட்டான்.
காகம் என்று நான் சொன்னேன்.அந்த பறவை மரக்கிளையில் அமர்ந்து "கா கா" என்று
கத்திக்கொண்டிருந்தது . நான் கூறியது
அவனுக்குப் புரியவில்லை போல இருந்தது. மீண்டும் மீண்டும் இருபத்து ஐந்து முறை என்னிடம்
அது என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தான். நானும் ஒவ்வொரு முறையும் அவனைக்
கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே அது காகம் அது காகம் என்று சொன்னேன்.
இன்று நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாய் உணர்ந்தேன்’ என்று எழுதி யிருந்தது.மகன் அதை
படித்து முடித்தவுடன் அவன் கண்களில் கண்ணீர் வடிந்தது. இருபத்து ஐந்து முறை தன் அதே
கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன்
என மனம் வருந்தி தந்தையின் கரம் பிடித்து விம்மி அழுது அவர் கரங்களை தனது தலையில்
வைத்து அப்பா என்னை மன்னித்து விடுங்கள் நான் உங்களிடம் கடுமையாக பேசி விட்டேன்
எனக் கூறியபடி மீண்டும் ஜன்னல் வழியே வெளியே பார்க்க காகம் பறந்து போயிருந்தது.

எழுதியவர் : கே என் ராம் (21-Aug-24, 2:52 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 34

மேலே