படியுங்கள் இந்த நாற்பது வரிகள், பிடியுங்கள் இறைவன் பொற்பாதங்கள்

ஒன்றும் இல்லாத ஒன்றிலிருந்து
என்றோ துவங்கிய தெய்வீகம்
எங்கும் எதிலும் எல்லாநேரமும்
எல்லாமுமாக திகழ்கின்றது!

பார்வதி அருளிய ஞானபுத்ரனின்
தலையை சிவனும் சீவவில்லை
அறிவு குன்றிய கட்டுக்கதைகள்
நம்மையும் விட்டுப் போகவில்லை

யானை பலம்போல் வேறொன்றுமில்லை
அதன் உணவோ வெறும் சைவம்தான்
இதை நமக்குணர்த்தவே பிள்ளையார் கொண்டார்
கஜமுகன் போன்ற திருஉருவம்!

இரண்டு கையில் உள்ள பலத்தை காட்டிலும்
நம்பிக்கை தந்திடும் அதிகபலம்
இதை உணர்வதற்கே கணபதி கொண்டார்
தும்பிக்கையோடு அமைந்த முகம்!

அழகிய உடையுடன் அரசரைபோல
அரியணை மீது அமர்ந்துள்ளார்
நெறிமுறையுடனே வாழ்க்கை
சுகங்களை அனுபவி என்றே விளக்குகிறார்

யானை போன்ற பெரிய காதுகள்
எதற்கென்று நம்மை வினவுகிறார்
கற்றலைவிடவும் கேட்டலே நன்று
என்றே விடையையும் கூறுகிறார்

பளு அதிகம் கொண்ட பார்வதி மைந்தன்
மூஞ்சூலை வாகனமாய் கொண்டார்
வாழ்க்கை சுமைகளின் பாரத்தை குறைக்க
மனதை லேசாக வை என்றார்

மோதகத்தை கையில் ஏந்தியபடியே
ஈசன்மகன் நல்ல தோற்றம் கொண்டார்
உன் செலவுக்கு போக சிறிது செல்வதை
தருமம் செய் என்று போதிக்கிறார்

மண்ணால் செய்தும் பொன்னால் செய்தும்
கணபதியை நாம் துதிக்கின்றோம்
அன்பின் வடிவமே மதமற்ற தன்மையே
தெய்வம் என்பதை உணர்கின்றோம்!

ஓம் எனும் பரம்பொருள் கணபதி என்றே
ஒவ்வொரு நாளும் தவம் செய்வோம்
பக்தி கணபதி சக்தி கணபதி
முக்தி கணபதி கணபதி ஓம்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Sep-24, 9:47 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 30

புதிய படைப்புகள்

மேலே