பள்ளிக்கூடம்

📚📚📚📚📚📚📚📚📚📚📚

*பள்ளிக்கூடம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

📚📚📚📚📚📚📚📚📚📚📚


#பள்ளிக்கூடம்....

அறிவு அமுதத்தை
அள்ள அள்ள கொடுக்கும்
அட்சயப் பாத்திரம்....

மாணக்கர் கற்களை
சிலையாக்கும்
கலைக்கூடம்......

அறியாமை இருளை
போக்கும் அகல் விளக்கு...

கண் என்னும் புண்களை
குணமாக்கும்
மருத்துவமனை.....

இங்கு வரும்போதும்
அழுது கொண்டே வருவார்கள்....!
போகும்போதும்
அழுது கொண்டே போவார்கள்...!

ஜாதி மதமற்ற
ஒரு சமுதாயம்
நாளை உருவாகிட
இங்கு ஒத்திகை பார்க்கலாம்...

பல வண்ணங்களில்
பார்த்து ரசித்த
வண்ணத்துப்பூச்சிகள்
இங்குதான்
ஒரே வண்ணசீருடை யில்
சுற்றி திரியும்.....

படுக்கையில் படுக்கும் போது
வராதத் தூக்கும்
இங்கு
பாடம் நடத்தும் போது
ஓடோடி வரும் .....

கண்ணீர்
உலர்வதற்குள்ளேயே
புன்னகை பூக்கள்
மலரும் அதிசயம்
இங்கு தான் நடக்கும்....

மணி ஒலி ஒன்று தான்
காலையில் துயரம்
மாலையில் துள்ளல்

சாகாமலேயே
போகக் கூடிய சொர்க்கம்
உலகிலேயே
இந்த ஓரிடத்தில் தான்....

இங்கு மட்டும் தான்
வருடம் முழுவதும்
வசந்த காலம்...

மனங்கள் கருவுற்று
நட்பு குழந்தையை
பெற்றெடுக்கும் பிரசவறை....

மனங்களை
பழுது பார்க்கும்
பட்டறைச்
சாலை....

நாம் தான்
தெய்வங்களைத் தேடிக்கொண்டு
கோவிலுக்குப் போவோம்....
ஆனால்
இந்த இடத்தைத்
தேடிக்கொண்டு
அந்தத் தெய்வங்களே வரும்....!!!

இங்கு இருப்பவர்கள்
போவதற்கு ஏங்குவார்கள்....
போனவர்கள்
இங்கு வருவதற்கு
ஏங்குவார்கள்.....!!

*கவிதை ரசிகன்*


📚📚📚📚📚📚📚📚📚📚📚

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (2-Nov-24, 10:17 pm)
Tanglish : pallikoodam
பார்வை : 33

மேலே