மந்திரி முந்திரியார்
புலவர் ‘புளுகேந்தி’ கையில் ஒரு வாள் ஏந்திக்கொண்டு செல்கிறார். அதைக்கண்ட மந்திரி ‘முந்திரியார்’, அவர் அருகில் அமர்ந்திருந்த தளபதி ‘தளர்வப்பா’வை, அவர் விரலால் கொஞ்சம் கிள்ளினார். "தளர்வப்பா, உடனே எழுந்திரப்பா. எப்போதும் தாள் ஏந்தி வரும் புளுகேந்தி இன்று வாள் ஏந்தி வருகிறார்." தளர்வப்பா "முந்திரியப்பா, என் உடம்பு தளர்வாக இருக்குப்பா. கொஞ்சம் என்னை தூங்கவிடப்பா' என்று சொல்லிவிட்டு, தூக்கமறதியில் கையில் இருந்த வாழைப்பழத்தை உரித்து, பழத்தை வீசியெறிந்துவிட்டு, வெறும் தோலை வாயில் இட்டபடி கண்களை மூடிக்கொண்டார்.
அதே நேரத்தில் அந்தப்புரத்தில் வந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்த மன்னன் மயில்சாமி, அரசவையின் இந்தப்புரம் ஓடிவந்தான். அதைப்பார்த்த காவலாளி ‘வணங்காமுடி’, ஓடோடிச் செல்வதுபோல் நடந்து சென்று, மன்னன் மயில்சாமியின் எதிரில் நின்று, அவனது வணங்காமுடியை கோதிவிட்டுக்கொண்டு, வணங்கினான். உடனே மன்னன் அவன் வாளுறையிலிருந்து ஒரு வெள்ளிப்பொற்காசினை வணங்காமுடிக்கு ஓதிவிட்டு, புளுக்கேந்தியை வரவேற்க ஓடினான். அதே நேரம் பார்த்து அரசனின் குருவான ‘குருமூட்டை’, முதுகில் ஒரு மூட்டையை சுமந்தபடி அரண்மனைக்குள் நுழைந்தார். மன்னன் மயில்சாமி ஆச்சரியத்துடன் கேட்டான் ' குருமூட்டையாரே, முதுகில் என்ன மூட்டை?
குருமூட்டை சொன்னார் ' உப்பு மூட்டை". மன்னன் மயில்சாமி முகம் மலர "நல்ல நேரம் பார்த்து உப்பு கொண்டு வந்திருக்கிறீர்கள். அரண்மனை சமயலறையில், நேற்று நூறு பேருக்கு உப்புமா செய்ததால், உப்பு முழுவதும் தீர்ந்துவிட்டது. என்ன வணங்காமுடி, உப்பு மூட்டையை குருமூட்டை முதுகிலிருந்து இறக்கி அதைச் சமயலறையில் கொண்டு கொடுத்துவிடு. அப்போதுதான் இன்று மதியம் நமக்கு உப்பு போட்ட உணவு கிடைக்கும்" என்றான். குருமூட்டை சொன்னார் "மன்னா மயில்சாமி, இது அந்த உப்பு இல்லை. மூட்டைக்குள்ளே இருப்பது புலவர் புளுகேந்தி தந்தை ‘உழவர் கையேந்தி’. இந்த இருவரும் சேர்ந்து ஒரு வாளை கையில் பிடித்துக்கொண்டு " வெறும் அறிவு இருந்தால் யாரும் எம்மை மதிக்கவில்லை. அரிவாள் இருந்தால்தான் நமக்கு மதிப்பு "என்று என்னைப்பார்த்து கர்ஜனை செய்தனர். பயந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல், புலவர் புளுகேந்தியை இந்த மூட்டையில் அடைத்துக் கொண்டுவந்துவிட்டேன்".
குருமூட்டை அப்படி சொல்லும்போதே, அந்த மூட்டையிலிருந்து ஒரு உருவம் மூட்டையை வாளால் அறுத்துத் திறந்து வெளியே வந்தது. அதைக்கண்டு அனைவரும் வியப்படைந்தனர். காரணம் அந்த உருவம் புலவர் புளுகேந்தி இல்லை, அவர் தந்தை உழவர் கையேந்தி. அரசவையில் இருந்த அனைவரும் ' எங்கே புலவர் புளுகேந்தி, எங்கே அவர்" என்று கவலையுடன் கேட்டனர். "இதோ இங்கிருக்கிறேன் ' என்று சொல்லிக்கொண்டு அந்தபுரத்திலிருந்து வெளியே வந்தார் புலவர் புளுகேந்தி. மன்னன் மயில்சாமி மிரண்டுபோய் "புலவரே எப்படி நீங்கள் எனக்குத் தெரியாமல் அந்தப்புரத்திற்கு சென்றீர்கள்? புலவர் பதட்டமின்றி பதிலளித்தார் " அரசே, நீங்கள் அந்தப்புரத்திற்கு செல்லுகையில் எப்படி எனக்குத் தெரியாமல் செல்கிறீர்களோ, நானும் அதைப்போல உங்களுக்குத் தெரியாமல் அந்தப்புரத்தில் நுழைந்துவிட்டேன். அப்போது அங்கிருந்த பெண்கள் எல்லாம் என்னைப்பார்த்து பயந்து 'வாள் வாள் ' என்று கத்தினார்கள். என்னிடமிருந்து என் வாளை, என் தந்தை உழவர் கையேந்தி அவர் கையில் ஏந்திக்கொண்டபின் என்னிடம் வாள் எப்படி இருக்கும்? அந்தபுரப் பெண்கள் 'ஆள் ஆள் ' என்று சத்தம்போட்டிருந்தால் அது சரியாக இருந்திருக்கும் என்பது என் தாழ்ப்பாள் போடாத தாள்மையான கருத்து".
மன்னன் ஒரு மணி நேரம் யோசனை செய்த பிறகு சொன்னான் " இப்போதிலிருந்து என்னைத்தவிர வேறு யாரவது அந்தப்புரம் செல்லவேண்டும் என்றால், என்னுடைய முன் அனுமதி பெற்றுக்கொண்டுதான் செல்லவேண்டும். வேலை இருக்கின்ற ஆள் மட்டுமே அந்தப்புரத்தில் அனுமதிக்கப்படுவர். அவரது வாளுக்கு அனுமதி இல்லை".
இதைக்கேட்டு அரசவையில் வீற்றிருந்த மந்திரி முந்திரியார் "மிக்க நன்றி அரசே. ஆனால் ஒரு சின்ன திருத்தும், நான் இதுவரை அந்தப்புரம் சென்றபோதெல்லாம் என் வாளை வெளியே வைத்துவிட்டு, காய்ந்த திராட்சையைத்தான் எடுத்துச் சென்றேன். அந்தபுரப்பெண்களுக்கு காய்ந்த திராட்சை என்றால் மிகவும் விருப்பம். எப்போதாவது நான் திராட்சை எடுத்துச்செல்ல மறந்துவிட்டால் அந்தப்பெண்கள் ' திராட்சை தான் இல்லை. முந்திரி கொட்டையாவது கிடைக்குமா மந்திரியாரே' என்று கேலி செய்வார்கள்".
மன்னன் மயில்சாமி திடுக்கிட்டுப்போனான். சுதாகரித்துக்கொண்டு "இன்று முதல் காவலாளி வணங்காமுடிதான் எனது மந்திரி. மந்திரி முந்திரியார் இன்று முதல் காவலாளி முந்திரியன்" என்று சொல்லிவிட்டு கலைந்துவிட்ட தலையை கோதிக்கொண்டு சபையை கலைத்தார்.