வாவா என் புன்னகையே

வா...வா... என் புன்னகையே
07 / 12 / 2024

வா...வா... என் புன்னகையே
என் வாழவின் பொன் நகையே
நான் படைத்த புதுக்கவியே
பொன் பூவே வா...
நீ நடக்கும் பாதையெங்கும்
பூக்களை நான் தூவிடவா
கண் மலர என் மார்பில்
தொட்டில் ஒன்று கட்டிடவா

அன்புமகள் மொழியைப்போல்
உலகில் ஒரு மொழியும் இல்லை
பொன்மகளின் வார்த்தையைப்போல்
முத்தமிழும் இங்கு இனிப்பதில்லை
தத்தி தத்தி என் பிள்ளை நடந்து போகையில்
ஜதிச் சத்தம் ஒன்றை அதில் சேர்க்கவேண்டுமே
பொக்கை வாய் சிரிப்பை போல்
சொர்க்கம் ஒன்றை பூமியிலே தேட வேண்டுமே
தாய் சுமத்த பாரம்தனை இனி
நான் சுமக்க வேண்டுமம்மா

பிஞ்சு விரல் என்னைத் தொட
பனி மழை என் நெஞ்சில் பெய்யும்.
கொஞ்சு மொழி பேசையிலே
ஏழு சுவரம் என் இல்லம் பொங்கும்.
பாவங்கள் காட்டி என் பிள்ளை அவள் நடக்கையில்
நாட்டியத் தாயவள் தலை குனிவாள் .
புள்ளி இல்லா கிறுக்கலை அவள் கிறுக்கினாலும்
புள்ளி கோலம் தலைச் சுற்றிப்போகும்.
தாயே... உன் மடியில் சேயாக வேண்டுமம்மா.
என்னை பெற்ற தாயாக நீ வேண்டுமம்மா

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (8-Dec-24, 6:53 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 130

மேலே