பாரதிக்குப் பிறந்தநாள்
கவிராஜன் பாரதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கவி
ரஜினி என்கிற
மூன்றெழுத்து
திரை உலகின்
சூப்பர் ஸ்டார்
பாரதி என்கின்ற
மூன்றெழுத்து
கலை உலகின்
ரியல் சூப்பர் ஸ்டார்
பெண் வயிற்றில் பிறந்த
பாரதியே
உன்னைப் போன்ற ஒரு தீயை
தன் வயிற்றில் சுமக்காது மண் வயிற்றில் சுமக்க வைத்த இறைவன் மீது கோபமுற்று இருக்கிறாள் பார்வதியே
பார்வதிக்குப் பிறந்த சுப்பிரமணியோ
கடவுளாய்த் தோன்றி
கருவறையில் இருப்பவர்
லட்சுமிக்குப் பிறந்த சுப்பிரமணியோ
கருவறையில் தோன்றி
சொல்லறை இருந்தும்
சில்லறை இல்லாது
செல்லறையில்
கல்லறையில் எங்கள் கடவுளாய் இருப்பவர்.
பாரதியே
பா ரதியே
பாட்டு நதியே
அன்று
சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய்
இது பாப்பாவுக்கு மட்டும்தான் என்று சிலர் நினைத்தனர்
இன்று அந்தப் பாப்பாக்கள் கூட பாரினில் இல்லை
பாரினில் அதிகம் இருப்பது பார் மட்டுமே
அங்கே அதிகம் கிடைப்பது பீர் மட்டுமே
சமூகம் கிடந்தது சாதி எனும் குப்பையா
அதை அழிக்க நினைத்தாயே சுப்பையா
அப்படி நினைப்பது இக்காலத்தில் தப்பையா
நீ கறுப்பாடை அணிந்து
பல கருப்பு ஆடுகளை அழிக்கத் துணிந்தவன்
பூணூலை விடுத்து பா நூலை அணிந்தவன்
உச்சி மீது வான்
இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்றாய்
சாதாரண இடிக்கே
சிலர் வீட்டுக் கதவுகள் மூடப்படுகின்றன.
நீ யாருக்கும் பொன்னாடை போர்த்தவில்லை
உன் பண் ஆடையைப்
போர்த்தி
சமூகத்தை சீரழிக்கும்
சில பன்னாடைகளை
திருத்தியவன் நீ
கலைமகனே தமிழ்த்தாயின் தலைமகனே
மண் வயிற்றில் வாழ்பவனே
மீண்டும் பிறப்பு எடுத்து பெண் வயிற்றில்
தோன்றி வா
நீ எழுத வேண்டிய பல பாக்களை
சமூகத்தை வசமாக்கும் வாசமாக்கும் பூக்களை
ஏந்தி நாட்டின் நிலைமை மாற நீல மை
காத்திருக்கிறது பேனாவில்
புதியதோர் உலகம் படைக்க....
காவிராஜன் பாரதிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கவிஞர் புதுவைக் குமார்
நிறுவனர்
உலகக் கவிஞர்கள் சங்கமம்