எங்கள் பாரதம்
#எங்கள் பாரதம்…!
பெண்ணீயம் சிறந்தது புண்ணியம் தழைத்தது
கண்ணியம் மிருந்தது கனவுகள் பலித்தது
நேர்ம யிருந்தது நீதி நிறைந்தது
வேரெனத் தலைவர்கள் தாங்கிடச் சிறந்தது
எங்கள் பாரதம்… இது எங்கள் பாரதம்..!
அடிமையொழிக்க அவதிகள் கண்டார்
கடமையுடனே யுவதிகள் வெகுண்டார்
வேலுநாச்சியார் ஜான்சி ராணியார்
வாளு மெடுத்தார் வீரம் செறிந்திட
எங்கள் பாரதம்.. இது எங்கள் பாரதம்..!
பொதுநல மிருந்தது மனிதமிருந்தது
எதுவந்த போதும் எதிர்ப்புமிருந்தது
குவித்தக் கரங்களில் கொள்கை யிருந்தது
தவிப்பின்றி எவர்க்கும் தாகம் தணிந்தது
எங்கள் பாரதம்… இது எங்கள் பாரதம்..!
குடிலை அமைத்தார் கொட்டும் மழைக்கு
விடியலே என்றும் வெளிச்சம் விரிந்திட
அணைக்குள் மழையும் தளும்பிக் கிடந்தது
விளைச்சல் நிலத்தில் விளையாடி களித்தது
எங்கள் பாரதம்… இது எங்கள் பாரதம்..!
பாரதி பாவினில் சாட்டை எடுத்தார்
அஹிம்சையில் காந்தி போரும் தொடுத்தார்
அடைந்தோம் சுதந்திரம் வெள்ளையனிடத்தில்
அகப்பட்டுக் கொண்டோம் கொள்ளையரிடத்தில்.
எங்கள் பாரதம்… எங்கும் பார் அதம் .!
பொட்டுக் கட்டிய மாதரைப் போலே
எட்டுத்திக்கும் எங்களின் மாநிலம்
காவியின் கைப்பிடி பொம்மைகள் ஆக
கண்ணீர்க் கதறல் எங்கும் ஒலித்திட
எங்கள் பாரதம்.. எங்கும் பார் அதம்..!
சங்கை முழங்கிய கால மழிந்தது
சங்குகள் ஊதும் காலமு மானது
குற்றம் கண்டோர் குரலை யெழுப்ப
சங்கை அறுத்திடும் காலம் கொடிது
எங்கள் பாரதம்.. எங்கும் பார் அதம்..!
வேட்பாளனுக்கே வாழ்கையும் வசதியும்
வாக்காளனுக்கோ வறுமையும் பசியும்
ஏரோட்டும் வயலும் ஏய்த்துப் பறிக்க
போராட்டந்தானே எங்கும் எதற்கும்
எங்கள் பாரதம்.. எங்கும் பார் அதம்..!
எழுதிக் கவியில் கண்ணீர் விட்டோம்
ஏட்டுக் கூக்குரல் நாட்டுக்குதவா
எழுந்து புறப்படு இடிகுரலெழுப்பி
அழுவோர் நாடு போராட்டத்தோடு
எங்கள் பாரதம்…
எத்தரை செய்திட வா வதம்..!
#சொ. சாந்தி