நாய்குட்டி தந்த முகவரி

நாய்குட்டி தந்த முகவரி

அந்த தெருவுக்கு குடி வந்து ஐந்து வருடங்கள் ஓடியிருக்கலாம், இருந்தும் இதுவரை ராகவன் குடும்பத்துடன் யாரும் பழக்கமாகவில்லை, காரணம் இவனுக்கும் தெரியத்தான் செய்தது. ராகவனின் மனைவி மாலதியிடம் கூட மற்ற பெண்கள் பழக்கம் ஆக முடியவில்லை. மொழி பிரச்சினைதான் காரணமோ என்று இவன் சிந்தித்ததுண்டு, ஹைதராபத்துக்கு மாற்றல் வந்த போதே இவன் தயங்கினான், முன்னே பின்னே தெரியாத இடத்தில் எப்படி இருப்பது? மாலதி தான் அவனை தேற்றினாள், பாவம் இதற்காக அவள் தான் பார்த்து கொண்டிருந்த வேலையை கூட விட்டு விட்டாள். அவள் கொடுத்த தைரியத்தில் ராகவன் இங்கு வந்து அலுவலகத்தில் சேர்ந்தான்.
இரண்டு நாள் அலுவலக தங்கும் விடுதியில் தங்கி கொண்டவன் மூன்றாம் நாள் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளன் வீட்டை பிடித்து கொடுத்தான். வீடு இவனுக்கு பிடித்ததற்கு காரணம், பரபரப்பான அந்த வீதியின் வலது புறமாய் நடுப்பகுதில் பாதையை ஒட்டியே இருந்தது. இரண்டடுக்கு மாடியாய் இருந்தது, கீழ் தளத்தில் இவனும் மேல் தளத்தில் வீட்டு உரிமையாளரும் இருந்தனர். அவர்கள் வீட்டில் கணவன் மனைவி, மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள்.
ராகவன் வெறுமனே அலுவலக பணியாளனின் வாயை பார்த்து கொண்டிருக்க, அவன் தான் வீட்டு உரிமையாளரிடம் அவர்கள் மொழியில் பேசினான். அதன் பின் இவனிடம் தட்டு தடுமாறி விளக்கி அட்வான்ஸ் தொகையை வாங்கி கொடுத்தான். அது மட்டுமில்லாமல் போகும் போது ‘சார்’ சீக்கிரம் சம்சாரத்தை கூட்டிட்டு வந்துட சொல்றாங்க, வயசு புள்ளைங்க இருக்குது, நீங்க தனியாளா இருந்தா கண்டிப்பா கொடுக்க மாட்டாங்க.
இவன் தலையாட்டினான். அந்த வார இறுதியில் கிடைத்த விடுமுறையில் சட்டென கிளம்பி சென்னை வந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு வந்தான். மனைவியை மாமனார் வீட்டில் குழந்தைகளுடன் விட்டு வந்திருந்தான். அன்று இரவு மாமனார் வீட்டில் இருந்து விட்டு ஞாயிறு மாலையே இரயிலில் டிக்கட் புக் செய்து ஏறிக்கொண்டான்.
மறு நாள் பத்து மணிக்கு வந்தவன், மாலதியிடம் அலுவலகம் முடிந்து வந்து எல்லா உதவியும் செய்வதாக சொல்லி விட்டு மதியத்துக்கு மாமனார் வீட்டிலிருந்து கொண்டு வந்த “பார்சல் சாப்பாட்டை” அவளையும், குழந்தைகளையும் சாப்பிட சொல்லி விட்டு வந்து விட்டான்.
மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து மனைவியுடன் கூட இருந்து எல்லா பொருட்களையும் அடுக்கி வைத்து விட்டு ஏழு மணி சுமாருக்கு நால்வரும் அப்படியே அந்த தெரு வழியாக நடந்து சென்றனர்.
இவர்கள் இப்படி போவதை தெருவில் இருப்பவர்கள் பார்த்தார்களே தவிர யாரும் அருகில் வந்து பேச முற்படவில்லை. பெண்கள் கூட தெருவில் அங்கங்கு வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் இவர்களை தலை தூக்கி பார்த்ததுடன் சரி, அவர்கள் பாட்டுக்கு பேச்சுக்களை தொடர ஆரம்பித்து விட்டார்கள்.
மனைவி இவனிடம் என்னாங்க, இவங்க இப்படி இருக்கறாங்க, ஒரு சிரிப்பு கூடவா சிரிச்சு வைக்க கூடாது, இந்நேரம் எங்க ஊரா இருந்து பக்கத்துல வந்து அவங்களா பேசி பழக்கம் வச்சுக்குவாங்க அலுப்புடன் சொன்னாள்.
சரி சரி விடு எல்லாம் நம்ம ஊரு மாதிரி இருக்குமா? அவங்களுக்கு நாம வேற மொழி பேசறவங்கன்னு தயங்கலாம். போக போக எல்லாம் சரியாயிடும் நீ அதெல்லாம் சமாளிச்சுக்குவே, அவள் மனதை இலேசாக்க கொஞ்சம் பெருமையாக அவளை பற்றி சொன்னான்.
அவளும் அதற்கு மேல் பேசவில்லை என்றாலும், முகம் மட்டும் எப்படி இந்த ஊரில் வாழபோகிறோம் என்னும் சிந்தனையில் இருப்பதாக இவனுக்கு தோன்றியது.
அதற்கு பின் ராகவன் கொஞ்சம் கொஞ்சமாக அலுவலகத்தில் வேலிய செய்யும் ஆட்களுடன் நன்கு பழக்கம் செய்து கொண்டான் என்றாலும் வசிக்கும் தெருவில் மட்டும் ஆண்களும் சரி, பெண்களும் சரி இவர்களுடன் பழகுவதற்கு தயக்கம் காட்டுவது போலத்தான் இருந்தது. இதற்கும் மனைவி தனியாக மார்கெட்டுக்கு போனாலும், கடை வீதி போனாலும், எதிர்ப்படும் பெண்கள் கடமைக்கு ஒரு புன்னகை மட்டும், அதுவும் கொஞ்சமாக சிந்த விடுகிறார்கள்.அவ்வளவுதான்.
இதை எல்லாம் இவன் வீட்டுக்கு வந்த பின்னால், மாலதி புலம்பி தள்ளுகிறாள். ஏங்க அஞ்சு வருசம் ஆகப்போகுது, இப்ப கூட பழகறதுக்கு இவ்வளவு யோசிக்கறாங்க, என்ன ஊரோ? என்னவோ, எல்லாம் சரியா போயிடும்மா கவலைப்படாதே, அவளுக்கு ஆறுதல் சொல்லுவான்.
ராகவன் அன்று மாலை வீட்டுக்கு சென்ற பொழுது மாலதி சத்தம் போட்டு கொண்டிருந்தாள் மகன் அகிலனிடம். அவன் கையில் நோஞ்சானாய் ஒரு நாய்க்குட்டி இருந்தது. பாருங்க இவன் பண்ணுன வேலைய, ஸ்கூல் முடிச்சு வரும்போது எங்கிருந்தோ ஒரு நாய்குட்டியை புடிச்சுட்டு வந்துட்டான். கேட்டா அது அவன் பின்னாடியே வந்துச்சுன்னு சொல்றான், போய் அதை இருந்த இடத்துலயே விட்டுட்டு வாடான்னு சொன்னா கேட்கமாட்டேங்கறான்.
இவன் மகனின் முகத்தை பார்க்க “அப்பா ப்ளீஸ்” பாவமா இருந்துச்சுப்பா, அது அங்கிருந்து என் பின்னாடியே வந்துச்சுப்பா, சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அப்பொழுதுதான் தூங்கி எழுந்து வந்த இவனின் தங்கை ராகினி நாய் குட்டியை பார்த்ததும் ஐய்…..நாய்குட்டி, ஆசையாய் அவனிடம் பிடுங்க முயற்சித்தாள்.
ஒருவருக்கு இருவராக அந்த நாய்குட்டியை கொஞ்சவும், நாய் குட்டிக்கு கொஞ்சம் தைரியம் வந்தது போல் துள்ளி குதித்து அவள் கைக்கு ஓடியது.இவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, சரி விடும்மா, குழந்தைக ஆசைப்படுது, சொல்லி விட்டு கை கால் கழுவ பின் புறம் சென்றான்.
சட்டென்று அவன் கையை பிடித்து நிறுத்தியவள் எங்க போறீங்க? அந்த நாய் குட்டியை பார்த்தீங்கல்ல, ஒரே அழுக்கா பார்க்கவே அசிங்கமா இருக்கு, இதைய இப்படி இரண்டு பேரும் கட்டி பிடுச்சிகிட்டிருந்தா..?
அப்பா பளீஸ் நாய்குட்டியை குளிப்பாட்டிடலாம், வாப்பா, இருவரும் அவன் கையை பிடித்து பலவந்தமாக குளியலறைக்கு கூட்டி சென்றனர். தடதடவென்று தண்ணீர் அதன் மீது ஊற்றி சோப்பு நுரையுடன் அதன் மேனி முழுக்க நிறைந்திருக்க, அதுவோ எதுவும் புரியாமால் “லொள் லொள் என்று குரைத்தது.
இருந்தும் அதை எங்கும் திமிறி ஓடி விடாமல் பிடித்து குளிக்க வைத்து அதனை துவட்ட இவர்கள் உபயோகப்படுத்தும் துண்டை எடுக்க முயற்சிக்க மாலதி திட்டி கொண்டே பழைய துணி ஒன்றை கொண்டு வந்து கொடுத்தாள். இவர்கள் அதனை துடைத்து அலங்காரம் செய்வதற்குள் அது போட்ட குரைப்பு சத்தம் கேட்டு மேலிருந்த வீட்டு உரிமையாளரின் பெண்கள் கீழே வந்து எட்டி பார்த்தனர்.
இவர்கள் இருவரும் நாய் குட்டியுடன் போராடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்கள் முகத்தில் புன்னகை, மெல்ல உள்ளே வரலாமா? என்பது போல் இவர்கள் இருவரையும் பார்க்க ராகவனும்,மாலதியும் கண்டு கொள்ளாதவர்கள் போல் உள் புறமாய் திரும்பி நின்று கொண்டார்கள்.
அந்த பெண்கள் மெல்ல உள்ளே நுழைந்து நாய்குட்டியுடன் அவர்களும் இணைந்து கொள்ள அங்கே மொழியில்லாமல் நால்வரும் ஒன்றாய் நாய் குட்டியை கொஞ்ச ஆரம்பித்தபடி பேச ஆரம்பித்தார்கள்.
இப்பொழுதெல்லாம் நாய்குட்டிக்கு இவர்கள் வீட்டிலிருந்து பால் கிடைக்கிறதோ இல்லையோ வீட்டு உரிமையாளர் வீட்டு பெண்கள் கொண்டு வந்து ஊற்றி கொடுக்கிறார்கள். நாய்குட்டி அந்த வீட்டுக்குள் சுற்றி சுற்றி சப்தமிட்டு வந்து கொண்டிருக்க, சில நேரங்களில் மேல் வீட்டு பெண்கள் அதை அவர்கள் வீட்டுக்கு கொண்டு போய் கொஞ்ச ஆரம்பித்து
விட்டார்கள். அவர்கள் வீட்டு கணவன் மனைவி இருவருமே கீழிறங்கி வந்து நாய்குட்டியை பார்த்து தங்களுக்குள் பேசிக்கொள்வதும், இவர்களிடம் அதை பற்றி விசாரிப்பதும் நடந்து கொண்டிருந்தது.
நாய்குட்டி கொஞ்சம் கொஞ்சமாக தனது நட்பை விரிவுபடுத்துவது போல அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளும் இவர்கள் வீட்டுக்கு நாயுடன் விளையாட வந்து விடுகிறார்கள். இப்பொழுது ராகவனோ,மாலதியோ தெருவில் நடக்கும்போது கொஞ்சம் அதிகமாகவே புன்னகைக்க ஆரம்பித்தார்கள், ஒரு சில பெண்கள் நாய்குட்டியை பற்றியும்
அதை பற்றியே தங்களுடைய குழந்தைகளும் பேசி கொண்டிருந்ததை இவர்களிடம் சொன்னார்கள்.
இப்பொழுது இவர்கள் வீட்டை “நாய்குட்டி வீடு” ஒரு சிலர் அடையாளம் காட்ட தொடங்கியிருந்தார்கள்.
ஆறு மாதங்கள் ஓடியிருந்தது. அன்று ராகவன் வீட்டுக்கு வரும் பொழுது வீடு அமைதியாக இருந்தது. அகிலன், ராகினி, இருவரின் கண்களிலும் கண்ணீர், மாலதியின் முகம் கவலையுடன் இருந்தது.
என்னாச்சு? பதட்டத்துடன் கேட்டான், நாய்குட்டிய காணோம், எங்கியோ வெளிய போச்சு,திரும்பி வரவே இல்லை.
ராகவன் அவர்களை சமாதானப்படுத்தி நாய்குட்டியை தேடி கிளம்பினான். அவனுடன் குழந்தைகளும் கிளம்பினார்கள். இவர்கள் எதையோ தேடி செல்வதை பார்த்த அக்கம் பக்கம் ஒரே விசாரிப்புக்கள், ஒரு சிலர் தாங்களும் இவர்களுடன் வந்து நாய்குட்டியை தேட ஆரம்பித்தனர்.
கடைசியில் இவர்கள் பார்த்த பொழுது நாய்குட்டியை யாரோ வண்டியில் அடித்து போட்டு சென்றிருந்ததை கண்டார்கள்.அகிலனுக்கும், ராகினிக்கும் ஒரே அழுகை, ராகவனும் மன வருத்தத்துடன் சற்று தள்ளியிருந்த, கார்ப்பரேசன் இடத்தில் கொண்டு போய் புதைத்தார்கள்.
தெருவில் இருக்கும் பாதிப்பேருக்கு மேல் இவர்களிடம் வந்து ஆறுதல் சொல்லி தேற்றி சென்றார்கள்.
ராகவனும், மாலதி,அகிலன், ராகினி அனைவருமே இன்று தெருவுக்கு நன்கு அடையாளம் தெரிந்த பிரஜையாகிருந்தார்கள். எல்லோருமே இவர்களின் மொழி புரியாவிட்டாலும் அவர்கள் மொழியில் வந்து விசாரித்து நட்புகாட்டி சென்றார்கள். அந்த நாய்குட்டியின் புண்ணியத்தில்.
ஆனாலும் அடுத்த வாரமே, அந்த நட்பை தொடர முடியாமல் இவனுக்கு இங்கிருந்து கேரள மாநிலத்துக்கு மாற்றல் வந்திருப்பதாக அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Jan-25, 11:10 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 16

மேலே