புரியாத புதிர்கள்

" அப்பாட ஒருவழியாக ஏறி அமர்ந்து விட்டோம்! இந்த மாதிரி சன்னலோர இருக்கை கிடைத்து ரொம்ப நாட்களாகி விட்டது. " என்று தனக்கு தானே கூறிக் கொண்டே பேருந்தில் அமர்ந்தார் மாடசாமி.
அவர் இருந்து சற்று நேரம் கூட ஆகவில்லை. பேருந்தில் ஏறிய இரண்டு பெண்கள், " ஐயா, சற்று மாறி அமர்கிறீர்களா? நாங்கள் இருவர் இருக்கிறோம். அமர்ந்துக் கொள்வோம். " என்று கேட்கவும் மாறிவிட்டது பெரியவரின் முகம்.
அதை கண்ட வாசு தான் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழுந்து அந்த பெண்களை அமரச் சொல்லிவிட்டு அந்த பெரியவரின் அருகில் சென்று அமர்ந்தான். அப்போது அந்த பெரியவர் சொன்னார், " பெண்கள் பேருந்தில் ஏறி விட்டாலே, இதான் தொல்லை. ஆண்களை நினைத்த இடத்தில் அமர விடுவதில்லை. இதே அவர்கள் அமர்ந்திருக்கும் பொது நாம் சொன்னால் மாறி உட்காருவதில்லை. அன்னைக்கு அப்படிதான் தம்பி, சமயநல்லூரில் இருந்து பெரியார் வரை கிட்டத் தட்ட பத்து ஆண்கள் நின்று கொண்டு வருகிறோம். முன்னாடி ஒரு இருக்கையில் ஒரு பெண்ணும், பின்னாடி இருக்கையில் ஒரு பெண்ணும்  தனித்தனியே அமர்ந்துக் கொண்டு கடைசிவரை மாறி உட்காரவில்லை. இந்த அளவிற்கு இருக்கு. ஆண்கள் மாறி உட்கார்ந்து பெண்களுக்கு இடஒதுக்கீடு தர வேண்டும். ஆனால், பெண்கள் தருவதில்லை. " என்று வாசுவிடம் கூறினார்
அதற்கு வாசு எதுவும் சொல்லவில்லை. பெரியவரை நோக்கி சிறு புன்னகை மட்டும் பூத்தான். அவரும் வேறு எதுவும் பேசவில்லை. இப்படியே பேருந்து பயணம் தொடர்ந்தது. அப்போது பேருந்து கப்பலூர் சிட்கோ -வைத் தாண்டி  ஒரு கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்றது.
அப்போது கல்லூரி பெண்கள் கூட்டமாக அதிக அளவில் பேருந்தில் ஏற கணநேரத்தில் பேருந்து நிரம்பி வழியத் தொடங்கிற்று. வாசுவை உரசி கொண்டு ஒரு பெண் வந்து நின்றாள். அந்த நேரம் வாசுவை சீட்டில் சரியாக அமர விடாமல் ஒரு ஓரமாக ஒதுங்க வைத்தது. அருகில் நின்ற பெண்ணோ மேலும் தன் சில்மிசன்களை  செய்யத் தொடங்கினாள்.  தன் கால்களால் வாசுவின் கால்களில் உரசிக் கொண்டும், பேருந்து அசைவில் விழுகிற சாக்கில் வாசுவின் மீது இடித்துக் கொண்டும், ஒரு கட்டத்தில் வாசுவின் தோளைப் பிடித்து கொண்டும் என்று வாசுவை உசுப்பேத்தி மகிழ்வது போல் நடந்து கொண்டாள்.
அந்த நேரத்தில் வாசுவிற்குத் தான் இறங்கும் இடம் எப்போது வரும் என்று நினைக்க வைத்தது.  ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தம்பட்டம் அடிக்கும் இந்த சமுதாயத்தில் பெண்களால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமாக மாறி வருகிறது.
ஒரு ஆண் ஒரு பெண் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரவில்லை என்றால் அவனை வேஸ்ட் என்பதும், அவன் ஆண் மகனே இல்லை என்பதும் இங்கு பலரின் எண்ணமாக உள்ளது. பொறுமையாக இருப்பதால் கோழையாகயும் இல்லை.  எதையும் இழக்கப் போவதுமில்லை. நாம் பக்குவம் அடைந்து இருந்தாலும் இங்கு பலருக்கும் அந்த பக்குவம் கிடைப்பதில்லை. இந்த பொருள் தேடும் கல்வியும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதும் இல்லை.
இப்படி எல்லாம் வாசு தனக்குள் எண்ணிக் கொண்டு இருக்கும் போது, யாரோ பிடரியில் அடித்தார் போலிருக்கத் திரும்பிப் பார்த்தான் வாசு. அங்கே ஒரு பெண் திரும்பி பார்த்தபடி நடந்து சென்றாள்.  ஒரு காலத்தில் ஆண்கள் தான் பெண்களை இப்படியெல்லாம் சீண்டுவார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. உண்மையில் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆண்கள் தான் பயந்து நிலைமை புரிந்து சூதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
பிடரியில் அடித்த பெண்ணை என்னவென்று கேட்கவா முடியும்? இங்கு ஆணின் உணர்வுகளை பெண்ணின் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். அதை வாசு கேட்டு ஏதாவது பிரச்சனை செய்திருந்தால் அவள் செய்ததை எல்லாம் அவன் செய்ததாக திருப்பி விடவும் அவள் துணிந்தவள் தான்.
பெண் ஒரு தீபம். கவனமாக கையாள விட்டால் அது நம்மையே எரித்துவிடும்.
இப்படிதான் ஒருமுறை வாசு மதுரையில் இருந்து சின்னமனூருக்கு தேனீ வழியாக பயணம் செய்து கொண்டிருந்தான். சன்னலோர இருக்கை; தேனீ வரை நல்ல உறக்கம் தான். தேனீ புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டு இருந்தது. வாசுவின் தூக்கம் திடிரென களைந்து விட்டது.  தேனீயில் இறங்க வேண்டிய பயணிகள் எல்லாம் இறங்கிக் கொண்டு இருந்தார்கள். மறுமுனையில் ஏறும் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தார்கள். அப்படி ஏறியவர்களில் ஒரு கணவன் மனைவி ஜோடியாக கையில் ஒரு பெண் குழந்தையுடன் ஏறினார்கள். மனைவி இருவர் அமரக்கூடிய இருக்கையில் அமர, கணவனோ," அங்கே உட்காராதே!  இங்கே உட்கார். " என்று மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர சொல்ல, மனைவியும் வாடிய முகத்தோடு மாறி அமர சன்னலோர இருக்கையை கணவன் காத்துக் கொண்டான்.
நடப்பது எல்லாவற்றையும் வாசு கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அப்போது சட்டென இறங்கிச் சென்ற கணவன் வாயில் கொள்ளிக்கட்டையை (பீடியை) வைத்து பற்ற வைத்து இழுக்க, மனைவியின் முகத்தில் விசும்பல் ஏற்ப்பட்டது. அதைக் கண்டு குழந்தையும்," ஏம்மா அழுற? " என்று கேட்டு கொண்டே விசும்பத் தொடங்கிவிட்டது. குழந்தையை சமாதானம் செய்து கொண்டே அவளும் தன் அழுகையை அடக்க முயன்றாள். மீண்டும் கண்ணீர் வர அதை யாரும் கவனிக்காத படி துடைத்துக்கொண்டு, மீண்டும் அழுகை வர, அதைக் கவனித்த வாசுவிற்கு, " அவள் ஏன் அழுகிறாள்? இந்த அளவிற்கு துக்கப்பட அப்படி என்ன நடந்துவிட்டது? " என்று தோன்றியது.
பேருந்தும் புறப்பட கணவனும் ஏறி வந்து மனைவி அருகில் அமர்ந்தான். அது மூன்று பேர் அமரும் இருக்கை என்பதால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே குழந்தையை படுக்க வைத்திருந்தாள் மனைவி. கணவனோ குழந்தையிடம் பேசுவது போல, " இனி என் பேச்சை கேட்காமல் எங்கேயும் போகக் கூடாது. அப்படி போன இருக்கு உனக்கு. " என்று பொடி வைத்து பேச மனைவியின் முகம் மாறியது. " என்னை விட்டு நீ மட்டும் போற என் கிட்ட சொல்லாம? எங்கே ஓடி போறதா திட்டம் போட்டு இருந்த?" என்று சொல்லும் போதே கனவனின் கன்னத்தில் ஒரு அடி விழுந்தது.
பேருந்தில் அத்தனை பேர் இருந்தாலும் யாரும் அதைக் கவனித்ததாக தெரியவில்லை. பேருந்து விரபாண்டியை கடந்து சென்று கொண்டிருந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்த கணவன் மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். " உங்க ஆத்தா பேச்சை கேட்ட சீரழிஞ்சு போவ பார்த்துக்கோ. உன்னையும், என் பிள்ளையையும் பார்க்கணும்நு தோனுச்சு. அதான் வந்தேன். பார்த்துவிட்டேன். நான் போறேன். நீ எப்படியும் போ. " என்று கணவன் சொன்னான். உடனே மனைவி, " எங்க ஆத்தால பற்றி ஏன் பேசுற? அவங்கள பற்றி உன் நாக்கு அழுகிரும். " என்று முனையாக பேச, அது கணவனுக்கு கோபத்தை வரவழைக்க, தன் பிள்ளையைத் தூக்கி தன் மடிமீது வைத்துக் கொண்டு, " என் பிள்ளை என்னோடு இருக்கட்டும். நீ உங்க ஆத்தா கூடவே போய் இருந்துக்கோ. போடி என்ன விட்டு. " என்று மனைவியைத் தூர விரட்டினான். அவளும் கோபித்துக் கொண்டு எழுந்திருக்க, "எங்க போற? உட்காரு. " என்று கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமர செய்தான்.
பேருந்து சீலையப்பட்டியில் சென்று கொண்டு இருந்தது. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. பொது இடங்களில் மற்றவர்களை பாதிக்காமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியவில்லை. படித்ததும் அப்படிதான் இருக்கு. படிக்காததும் அப்படிதான் இருக்கு. இது பேருந்தா? அல்லது குடும்பவியல் நீதிமன்றமா?  என்று சந்தேகம் வரும் அளவுக்கு சம்பவம் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கணவனுக்கு கோபம் அதிகமாகி மனைவியை ஒரு அறை விட்டான். அவ்வளவுதான். வாசுவின் பின் சீட்டில் அமர்ந்து இருந்த பெரியவருக்கு கோபம் வந்து விட்டது.
"கன்னத்தில் அடிக்கிறான் கோழை பயல். அவன் குடும்பச் சண்டை என்றால் அவன் வீட்டில் வைத்து கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும் ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து அடிப்பானோ? " என்று பொங்கினார். " யாருடா? இந்த பொங்கு பொங்குறாரே! இன்று பெரிய சம்பவம் உறுதி," என்று எண்ணியவாறு வாசு திரும்பிப் பார்த்தான்.
" யாரு  என்ன பண்ணா உங்களுக்கென்ன அப்பா? இவ்வளவு பேருக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்கு? " என்று தன் தந்தையின் கோபத்திற்கு  முட்டுக்கட்டை போட்டாள் அவருடைய மகள். சின்னமனூரில் பேருந்து நின்றது. அந்த பெரியவரும் தன் மகளுடன் இறங்கிவிட்டார். வாசுவும் இறங்கிவிட்டான். பேருந்தும் நகர்ந்தது. என்னவாயிற்றோ அந்தக் கண்ணீர் கதை?
இப்போது கூட அந்த நிகழ்வு வாசுவின் கண் முன் வந்து போனது. பெண் ஆணை அடித்தால் யாரும் கேட்கப் போவதில்லை. அதே நேரம் ஒரு ஆண் பெண்ணை அடித்து விட்டால், அது சமுகத்தில் பெரிய குற்றமாகக் கருதப்படும்.
இதனாலேயே வாசு பெண்கள் விசயத்தில் மிக ஜாக்கிரதையாகவே இருப்பான்.  அந்த ஜாக்கிரதை பல முறை அவனை காப்பாற்றி இருக்கிறது.
சமத்துவம், சம நீதி, சமூக நீதி  எல்லாம் ஓட்டு பொறுக்கிகள் பயன்படுத்தும் விளம்பரச் சொல்லாடல்கள் மட்டுமே.
கோபுரத்தில் பிறந்தால் கோபுரத்தை ஆளலாம். குடிசையில் பிறந்தால் கடைசிவரை பிச்சை தான் எடுக்க வேண்டும். அது தான் நடைமுறை. பெரிய பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தாலும், வாயும் வயிறும் தனிதனித்தான். ஒரு கஷ்டம் என்று வரும் போது ஆறுதல் சொல்ல கூட யாரும் இருக்க மாட்டீர்கள் என்றால் அப்படி எந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்? இன்னும் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
கணவன், மனைவி என்றால் என்ன அர்த்தம்? கணவனுக்கு வரும் துன்பத்தில் மனைவிக்கு பங்கில்லையா? அல்லது மனைவிக்கு வரும் துன்பத்தில் கணவனுக்கு தான் பங்கில்லையா? ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், துணையாகவும் வாழவே குடும்ப அமைப்பு உருவானது. ஆனால், இங்கு நடப்பதோ தற்காலிக இன்பங்களுக்காக பெரிய, பெரிய முடிவுகளை மிகச் சாதாரணமாக எடுத்து விடுகிறார்கள். கடைசியில் கண்ணீரும், கம்பலையுமாய் காலத்தை ஓட்டுகிறார்கள். ஆனால், எத்தனை நாட்களுக்கு?
இதன் மூலம் யாரையும் நாம் தீர்மானிக்கவில்லை. மாற்றம் வேண்டும் என்றால் நாம் மாற வேண்டும். நாம் மாற வேண்டும் என்றால் நம் சிந்தனையில் மாற்றம் பிறக்க வேண்டும். சிந்தியுங்கள் மக்களே!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Jul-25, 9:01 am)
பார்வை : 14

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே