ஒரு நாள் ஒரே நாள்

ஒரு நாள் ஒரே நாள்

நித்திரை ‘ராமபத்ரனை’ விடியற்காலை ஐந்து மணிக்கு மேலும் இழுத்து சென்று கொண்டிருந்தது. ‘கனவோ’ அவரும் மனைவி காமேசுவரியும் ஒரு மலைப்பகுதியில் நீர் வீழ்ச்சி அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள். அதன் சாரல் இவர்கள் மேல் பட்டு அதன் சில்லிட்ட உணர்வில் உடலை சிலுப்பியபடி இரசித்து பேசி கொண்டிருக்கிறார்கள்
ஏங்க, ஏங்க, எழுந்திருங்க, மணி அஞ்சாச்சு…!
நான்கைந்து முறை ஒலித்த குரல் அவர் காதையும், கை அவரது உடலையும் அசைத்த பின்பே அவருக்கு உணர்வு வந்தது. சே…இவ தொந்தரவு தாங்க முடியலை, அலுப்புடன் மனைவியை சபித்து கொண்டே, திரும்பி அவள் முகத்தை பார்க்க இவளா நம்மை எழுப்பினாள்? என்னும் நிலைமையில் ஆழ்ந்த உறக்கத்திற்கு போயிருந்தாள்.
சே..இவ என்ன மனுசியா? இவ மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம், நான் தூங்குனா என்ன? மனதிற்குள் கேள்வி எழுந்தாலும் என்ன செய்வது? விழித்த தூக்கம் இனி திரும்ப கிடைக்குமா? வெறுப்புடன் கழிப்பறையை நோக்கி சென்றார்.
பதினைந்து நிமிடத்தில் எல்லா கடமைகளையும் முடித்து விட்டு “வாக்கிங்” செல்வதற்காக உடைகளை மாற்றி கொண்டு சத்தமில்லாமல் முன் கதவை திறந்தார்.
கிளம்பறதுக்கு முன்னாடி உங்க ‘சைடு டேபிள்ள’ பாருங்க, பையும், காசும் வச்சிருக்கேன், இன்னைக்கும் நாளைக்கும் தேவையான காய்கறிகளை வாங்கிட்டு வந்துடுங்க. ‘முத்தலும் தொத்தலும்’ இல்லாம வாங்கியாரணும். குரலில் கொஞ்சம் காரம்.
அட…சண்டாளி..இவ உண்மையிலேயே தூங்கறாளா? இல்லை என்னை தினம் தினம் இப்படி வாட்டி சித்ரவதை பண்ணுறாளா? மனதுக்குள் மனைவியை திட்டியபடி கதவை மெல்ல திரும்பி சாத்தி விட்டு பக்கத்து வீட்டு பரந்தாமனை அழைப்பதற்காக சென்றார். தயாராக பரந்தாமன் நின்று கொண்டிருந்தார்.
என்ன ராமபத்ரன், கையிலே பை, அப்படியே ஷாப்பிங்குமா?
உமக்கு கிண்டலா இருக்குது ஓய், தினம் தினம் இப்படி உசிரை எடுக்கறா? ஒரு நாளாவது சுகமான தூக்கம் உண்டா? வீட்டுல பாதி வேலைய என்னையத் தான் வாங்கறா? முணங்கினார்.
விடுமய்யா, மனைவின்னா இப்படி இருக்கணும்.
முறைத்தார், உமக்கு என்ன இரண்டு பொண்ணுங்க, அதுல ஒரு பொண்ணு கல்யாணமாகி வெளியூருல இருந்தாலும் ஒரு பொண்ணை மாப்பிள்ளையோடு மடக்கி உன் வீட்டுல வச்சுகிட்ட, அதுனால நீ தனிகாட்டு ராசா, என்னைய சொல்லும் இரண்டும் பொண்ணுங்கதான் என்ன பிரயோசனம் எல்லாம் குழந்தை குடும்பமுன்னு வெளியூரு பறந்துடுச்சுங்க.
சும்மா புலம்பாதேயும், வா வா நடக்கலாம். அதன் பின்னர் அவர்கள் மெளனமாய் அவர்களது காலனியை சுற்றி நடக்க ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆகியிருந்தது, ராமபத்ரன் களைத்து வீடு வந்த போது மனைவி சுவாரசியமாய் பேப்பர் படித்து கொண்டிருந்ததை பார்க்கவும், மனசுக்குள் எரிச்சல் புகுந்தது. முதல்ல பேப்பர் வந்தவுடனே இவ படிச்சுடணும், மனதுக்குள் திட்டியபடியே, வெளியே முன்புறம் இருந்த குழாயில் காலை கழுவிக்கொண்டு உள்ளே வந்து அருகில் இருந்த நாற்காலியில் கையோடு கொண்டு வந்த “காய்கறி பையை” வைத்தார்.
பேப்பரை படித்து கொண்டே காமேசுவரி “ஐயா என்ன இங்கயே பையை வச்சுட்டா” உள்ளே யாரு கொண்டு போய் வைக்கிறது? கொண்டு போய் சமையல் ரூம்ல வச்சுட்டு, அப்படியே பாலை அடுப்புல வச்சிருக்கேன். இரண்டு பேருக்கும் சூடா காப்பி போட்டு எடுத்துட்டு வந்துடுங்க.
அந்த காலை வேலையில் ராமபத்ரனுக்கு வந்த கோபம் சொல்லி மாளாது, அவங்க அவங்க வீட்டுல சம்சாரங்க எப்படி இருக்குதுங்க, என் வீட்டுல எல்லாமே தலைகீழா நடக்குது, மனதுக்குள் மனைவியை கண்டபடி திட்டினார். “ஆபிசுல அவனவன் என்னை கண்டு பயப்படறாண்’ நான் இவ கிட்ட வந்து மாட்டிகிட்டு அல்லாடறதை பார்த்தா என்ன நினைப்பாங்க? காலையில் வந்த கனவில் மனைவியுடன் அந்த நீர்வீழ்ச்சியின் அருகில் மகிழ்ச்சியுடன் நின்று பேசிக்கொண்டிருந்ததை நினைத்து இப்பொழுது வருந்தினார்.
கையில் “லஞ்ச் கேரியர்’ வைத்திருந்த பையை சுமந்தபடியே, வீட்டு வாசல் படியை விட்டு வெளியே வந்தவர் திரும்பி பார்க்க, வாசலில் அவரை வழியனுப்ப வந்த காமேசுவரி, கொஞ்ச சீக்கிரம் நடைய வையுங்க, எப்ப பார்த்தாலும் மச மசன்னு, மெதுவா நடந்துட்டு காலனி முன்னாடி வந்து நிக்கற பஸ்ஸூ நான் போறதுக்குள்ள போயிடுச்சுன்னு புலம்பறது.
அவள் கொஞ்சம் சத்தமாகத்தான் பேசியதாக இருந்தது. அக்கம் பக்கம் பார்த்தார். ஓரிருவர் அவரை தாண்டி சென்றும் வந்து கொண்டிருந்தார்கள். இவருக்கு அவமானமாக இருந்தது. ஐம்பத்து எட்டு வயது மனிதன், இன்னும் இரண்டு வருடமே இருக்கிறது, ஓய்வு பெற, எனக்கு தெரியாதா? பஸ்ஸுக்கு எப்ப போகணும்னு? மனதுக்குள் திட்டியபடி இருந்தாலும் நடையை கொஞ்சம் வேகப்படுத்தத்தான் செய்தார்.
இவள் திருந்தவே மாட்டாளா? அங்கங்க எவ்வளவு அனுசரணையா, நடந்துக்கறாங்க, இவ என்னை ஒரு வேலைக்காரனாட்டமா “ட்ரீட்” பண்ணறா? ஆபிசுலயாவது கொஞ்சம் ரீலீப்” கிடைக்குமான்னு பார்த்தா அங்கயும் ஒரே “ப்ரஷர்” எப்படா இவனை ஏதாவது ஒண்ணுல சிக்கவைக்கறதுன்னே இருக்கானுங்க. இதனாலயே இரண்டு மாசத்துக்கொருக்கா டாக்டரை பார்க்க வேண்டி இருக்கு, மனதுக்குள் நொந்து கொண்டார்.
அலுவலகத்தில் அவர் எதிர்பார்த்தபடியே எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருந்தது. பக்கத்து மேசையின் அமர்ந்திருந்த விமலா கிளார்க் என்ன சார் இன்னைக்கு ஒரே சந்தோசமா வர்றமாதிரி இருக்கு.
இவருக்கு அந்த வெயிலில் பஸ்ஸை விட்டு இறங்கி பத்து நிமிடம் வேகு வேகுவென்று நடந்து அலுவலகத்துக்குள் நுழைகிறார். இரு சக்கரவாகனம் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு சமயமும் நினைப்பார். எங்க வாங்கற சம்பளமும் செலவும் சரியாத்தான் போகுது. மருந்து மாத்திரை அது ஒரு பக்கம், பேரன், பேத்திகளுக்கு ஏதாவது ஒரு செலவை காட்டி பணத்தை வாங்கிக்கறாங்க, என்னதான் செய்யறது? என்று நினைத்தாலும், மனம் மற்றொரு பக்கம் யாருக்காக செய்யறோம்? இன்னும் இரண்டு வருசம் செய்யமுடியும்? அதுக்கப்புறம் கிடைக்கற ‘பென்சன்’ எங்க இரண்டு பேருக்கே போதுமாய் இருக்கும். அதனாலதான் சம்பாதிக்கறப்பவே பொண்ணுங்க, என்கிட்ட கறந்துகிறாங்க. இப்படியாக நினைத்து பொங்கி வந்த வேர்வையை துடைப்பதற்குள் விமலா கிளார்க் இப்படி கேட்டது இன்னும் எரிச்சலை கிளப்பியது.
விமலா கிளார்க்குக்கும் அவர் எரிச்சல்பட்டுவிட்டார் என்பது புரிந்தது. அதுதானே தேவை, மனுசன் வர்ற வருமானத்தை தடுக்கறமாதிரி மேசைக்கு வர்ற பைலை பத்து பைசா வாங்காம ‘அப்ரூவல்’ பண்ணுனா கோபம் வருமா வராதா? இவரும் சம்பாதிக்க மாட்டாரு, மத்தவங்க கிட்டையும் தள்ளி விடமாட்டாரு.
“நீங்க வேற” வார்த்தையில் முடித்து கொண்ட ராமபத்ரன் கால்சராய் பையில் இருந்த “கர்சீப்பை” எடுத்து முகம் கைகளை துடைத்து விட்டு கொண்டு வந்த “டிபன் பையையும்”ஓரமாய் வைத்துவிட்டு வழக்கமான பணிகளை செய்ய ஆரம்பித்தார்.
பதினொரு மணி அளவில் கொண்டு வந்த பையை திறந்து பார்த்தார். அதில் அந்த நேரத்திற்கு சாப்பிடுவதற்கு பழங்களை கத்தரித்து வைத்திருந்தாள் காமேசுவரி. அதை மெல்ல எடுத்து திறந்தவர் ஒவ்வொன்றாய் சுவைத்து சாப்பிட்டார்.
என்ன சார் காண்டீனுக்கு வரலையா? அடுத்த மேசையில் இருந்த கார்த்திகேயன் கேட்டார்.
இல்லை சார் “ல்ஞ்சுக்கு” கேண்டீன் போயிக்கலாம், பதில் சொல்லிவிட்டு பழங்கள் இருந்த பாக்சை” மூடி வைத்து விட்டு பையில் இருந்த குடிதண்ணீர் பிளாஸ்கை எடுத்து இரண்டு மடக்கு குடித்து விட்டு மீண்டும் பைக்குள் வைத்தார்.
மாலை வீடு வந்த போது கொஞ்சம் இருட்டியிருந்தது. காமேசுவரி வைத்து கொடுத்த சுண்டலையும், கூடவே கொடுத்த சூடான காப்பியும் களைப்புக்கு இதமாக இருந்தது.
‘அக்கடாவென’ பதினைந்து நிமிடங்கள் உட்கார்ந்திருப்பார். “ஏங்க கொஞ்சம் உள்ள வாங்க” காமேசுவரியின் குரல் கேட்க எரிச்சலாய் சமையலைறைக்குள் நுழைந்தார். இந்தாங்க பாத்திரம் பத்து சப்பாத்திக்குள்ள வர்றமாதிரி மாவை பிசைஞ்சு வையுங்க. அப்புறம் போய் உட்கார்ந்து டிவி பாருங்க, அரை மணி நேரம் கழிச்சு வந்து சுட்டு எடுங்க, நான் அதுக்குள்ள மாவை தேச்சு வைக்கறேன்.
இவ என்ன என்னை மனுசனா நினைக்கிறாளா? இல்லை மாடா நினைக்கிறாளா? அவருக்கு தன்னுடைய மகள்கள் இருந்த போது அவர் இருந்த இருப்பென்ன? மூன்று பேரில் யாராவது ஒருவர் இவருக்கு தேவைப்பட்ட பணிகளை செய்து கொடுத்து விடுவார்கள். காமேசுவரி செய்வாளோ இல்லையோ மகள்கள் இரண்டு பேரும் செய்து கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கு கல்யாணம் ஆகி வெளியே போனார்களோ இல்லையோ இவள் என்னை மட்டும் இப்படி ‘சாறாக’ பிழிகிறாள். மனதுக்குள் சுய இரக்கம் தன்மேலேயே எழுந்தாலும் மாவு பிசையும் வேலையை விட்டு விடவில்லை. அதையும் செய்து விட்டே முன் அறைக்கு வந்தார். இருந்தாலும் நிம்மதியாய் எதையும் பார்க்க முடியாது, காரணம் எப்பொழுது வேண்டுமானாலும் கூப்பிடலாம்.
மறுநாள் மணி எவ்வளவு இருக்கும்? மனம் கேள்வியை எழுப்பினாலும் நேற்று கண்ட கனவு போல மகிழ்ச்சியாக இல்லாமல் அவர் எங்கோ தனியாக அலைந்து கொண்டிருப்பதாகவும், பாதாளம் ஒன்றில் “தடாலென” விழுந்து விட்டதாகவும் கனவை கண்டார். திடுக்கிட்டு விழித்து பார்க்க… இது என்ன இடம்? ஒன்றும் புரியாமல் விழித்தார். “டொக்” டொக்’ கதவை தட்டிவிட்டு நர்ஸ் கையில் ஒரு தட்டுடன் மருந்துகளுடன் நிற்கவும் திகைத்தார்.
சார் கொஞ்சம் வெளிய நிக்கறீங்களா? உங்க வொய்ப்புக்கு மருந்து கொடுத்து கொஞ்சம் “ரெப்ரஸ்” பண்ணனும்.
வொய்ப்புக்கா? அப்பொழுதுதான் அவருக்கு ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்தது. இரவு இருவரும் படுக்க சென்றது, பேசிகொண்டே இருந்த காமேசுவரி திடீரென மயங்கி விழ, இவர் அதிர்ச்சியாகி அவளை படுக்க வைத்து விட்டு உடனே பக்கத்து ஹாஸ்பிடல் ஆம்புலன்சுக்கு போன் செய்து விட்டு பக்கத்து வீட்டு பரந்தாமனை அழைத்தது. அவரும் மற்ற அக்கம்பக்கத்தார்கள் ஓடி வந்து இவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் கூடவே வந்து பயம் ஒன்றுமில்லை என்று டாக்டர்கள் சொன்ன பின்னாலேயே எதற்கும் ஒரு “நைட்டு” தங்கி பார்த்துட்டு போகட்டும் என்று மருத்துவர் சொன்னவுடன் மற்றவர்கள் “எதுனாலும் கூப்புடுங்க” ஆறுதல் படுத்தி விட்டு சென்றது எல்லாமே ஞாபகத்துக்கு வந்தது.
கடவுளே காமேசுவரியை காப்பாத்து, அவளுக்கு ஒண்ணுமிருக்க கூடாது, கடவுளை வேண்டி கொண்டார். தான் வேலை தேடி அலைந்த காலத்திலிருந்து தன்னை நம்பி இவள் அப்பா பெண்ணை கொடுத்தது முதல் முப்பது வருட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம், அவளோடு.
வெளியே வந்த நர்சிடம் எப்படி இருக்காங்க? பதட்டத்துடன் கேட்க இன்னும் கான்ஷியஸ் வரலை ஆனா மூச்சு நார்மலாத்தான் இருக்கு, பயப்படாதீங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர்ஸ் “ரவுண்ட்ஸ்” வந்துடுவாரு, அப்புறம் சொல்லுவாரு.
நர்ஸ் சொல்லிவிட்டு சென்றபின்னால் அவர் மெளனமாய் உள்ளே வந்து அவள் முகத்தை பார்க்க, அவள் அயர்ந்து தூங்குவது போல் படுத்து கிடந்தாள். மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. தன்னை ஏதாவது சொல்லி அழைத்து வேலை சொல்ல மாட்டாளா? அவர் மனம் பரிதவித்தது.
காலை ஏழரை மணிக்கெல்லாம் டாக்டர் “ரவுண்ட்ஸ்” வந்து விட்டார். இவரை வெளியே அனுப்பிவிட்டு உள்ளே சென்ற டாக்டர் அவருடன் இருந்த இரண்டு மூன்று நர்சுகளுடன் ஏதோ பேசி சிரித்து கொண்டிருந்தது கேட்டது.
வெளியே நின்றிருந்த இவருக்கு மகா எரிச்சல், மனைவியின் நிலைமை இப்படி இருக்க அவள் அருகில் நின்று கொண்டு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? அதுவும் டாக்டரும், நர்சுகளுக்கும்.
எரிச்சலாய் மூடியிருந்த கதவையே பார்த்தபடி இருக்க, கதவை திறந்த டாக்டரின் முகம் உள்ள இருக்கறது உங்க சம்சாரமா? குரலில் சற்று கேலி தெரிந்தது போல் இருந்தது.
மனதுக்கு அது தெரிந்தாலும் என்ன செய்வது? தலையாட்டினார்.
இந்நேரத்துக்கு காப்பி போடற வேலை உங்களுடையதா?
திகைத்தவருக்கு ஒன்றும் புரியவில்லை, என்றாலும் “ஆம்” தலையசைத்தார்.
போங்க உள்ளே அந்தம்மா “வாக்கிங்” போனாரா இந்த ஆளுன்னு கேட்டுட்டு இன்னும் வரலை, நான் காப்பி சாப்பிடற நேரமாசுன்னு சொல்லிட்டிருக்காங்க. சிரித்தபடியே டாக்டரும், நர்சுகளும் அங்கிருந்து நகர்ந்து சென்றவர்கள், டாக்டர் திடீரென திரும்பி இன்னைக்கு ‘டிஸ்சார்ஜ்’ பண்ணி கூட்டிட்டு போயிருங்க, அவங்களுக்கு ஒண்ணுமில்லை, சாதாரண மயக்கம்தான், அவங்களை வீட்டுல விட்டுட்டு நிம்மதியா வீட்டு வேலை செஞ்சு கொடுங்க, சிரித்தபடியே நகர்ந்து சென்று விட்டார்.
மனமெல்லாம் மகிழ்ச்சியுடன் அறைக்குள் நுழைந்தபோது காமேசுவரி “ஏங்க என்னாச்சு எனக்கு? இந்தாங்க இந்த பிளாஸ்கை எடுத்துட்டு போயி காப்பி வாங்கிட்டு வாங்க. சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்.
காமேசுவரியின் இந்த விரட்டல், அவரின் மனதுக்குள் பெரும் மகிழ்ச்சியையும், சந்தோசத்தையுமே கொடுத்து கொண்டிருக்க, தன் வயதையும் மீறி பிளாஸ்கை எடுத்து கொண்டு எதிரில் இருந்த “காண்டீனுக்கு” விரைந்தார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Jul-25, 2:59 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : oru naal ore naal
பார்வை : 33

மேலே