சிடுமூஞ்சி
சிடுமூஞ்சி
சூசை மர நிழலில் உட்கார்ந்து அவனது அலுவலக அதிகாரி ஜோசப் சாரிடம் அன்பை பற்றி கேட்டுகொண்டிருந்தான். கிறிஸ்து அன்பை பற்றி எவ்வளவு சொல்லியிடுக்கிறது, சக மனிதனிடம் அன்பை காட்டு, அவரின் பேச்சில் அப்படியே உருகி விட்டான். அதற்குள் மதிய உணவு இடைவேலை முடிந்து விட்டதை அறிவிக்கும் படியாக வெளியே சென்றிருந்த பணியாளர்கள் ஒவ்வொருவராய் உள்ளே அவர ஆரம்பித்தனர்.
நேரமாகிவிட்டது என்பதை உணர்த்த ஜோசப் சார் கைக்கடிகாரத்தை பார்த்து நேரமாகி விட்டது, நான் செல்கிறேன், என்று அவசரமாய் அவரது மேசைக்கு சென்றார்.
அவர் சென்ற பின் தான் சூசைக்கு தான் எதற்கு ஜோசப் சாரை பார்க்க வந்தோம் என்பது ஞாபகம் வந்தது. அவனது அத்தை தன் பெண்ணை கல்லூரியில் சேர்க்க பத்தாயிரம் வேண்டும் என்று கேட்டிருந்தாள். இவனிடம் சுத்தமாக பணம் இல்லை. அது மட்டுமில்லை இப்பொழுதுதான் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அரசாங்க மருத்துவமனை என்றாலும் காசு செலவாகாமல் இருக்குமா? கையில் இருந்த எல்லா சேமிப்பும் காலியாகி விட்டது.
அரசு சார்ந்த அலுவலகத்தில் இவன் அலுவலக உதியாளராக தற்காலிக ஊழியனாகத்தான் வேலை செய்கிறான்.அதனால் யார் இவனை நம்பி இவ்வளவு பணம் கொடுப்பார்கள்/
அலுவலகத்தில் ஹெட் கிளார்க் ஜோசப் சார் எப்பொழுதும் இவனிடம் அன்பாக பேசுவார், அதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலுவலகத்தில் மதிய உணவை முடித்து விட்டு அங்கங்கு மர நிழல்களில், அல்லது காம்பவுண்டு கேட்டு அருகே நின்று சிகரெட்டை பிடித்துவிட்டு உள்ளே வருவார்கள். இவன் ஜோசப் சார் சாப்பிடும் வரை காத்திருந்தவன், அவர் மர நிழலில் வந்து நின்று ஒரு சிகரெட்டை பற்றவைத்து சுகமாய் இழுத்து கொண்டிருந்தார்.
சார், என்ன சூசை? எனக்கு ஒரு உதவி செய்யணும் சார், தயங்கினான்.
சொல்லு சூசை
எங்க அத்தையோட பொண்ணை இந்த வருசம் காலேஜுல சேர்க்கப்போறாங்க, அதுக்கு கொஞ்சம் பணமுடையா இருக்கு, நீங்க கொஞ்சம் கொடுத்து உதவுனீங்கன்னா..
ம்…பணம் எங்கிட்ட இல்லை, ஆமா எவ்வளவு தேவைப்படும்?
உற்சாகமானான் சூசை, ஒரு பத்தாயிரம் இருந்தா போதும் சார்
ம்…பார்க்கலாம், உங்க அத்தைன்னா உனக்கு ரொம்ப புடிக்குமா?
ரொம்ப புடிக்கும் சார், சின்ன வயசுலயிருந்து என்னை எடுத்து வளர்த்துனவங்க சார், அவங்களுக்கு என் மேல ரொம்ப அன்பு.
அப்படித்தான் இருக்கணும், நம்முடைய வேதத்துல என்ன சொல்லுது? அன்பு செய் அப்படீங்குதா இல்லையா?
வேறு வழியின்றி தலையாட்டினான். அதன் பின் ஆரம்பித்தார் அன்பை பற்றி அவர் போன பின்னால்தான் சூசை யோசித்தான், கொடுக்கறேன்னு சொன்னாரா, இல்லையின்னு சொன்னாரா? மண்டையை தட்டியபடியே உள்ளே வந்தான்.
சூசை..இங்க வா,
நான்காவது மேசை நாராயணசாமிதான் கூப்பிடுகிறார், ரொம்ப நல்ல மனுசன், தெய்வ பக்தியுடன் தான் எப்பொழுதும் இருப்பார். ஏதாவது ஒரு கடவுள் பெயரை அவர் வாய் எப்பொழுதும் முணுமுணுத்து கொண்டிருக்கும். வருசம் ஒரு முறை பக்தி பிரயாணமாக எங்காவது சென்று வருவார். அன்பாய் அவனை அழைத்து பிரசாதத்தை கொடுப்பார். கிறிஸ்துவனாய் இருந்தாலும் அவர் மனம் புண்பட கூடாதென்னும் எண்ணத்தில் பயபக்தியாய் வாங்கி கொள்வான். அதனால் இவனை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
இவரிடம் கேட்டு பார்த்தால் என்ன? கண்டிப்பாய் கொடுப்பார்
சார் அருகில் சென்றவனிடம் ஒரு கவரை கொடுத்து இதை அஞ்சாவது டேபிள்ள இருக்கற கார்த்திக் சார் கிட்ட கொடுத்துடு.
சரிங்க சார், வாங்கி கொண்டவன் சார் எனக்கு ஒரு உதவி செய்யணும்..
சொல்லுப்பா என்ன உதவி?
ஜோசப் சாரிடம் சொன்ன அதே பல்லவியை இவரிடமும் பாடினான். அடடா, இப்பத்தான் திருப்பதி போறதுக்கு “புக் பண்ணிட்டு வந்திருக்கேன், கொஞ்சம் முன்னாடி கேட்டிருந்தா அதை கூட ‘கேன்சல்’ பண்ணிட்டு உனக்கு கொடுத்திருப்பேன்.
பரவாயில்லைங்க சார், இவ்வளவு தூரம் சொன்னதே போதும் சூசை ஏமாற்றத்தை மனசில் வைத்துக்கொண்டு அஞ்சாவது டேபில் கார்த்திக் சாரை பார்க்க போனான்.
அன்று மாலை அலுவலகம் முடிந்து எல்லோரும் சென்ற பின்னால், மானேஜர் மட்டும் அவரது அறையில் இருந்தார். அவர் வெளியே சென்றால்தான் இவன் அலுவலகத்தை பூட்ட வேண்டும், உள்ளே போய் கேட்க முடியாது, சரியான சிடுமூஞ்சி, கண்டபடி பேசிவிடுவார். அதனால் வெளியில் காத்திருந்தான்.
ஏழு மணிக்கு மேல்தான் வெளியில் வந்தார். இவனை பார்த்தவுடன், முறைத்தவர், அறிவிருக்கா உனக்கு? பாரு எல்லா பேனும் சுத்திகிட்டிருக்கு, லைட்டும் எரியுது, உன்னையெல்லாம் வேலையில வச்சுக்கறதே வேஸ்ட், கண்டபடி திட்டி விட்டு அங்கிருந்து வேகமாக சென்றார்.
திகைத்து போனான் சூசை, போனவாரம் இதே போல் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு உட்கார்ந்தவனை இதே போல் திட்டி ஏண்டா நான் ஒருத்தன் இருக்கற வறைக்கும் ஆபிசை வெளிச்சமா வச்சிருக்கலாமில்லை, உன்னையெல்லாம், திட்டியபடியே அங்கிருந்து சென்றார்.
சூசைக்கு மனசு கொதித்தது. இவ்வளவு நேரம் காத்திருந்தது கூட ‘அயர்வு’ தரவில்லை. இப்படி காத்திருந்தும் இவரிடம் பேச்சு வாங்கவேண்டி இருந்ததே. சரியான சாவு கிராக்கி, கிறுக்கன், சிடுமூஞ்சி..மனதுக்குள் திட்டி தீர்த்தான்
ஜோசப் சாரை நினைத்துக்கொண்டான். என்ன மனுசன்? அவர் சொன்னது மாதிரி எது நடந்தாலும் அமைதியா போயிடுவோம். சொன்ன அறிவுரைகளை நினைத்துக்கொண்டான்.
மறு நாள் காலை அலுவலகம் பரபரப்பாக இருந்தது. பத்து மணி ஆகியிருந்தது, மானேஜரை இன்னும் காணவில்லை. நேற்று வரவு வைக்கப்பட்ட பணம் மானேஜரின் பீரோ அறையில் இருந்தது. கேசியரிடம் அதற்கான சாவியும் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் பணத்தை எடுத்து வந்தார் கேஷியர்.
நேற்று இவர் வைத்த பணம்தான், எண்ணிப்பார்த்தார், ஏதோ குறைவது போல இருந்தது. மீண்டும் மீண்டும் எண்ணினார்,
என்ன சார் பணத்தை எண்ணி எண்ணி பார்த்துகிட்டிருக்கீங்க? பக்கத்து மேசையில் இருந்து கிளார்க் மேகலை கேட்டாள்
நேத்து வச்ச பணத்துல பத்தாயிரம் குறையுது, அதுதான் யோசிச்சுகிட்டிருக்கேன். சரியாத்தான எண்ணி வச்சேன்.
அவ்வளவுதான் அலுவலகமே பரபரப்பானது, ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள்.
ஜோசப் சார் மெல்ல நாராயணசாமியின் காதில் ஏதோ சொன்னார், இவரும் தலையாட்டினார். இருவரும் தங்களுக்குள் குரல் தாழ்த்தி பேசிக்கொண்டனர்.
இது எதுவும் தெரியாமல் வெளியே ஒரு கிளார்க்குக்காக சிகரெட் பாக்கெட் வாங்க சென்ற சூசை உள்ளே வந்தான்.
ஜோசப் சார் அவனை அழைத்தார். என்ன சார்? நேத்து எங்கிட்ட பணம் கேட்டியில்லை?
ஆமாங்க சார், பத்தாயிரம் கேட்டேன், கிடைசிருச்சா சார், ரொம்ப தாங்க்ஸ் சார்.
இரு இரு நாராயணசாமிகிட்டயும் கேட்டியா?
ஆமாங்க சார், ஆனா கோயிலுக்கு போறதுனால பணம் இல்லைன்னுட்டாரு.
இவர்களை சுற்றி நின்று பேசுவதை கேட்டு கொண்டிருந்த எல்லோர் முகத்தையும் ஒரு பார்வை சுற்றி பார்த்தார். இப்ப என்ன சொல்றீங்க? என்று கேட்பது போலிருந்தது அவரது பார்வை.
நாராயணசாமி எதுக்கு இப்படி பண்ணுனே சூசை?
ஏன்ன சார் பண்ணுனேன்?
“கேஷ் பேக்குல” இருந்து பத்தாயிரம் ரூபாய் குறையுது,
அதுக்கு நான் என்ன சார் பண்னனும்?
நீதான் அந்த பணத்தை எடுத்திருக்கணும், ஒழுங்கா கொண்டு வந்து கொடுத்துட்டா போலீசுக்கு போகாம அப்படியே உன்னை அனுப்பிச்சிடுவோம்.
சூசைக்கு வந்ததே கோபம் என்ன விளையாடறீங்களா? உங்க ஆபிஸ் பணத்தை நான் எப்படி எடுத்திருக்க முடியும்? அதுவும் எங்க பணம் வச்சிருப்பீங்கன்னு தெரியாதப்ப.
இந்த வாதமும் சரியாகப்பாட்டாலும் ஜோசப் சாரும், நாராயணசாமியும் விடுவதாக இல்லை, குற்றவாளியை அவர்கள் கண்டுபிடித்திருக்கும் போது… மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் இவர்களை பற்றி?
எல்லார் பார்வையும் ‘சூசையை’ குற்றவாளியாக பார்த்துக்கொண்டிருக்க, அப்பொழுதுதான் உள்ளே வந்த மேனேஜர் கூடியிருந்த கூட்டத்தை பார்த்தவர் என்னயா? ஆபிசு நடுவுல இப்படி கூட்டம் போட்டு பேசிகிட்டு, இதென்ன மீட்டிங்க ஹாலா? ஆபிசா?
இல்லை சார் ‘கேஷியர்’ மெல்ல முன் வந்து நடந்த விவரங்களை சொன்னார். சூசைதான் எடுத்திருப்பான் என்று எல்லோரும் சந்தேகப்படுவதாக சொன்னார்.
“அறிவிருக்காயா உங்களுக்கெல்லாம்” அவன் எப்படியா எடுத்திருக்கமுடியும்? அதுவும் என் ரூமுல இருக்கற பீரோவுல வச்ச பணம், ஏன் இந்த ‘கேஷியரே’ எடுத்துட்டு போயிட்டு இன்னைக்கு காணோமுன்னு சொல்லி சூசை மேலே பழி போட்டா வேணாங்குதா?
சார், அநாவசியமா பழி போடாதீங்க, இந்த பத்து ரூபாய திருடிட்டு போய், நான் ஒண்ணும்.. கேஷியர் கத்தினான்.
அப்ப அவன் மேல அநியாயமா பழி போடறே? அது மட்டும் என்னயா? அவன் ஆபிசுல கீழே வேலை செய்யறவன்னுதானே? பதிலுக்கு மேனேஜர் கூச்சல் போடவும், அலுவலகம் அப்படியே அமைதியானது.
ஒரு நிமிட மெளனத்துக்கு பிறகு மேனேஜர் சொன்னார், இந்த “கேஷியர்” கலெக்சன்ல காட்டுன பணமும் இவன் இந்த பெட்டிக்குள்ள வச்சிருக்கற பணமும் பத்தாயிரம் ரூபாய் அதிகமா இருக்கு, அதைய கீழ் பீரோவுல எடுத்து வச்சிருக்கேன் பாரு. திடீருன்னு ஒரு “ஆடிட்” வந்து அதிகமா வச்சிருக்கற பணம் யாருதுன்னு கேட்டா யாருய்யா பதில் சொல்றது? நீயா நானா?
கேஷியர் அவசர அவசரமாய் அவசரமாய் “கலெக்க்ஷனான” பணத்தை கூட்டி பார்த்து கையில் இருந்த பணத்தை பார்க்க சரியாக இருந்தது. அப்படியானால் அந்த காணாமல் போனதாக சொல்லப்படும் அதிகப்படியான பணம்..? திகைப்பாய் நின்றான் கேஷியர்.
போ..போ..நல்லா யோசி எப்படி பணம் கையில அதிகமா வந்துச்சுன்னு இன்னும் அரை மணி நேரத்துல எனக்கு கணக்குல காட்டணும். இல்லையின்னா உனக்கு “மெமோ” கொடுக்கறதை தவிர எனக்கு வேற வழியில்லை. சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்.
அலுவலகத்தில் அவரவர் இடங்களுக்கு சென்று அமர, ஜோசப்பும், நாராயணசாமியும், சூசையின் பார்வையை தவிர்க்க தலை குனிந்து ஏதோ தேடுவது போல பாவனை செய்து கொண்டிருந்தனர்.
சரியான சிடுமூஞ்சி, கிறுக்கன்,சாவு கிராக்கி, இன்னும் என்னென்னமோ பட்டப் பெயர்கள் அந்த மேனேஜருக்கு வைத்திருந்தார்கள் அந்த அலுவலகத்தில், ஏன் சூசை கூட பட்டப் பெயர் வைத்துத்தான் இதோ இங்கு உட்கார்ந்திருக்கும் அலுவலக பணியாளர்களிடம் அவரை பற்றி பேசியிருக்கிறான்.

