உன்னுள் பிறக்கும் தகுதி
தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் மற்றதெல்லாம்
ஆகுதியாக மடிந்துப் போகும், முடிந்தது
என்றெண்ணி இடிந்து அமர்ந்துவிடாதே, வலிந்துன்
தகுதியை வளர்த்துக் கொள்.
வாய்க்கு வாயும், வாய்மைக்கு வாய்மையும்,
வலிமைக்கு வலிமையும் பதிலாகும், மாற்றாய்
வேறில்லை மாநிலம் போற்ற நீ வாழ, வாய்
மூடினால் கோழை என்பான்.
அகப்பட்டதை எல்லாம் அனைத்துக் கொண்டு,
உனக்கெதுமில்லை என்றே கொக்கரிப்பான், ஒரே சாதி,
மதமென்பது எல்லாம் பகட்டு தானே, பாழும் உலகில்
தெரிந்துத் தெளிவாய் இதை.
கீழிலிருந்து கேட்டால் மேலே கேட்காது, கேட்டாலும்
பொறாமை என்றிடும் அவர்களின் அறிவுடைமை,
கேட்பதை மேலே ஏறிவந்து கேளு, அப்போதும்
பதிலென்பது எட்டாத மதிலே.
மேலிருக்கும் ஒற்றுமை கீழே இருப்பது இல்லை,
கீழிலிருக்கும் பிரச்சினை மேலே தெரியாமல் இல்லை,
தகுதியை என்றும் பிறர் தருவதில்லை, சிந்தித்தால்
உன்னுள் பிறக்கும் தகுதி.

