புது முகம்!
சினிமா சினிமா சினிமாதான்
என் இரவு முடிஞ்சதும்
பகல்கள் விடிஞ்சதும்
அந்தக் கனவுகளோடுதான்!
ரெண்டு வீடு எனக்கு
ஒன்னு பேரு 'என் வீடு'
இன்னொன்ன எங்கம்மா
தியேட்டரும்பா!
சின்ன வயசுலேர்ந்தே
அந்த ஆசைதான்!
MGR மாதிரி வரணும்னு.
வீட்டுக்கு வரதேன்னுட்டா அம்மா!
அடிச்சு புடிச்சு, சென்னை வந்து
அங்குமிங்கும் அலைஞ்சு
கண்டுபிடிச்சேன் கோடம்பாக்கம்.
எங்க என்ன கண்டுபுடின்னு!
அப்படியும் இப்படியும் சான்சு வாங்கி
ரெண்டு மூணு படத்துல
ரெண்டு மூணு சீன்
தலை காட்டிட்டேன்!
ஏன்டா மவனே!
எந்த சீன்ல நீ வரன்னு
கேட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டா
என்னைப் பெத்தவ!
அதுக்கப்புறம் சான்ஸ் ஒண்ணுமில்ல
பெருசா எதாவது சாதிக்கணும்னு
சென்னை வந்தவன்
பேரர்னு பேர் எடுத்தேன்!
போனவன் இப்படி ஆயிட்டானேனு
பெத்தவளும் அழுது அழுது
சோர்ந்து போயிட்டா... வந்துருப்பானு
சொன்னதுக்கு முடியாதின்னுட்டேன்...
சோர்ந்து போனவ செத்துப் போயிட்டான்னு
சொன்னதும், என்ன செய்யுறதுன்னு தெரியாம
பாகத்து டேபிள் வேணுகிட்ட, கைமாத்தா
நூறு வாங்கிட்டு, போய் வந்துட்டேன்
முகம் முழுக்க தாடி, பழுப்பேறிய கண்கள்
சீப்பு சந்திக்க மறுத்த தலை முடி
ஹோட்டல் பேரர் வேலைக்கு நீ லாயக்கில்ல
கெளம்பு மொதல்லன்னார் முதலாளி!
எதேச்சையா சாப்பிட வந்த ஒரு
பெரிய டைரக்டர், என் கோலத்த பார்த்து
என் அடுத்த படத்தில் ஹீரோங்க
போச்சுங்க தூக்கம் எனக்கு.
அங்க ஒரு வாட்டி இங்க ஒரு வாட்டி
இல்லம்மா...இப்போ முழுப் படத்துலயும்
உம் பையன் தான்னு ரூம்ல கத்தினேன்.
வர மாட்டான்னு தெரிஞ்சும்
கத்திகிட்டே இருந்தேன்...