கண்ணீர் கதை -சிவகாசி பட்டாசு தொழிற்சாலையின் கண்ணீர் கதை

தீபாவளிக்கு பட்டாசு சத்தம் கேட்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கும் பட்டாசு வெடித்துக் கொண்டாடத் தயாராகிவிட்டார்கள்.

இந்த வேட்டுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அதற்குள் கனத்த சோகத்தோடு ஒரு அழுகுரல் ஒலிப்பதை நீங்கள் கேட்டதுண்டா? கடந்த 1999 முதல் 2011 ஜனவரி வரை விருதுநகர் மாவட்டத்தில் 650 பட்டாசுத் தொழிற்சாலைகளில் நடந்த 70க்கும் மேற்பட்ட வெடிவிபத்துகளில் 500க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரு மளவு குழந்தைகளும் உண்டு.

சமீபத்தில் சிவகாசியில் நடந்து வரும் குழந்தை உழைப்பு மற்றும் தொடர் விபத்துகள் குறித்து ஆய்வு செய்த ஒரு தன்னார்வக் குழு தந்துள்ள அறிக்கை அதிர்ச்சியை உருவாக்குகிறது.

உதார ணமாக ஸ்ரீகிருஷ்ணா ஃபயர் வொர்க்ஸ் நிர்வாகம் விபத்து ஏற்பட்டு 6 மாதங்களுக்குள்ளேயே உற்பத்தியை மீண்டும் துவங்கிவிட்டது. பெரும் பாலான பணிகள் காண்ட்ராக்ட் முறையிலேயே நடக்கிறது. அப்படியானால், ஆட்சியாளரின் நட வடிக்கை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பது புரியும்.

2 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தொழிலில் குழந்தை உழைப்பு முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், பள்ளிக்குச் செல்கிற குழந்தைகள் பள்ளி நேரத்திற் குப் பிறகும் விடுமுறை நாட்களிலும் இப்பணி யில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கணக்கில் வராமல் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளும் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

18 வயது வரை உழைப்பில் ஈடுபடுத்தக் கூடாது என சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை இங்குள்ள சூழல் எடுத்துரைக்கிறது.

தொழிற்சாலைக்குள் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்துவதைவிட வீடுக ளில் குடிசைத் தொழிலாக காண்ட்ராக்ட் முறையில் கொடுத்து செய்யப்படும் போதுதான் குழந்தை உழைப்பு அதிகமாக உள்ளது.

இங்கு நடக்கும் விபத்துகளைப் பற்றி சொல்லுகிறபோது கவனக்குறைவும் ‘செல்பேசி’ கலாச் சாரமும்தான் பாதி விபத்துக்குக் காரணம் என பொத் தாம் பொதுவாகக் கூறுகின்றனர்.

அதேசமயம் ஆபத் தான வெடி மருந்துகளை கையாள்கிற இவர்களுக்கு அதற்கேற்ற முறையான பயிற்சி அளிக் கப்பட்டதா? முறையான பயிற்சிப் பெற்றவர் களால் இப்பணி கண்காணிக்கப்படுகிறதா? ‘இல்லை’ என்பது அல்லவா உண்மை! வாழ்க்கை நிர்ப்பந்தத்தால் 8 மணி நேரத்திற்கு மேலும் உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இயல்பான உடல் அசதி கவனமின்மையை தோற்றுவிக்கிறதா?

பள்ளி நேரத்திற்குப் பிறகும் பணியாற்ற நிர்ப்பந்திப்பதால் குழந்தைகள் அயர்ந்துவிடுவது விபத்துக்குக் காரணம் இல்லையா? கடும் வறுமையும் வாழ்க்கைப் போராட்டமும் இவர்களை இந்த ஆபத்தான பணிக்கு துரத்துகிறதா? இப்படி நியாயமாக எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்றே பதில் சொல்ல வேண்டியுள்ளது.

நிலச் நிலச்சீர்திருத்தத்தின் தோல்வி, பாசன வசதியின்மை, வேறுவகையான தொழில்களில் ஈடு பட உரிய ஆக்கமோ, ஊக்கமோ, உதவியோ இல் லாத சூழல் என இவ்வட்டார மக்களின் கையறு நிலையே இவர்களை இந்த ஆபத்தான தொழி லில் ஈடுபட வைக்கிறது.

லாப வெறி கண்ணை மறைக்க, எல்லா விதமான சட்டங்களையும் பாதுகாப்புகளையும் மனிதநேயத்தையும் காலில் போட்டு மிதிக்கிற முதலாளிகளை தட்டிக்கேட் கவும் தயங்குகிற ஆட்சியே இங்கு மாறி மாறி நடப்பதால் விபத்துகள் தொடர் கதையாகிறது. கண்ணீர் வழிந்த வண்ணம் உள்ளது. தீபாவளி பட்டாசு வண்ணத்திலும் சத்தத்திலும் அது நிறைந்து இருக்கிறது.

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 1:46 pm)
பார்வை : 496

மேலே