இயேசு என்னும் மனிதர்

"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்" என்று தனது இரண்டாவது பத்தியில் இருந்து சலிப்பூட்டக் கூடிய வகையில் பெயர்களாகவே அந்நூல் தொடர்கிறது. இக்காலத்தில் அந்நூல் நாவலாக வெளிவந்திருக்குமானால் அதை எழுதியவர் கூட அது விற்பனையாகும் என்று நம்பியிருக்க மாட்டார். ஆனால், இன்று உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் நூல் அது. காரணம்? அது ஒரு மத நூல். மதமானது எத்தனை அபத்தமானதாய் இருந்தாலும் அதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் போதை அலாதியானது.

இந்நூலை எழுதியவர்கள் ஏன் இப்படி ஆரம்பததிலேயே பெயர்களை அடுக்குகிறார்கள்? அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருந்தது. தங்களின் தலைவன் ஒரு தச்சனின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குப் பதிலாக அவர் அரசகுலத்தவர் என்றால்? அதற்காக ஒரு வம்ச வரலாறை எழுதினால்? அரசகுலத்தவர்களில் வந்து கேட்பதற்கு எவனாவது மிஞ்சியிருக்கிறானாக்கும்? அந்தக் காலத்தில் வேறு எத்தனையோ கலகக்காரர்களும் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் தங்களது சில தொண்டரடிப் பொடிகளுடன் ரோமப்பேரரசுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவு தான். அக்கால யூதர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

சரி, இயேசு அரசகுலத்தவர் என்று சொல்லியாயிற்று. அது போதாதே. அவரைப் பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டவராகக் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? கன்னிப்பெண்கள் கர்ப்பமான கதைகளை அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த நாகரிகங்களிலிருந்து கேள்விப்பட்டிருக்க வேண்டும். இயேசு கன்னிமரியாளுக்குப் பிறந்தார் என்ற அடுத்த கற்பனை உருவாகிறது.

(சமீபத்தில் மரணமடைந்த வடகொரிய தலைவரான கிம் ஜோங் இல்-லின் பிறப்பையும், வாழ்க்கையையும், இறப்பையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் சூழ்ந்திருந்தன)

அடுத்ததாக வருகிறது இயேசுவின் அறிமுகக் காட்சி. நமது இப்போதைய தமிழ் திரைப்படங்களில் அதிகமாகக் கவனம் எடுக்கப்படும் கதாநாயகனின் அறிமுகக் காட்சி.. இந்த அறிமுகக் காட்சியில் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஆவியானவர் புறாவைப் போல் இறங்குகிறாராம். இது அவர்களுக்குப் போதவில்லை. அதனால் வானத்திலிருந்து ஒரு சத்தம் வேறு உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன். இவர் மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று சொல்லிற்றாம்.

பின்பு அவர் பாலைவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிசாசினால் சோதிக்கப்படுகிறார் என்று கற்பனைகள் நீள்கின்றன.

அதிகமான மக்களால் பின்பற்றப்படும் இயேசு, ஒரு மலைக்கு அவர்களை அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றுகிறார். மூன்று அத்தியாயங்களுக்கு இந்த சொற்பொழிவு நீள்கிறது. அந்த மலைச் சொற்பொழிவு கூட அவரே நிகழ்த்தியதா, இல்லையென்றால் அவரைப் பின்பற்றியவர்கள் இட்டுக் கட்டியதா என்று தெளிவாக அறிய முடியவில்லை.
அடுத்ததாக இயேசு நிகழ்த்தும் அற்புதங்களும், அக்கால மத அறிவுஜீவிகளான பரிசேயர், சதுசேயர் ஆகியோரோடு இயேசு நிகழ்த்தும் விவாதங்களும், மக்களுக்கு ஆற்றும் உரைகளும் என இன்னும் சில அத்தியாயங்கள் நீள்கின்றன.

இறுதியில் அக்கால யூத மதவாதிகள் அவரை ரோமப் பேரரசின் ஆளுநரிடத்தில் ஒப்படைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி கோருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்த விரும்பிய அவனும் அவரைச் சிலுவையில் அறைய உத்தரவிடுகிறான். இறுதியாக அனைத்து புனைவுகளுக்கும் கிரீடம் வைத்தது போல் ஒரு மிகுபுனைவு. இயேசு இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுந்தாராம்.

இக்காலத்தில் கிறிஸ்தவ கோட்பாடுகள் என்று அறியப்படுபவை அனைத்தும் இயேசுவின் சீடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் எழுதிய கடிதங்களில் இருந்து உருவானவையே. மலைச் சொற்பொழிவை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறேன் என்று எந்த கிறிஸ்தவராவது சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட கற்பனைகளுக்கும், கோட்பாடுகளுக்குமிடையில் உண்மையை எங்கே போய்த் தேடுவது? உண்மையான இயேசு, மனிதராய் வாழ்ந்த இயேசு புதிய ஏற்பாட்டின் எந்த பக்கத்தில் இருக்கிறார்?

உண்மையான இயேசு என்னும் யூதர் தனது இனவெறி என்னும் முகத்தை அபூர்வமாக ஒருமுறை வெளிப்படுத்துகிறார். மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தன்னை நாடி வந்த வேற்றினப் பெண்ணை நாய் என்றும், யூதர்களைப் பிள்ளைகள் என்றும் அவர் அழைக்கிறார். இப்படிப்பட்ட அபூர்வமான இடங்களைத் தவிர பிற இடங்களில் இயேசுவின் முகத்தைக் காண்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட மதசார்பற்ற நூல் எதுவும் இயேசுவைப் பற்றி சரியாகக் குறிப்பிடுவதில்லை. நாக் ஹம்மாடியில் கிடைத்துள்ள பழைய சுவிசேஷ சுருள்கள் இயேசுவின் மனித முகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இயேசுவின் முகத்துக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டத்தை அகற்ற விரும்புவதில்லை. எனவே இயேசுவின் உண்மையான வரலாறு கற்பனைக்குவியலுக்குள்ளே கேட்பாரில்லாமல் கிடக்கிறது. ஆக, நமக்கு இன்னொரு கிறிஸ்துமசும் வந்து விட்டது. நல்லது.

(இயேசு வரப்போகிறார் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தேயு 16:28- ஐ வாசிக்கவும்)

எழுதியவர் : (24-Dec-11, 6:29 pm)
பார்வை : 656

சிறந்த கட்டுரைகள்

மேலே