அய்யோ!!

அழுதழுது நான் சாகத்தானா?
அக்னி சாட்சியாய் என் கைப்பிடித்தாய்
நொந்து நொந்து உடல் வேகத்தானா?
நொடிப்பொழுதும் விலகாமல் என்னுள் இருந்தாய்

பத்துப் பொருத்தம் பார்த்து
மணமேடை ஏறியவன்
அதில் ஒன்று கூட நிலைக்காமல்
மண்ணுக்குள் மறைந்ததென்ன?

ஆரஞ்சு பட்டு வேண்டாம் என்று
அரக்கு பட்டுப்புடவை எடுத்தாய் - இப்படி
வெள்ளை உடை உடுத்தத்தானா
விதவிதமாய் என்னை அலங்கரித்தாய்

மெட்டி ஒலி சத்தம் கேட்டே
மெல்ல நெருங்கி வந்தவனே - இன்று
என் அழுகுரலும் கேட்கலயோ?
ஆறுதல் சொல்ல நீயில்லயோ?

மல்லிகைப்பூ வாங்கி வைத்தேன்
மாலையில் நீயும் மயங்கிடத்தான் - இன்று
பூவோடு பொட்டும் போனதடா
புன்னகை முகமும் தீர்ந்ததடா

இப்படி நட்டாத்தில் விடத்தானா
நங்கை என்னை காதலித்தாய்
விதியை எண்ணி அழத்தானா
வீம்பாய் என் கைபிடித்தாய்

மங்கள நேரம் பார்த்துத்தானே
மாங்கல்யம் கயிறுதனைக் கட்டினாய்
அதை உன்னோடு அறுத்துச்செல்ல
எப்போதடா எமனிடம் நேரம் கேட்டாய்?

வாழ்ந்த வாழ்வும் சலிச்சிட்டுதோ
தெற்கு வாசல் தேடிப்போனாய்
திரும்பி எழா நித்திரை ஒன்றை
என்னை விட்டு தனித்து போனாய்

அட சண்டாள கடவுளே!!
அவன் இறக்க நேரம் குறித்தவன்
அவனை மறக்க நேரம் குறிக்க மறந்தாயோ?

உன்னோடு செத்திடவே
உடன்கட்டை ஏறிடுவேன் - ஆனால்
கண்ணெதிரில் சிரிக்குதடா
நம் காதலுக்கு சாட்சியொன்று

எழுதியவர் : உமா ராஜ் (9-Jan-12, 12:12 pm)
சேர்த்தது : umaraj
பார்வை : 241

மேலே