கவிதை சிறுகதை -மர்மப் புன்னகை - பொள்ளாச்சி அபி

-1-
என் இளமைக்காலம்..
புதுமைகளைக் காணும்போதெல்லாம்
பூரித்துப்போய்..
போற்றி வணங்குவது-என்
இயல்பாய்ப்போன
இருபது வயது..!

இருள்; கிழித்து மேலெழும்
இதமான கதிரவன்
புலர்காலைப் பொழுதினை
வரவேற்கும் புள்ளினப்பாட்டு
சிதறும் திக்கெல்லாம்
சிற்பங்களாய் விரியும் மேகம்
நீலச்சுவராய் நின்றிருந்து
உருமாறும் கார்வண்ண ஆகாயம்..
பொறுக்கமுடியாமல்
இயற்கை பரப்பிவிட்ட விண்மீன்கள்..!
தண்ணொளி பரப்பி
அலைகளை ஈர்க்கும் வெண்மதி..!
குயில்பாட்டு,ஓவியமாய் மரநிழல்
தென்றலின் கைகளில்
நடமிடும் நெல்வயல்..
ஆஹா..இன்னும் எத்தனையெத்தனை..!

இயற்கை அன்னையின்
பிரசவிப்பில் உருக்கொண்ட
அத்தனையும் பார்த்து
கவியொன்றை ஆர்த்திட
துள்ளும் மனது..,
இத்தனையழகையும்
இடம்மொன்றில் பிடித்துவைத்திட
தோதாய்-ஒரு கவிதையை
எழுதிடத்துடிக்கும்.

ஆனால்..அப்போது
கவியுரைக்க அறிந்திடவில்லை..
கற்றதும் பெரிதாய் இல்லை..
ஆனாலும் துடிக்கும் மனதிற்குள்
எந்நேரமும் ஒரு தாளலயம்
கவிதை பாடு..பாடு என..
வாய்ப்புக்காக காத்திருக்கும்..

-2-

ஊரெல்லாம் சுற்றி..
உண்மை அழகெல்லாம் போற்றி
மயங்கி மயங்கி நான்
வீடு வருமபோதெல்லாம்
அர்ச்சனையொன்று அம்மாவிடமிருந்து..
“அட..ஊர்சுற்றி..”
“தண்டச்சோறு..”
இளங்கன்றின் துள்ளல்களை
இளமையின் விருப்பங்களை
புரியாத மனிதர் நடுவே
அகப்பட்டுக் கொண்டேனே..என
அங்கலாய்த்து-மௌனமாய்
அம்மாவைப் பார்ப்பது வழக்கம்..!

அப்படித்தான் ஒருநாள்..
அம்மா சொன்னாள்..,
“அத்தையின் ஊருக்கேனும் சென்று
அங்கேதான் ஒரு வேலை பாரேன்..
ஆளுக்கு அரைவயிறேனும் நிறையுமே..”
அம்மாவின் வார்த்தையில் இருந்த நிஜம்
அப்போதுதான் உரைத்தது.
அழகை ரசிக்கவும்
வயிறு நிறைந்திருக்க வேண்டுமென்று…

அடகு வைத்த பித்தளைப்பாத்திரத்திற்கு
பதிலாக கிடைத்த சிறுதொகையை
என் சட்டைப் பையில்
அம்மாவைத்தபோது கண்ணீரும்
அதனுள் விழுந்தது.

அம்மாவின் இயலாமையும்
உழைத்தேயிருந்த களைப்பும்
பொறுப்பையேற்க ஆதரவைத்
தேடும் ஒளியிழந்த கண்களும்
என் மனதிற்குள் தைத்தது..

தட்டில் பாதி மட்டுமே இருந்த
உணவைக் கொறித்தபடி
சரியென்று தலையாட்டினேன்..

-3-
இரவின் நீண்ட மௌனத்தை
கலைத்துவிட்டோம் என்ற
ஆனந்தத்தில்.. “கூ....கூ..”
பெருங்குரலெடுத்து கூவியது
ரயில்வண்டி…!
விழித்தது நானும்தான்..!

கீழ்வானத்தின் சிவப்பு சூரியன்
இருளைப் பாதிக்குமேல்
மேற்குதிசையில் சரித்திருக்க..
பெயர்தெரியாத பறவைக் கூட்டம்
பள்ளிப் பிள்ளைகளாய்
அணிதிரண்டு ஆங்காங்கே
வட்டமடிக்க…
அதிகாலைக் காற்று
சிலுசிலுவென முகத்தை
அலம்பிவிட்டுப் போக
சுகம்..சுகம்…!
நின்றிருக்கும் வண்டி விட்டு
சற்று இறங்கி நடந்தாலென்ன..?
கேள்வியை பதிலாக்கினேன்..!
பயணியர், பாதையில்
அமர்ந்தபடி தூங்குவதும்
தூங்குவதுபோல அமர்ந்திருந்தும்
கந்தல்களை சிலரும்
கம்பளிகளை சிலரும் போர்த்தியபடி..

ஏழ்மையும் செல்வமும்
ஒரே இடத்தில் சங்கமிக்க
திகழும் இந்த பூமியின்
ஒரு துண்டு உதாரணமாய்…
இதோ இங்கே-எது
எப்படியானாலும்-பயணம்
ஒரே வண்டிதான்..
ஒரே தூரம்தான்..
“விதி எல்லோருக்கும் பொது”
எண்ணமிட்ட என் கண்களில்
பச்சை விளக்கு சைகை
கடைசிப் பெட்டியிலிருந்து..!
விரைந்தேன்…,அமர்ந்தேன்..

வண்டி மெதுவாய்
புறப்பட்டது..
புதிய சிந்தனையொன்று
மனதை ஆக்ரமிப்பது போல…!

கதிரவன்-தன் கதிரை
வானவீதியில் வெள்ளோட்டம்
விட்டிருக்க..வெளிச்சம்..,
மேகவிளிம்புகளில்
தங்கப்பூச்சுகளிட்டிருக்க,
தூரத்தே..
சிறுமலைக்குன்று
குன்றின்மேல் கோவில்..
புpன்னனியில் மேகக்கூட்டம்..
தரையில் கண்பதிந்த
இடமெல்லாம்-இளம்பச்சை..
இடையிடையே..நீரோடைகள்..நதிகள்..,
வெண்ணொளி பட்டு..
பச்சைப்பட்டில்..
வெள்ளியாய்,தங்கமாய்
சரிகையிட்டுப் போர்த்தி
எனைப் பார்த்திருந்தது பூமி…!

வேடிக்கை பார்த்து
விருந்துண்ட கண்வழியே
மகிழ்ச்சிக்கு மருந்துண்டதாய்
உணர்வுகள் கிளர்ந்தெழ..
மனதில் சுகம்..
சுகமாய் விரிந்தது.
அந்த வகையில்..
“முதல்பயணம்-இது
மறக்க முடியாதது.”என
நினைத்திருந்தேன்..
ஆம் வாழ்க்கைப் பாதையில்
வளைந்து வளைந்து சென்ற
இந்தப் பயணம்..
மறக்க முடியாததாகவே
மாறிப்போய் விட்டது..!
----------
-4-

அத்தையின் வீட்டிற்கு செல்லும்
வழியில்
அப்போதுதான் பூத்த ரோஜாக்களுடன்
அழகிய தோட்டம்.
அதன்நடுவே
கை கால்முளைத்த
மலரொன்று கண்ணில்பட
துணுக்குற்றேன்..!
பார்வையை விசாலமாக்கினேன்.

அது..அல்ல..அவள்..!
அந்த அழகுமுகம்
ரோஜாக்களின் வனப்பை
பின்னுக்குதள்ளி-என்னை
வசீகரித்தது.

அங்கிருந்து இடம்பெயர
மறுத்து கால்கள்
அடம் பிடித்தது.
கண்களுக்கு வேறுதிசை
இன்றி பரிதவித்தது.

எத்தனை விநாடி.இல்லை
அது எத்தனை யுகம்..
கழிந்தது எனத்தெரியவில்லை..

அவளுக்குப்பின்னே
இன்னொரு ஆண்குரல்..
“யாரது..?”
விளக்கம் கேட்கிறதா.?
விரட்டியடிக்கிறதா..?
அது அவளது
அப்பாவாயிருக்க வேண்டும்.
நான் தடுமாறியபோதுதான்
அவளென்னைப் பார்த்தாள்
பார்வையில் ஐயம்..!

எனக்குள் மீண்டும்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
ஒருசேர இறக்கையடித்தன.
இல்லை இதயம்
அப்படித் துடித்ததோ..?
எதையும் உணராமல்
நின்றிருந்தேன்..!

அருகேவந்து விட்ட
அவர், “யாரைப் பாக்கணும்.?”

“நான்..நான்..இங்கே..”
தட்டுத்தடுமாறி,
கட்டுக்குள்ளில்லாத
வார்த்தைகளில்
அத்தையின் வீட்டுக்கு
வந்ததாய்..
எப்படியோ சொல்லிமுடித்தேன்..!

முகவரிதெரியாமல்
தவிப்பதாய் நினைத்து
முன்வந்து சொன்னார்.
“அதோ..அங்கே..”
அவர் கைகாட்டிய திசையில்
நானாய் நடந்தேனா..?
காற்றில் மிதந்தேனா..?
தெரியவில்லை..

அப்போது முதல்
அந்த ரோஜாத்தோட்டத்து
முகமே எனக்குள் உறைந்துகிடந்தது.

யாரவள்..? என்னபெயர்.?
இதுவரை பார்த்தறியாத
அவள் மட்டுமே
நினைவுகளை ஆக்ரமிப்பது
என்ன அதிசயம்..?

மனமும்,செயலும்
என் கட்டுப்பாட்டிற்குள்
இல்லையே..ஏன்.ஏன்..?

இதுவரை திரையிலும்
உரைநடையிலும்
பாடல்களிலும்,
படித்தும்,கேட்டுமிருந்த
காதல் என்பது இதுவா..?
இதுதான் காதலா..?
காதல் என்பது
இவ்வளவு அவஸ்தையா..?

இருபது வயதில்
காதல் வருமா..?
வேறு எதைப்பற்றியும்
சிந்திக்க முடியாமல்
நம் சிந்தனைகளை
சிறைப்படுத்துவதா காதல்..?

எண்ணங்களில் இரண்டாய்
பிரிந்து எனக்குள்
ஒரு பட்டிமன்றம்..!

என் வாழ்க்கைச் சூழல்
எனது குடும்ப நிலை,
நான் வந்த நோக்கம்
இப்போது வந்த காதல்என
அறிவுக்கும்,மனதுக்கும்
உக்கிரமான போர்..

முடிவில்..எப்போதும்
பையில் வைத்திருக்கும்
வெள்ளைத்தாளினை எடுத்தேன்
அவளது அழகைபற்றிய
முதல் கவிதையை எழுதிச்
சென்றது என் பேனா..!

காதல் ஒன்றும் தவறல்ல
மனம் செய்துவிட்டிருந்த
முடிவையும் இதில்
அறிந்துகொண்டேன்.!

நாள்தோறும் அவ்வழியே
செல்லும்போது பார்க்கத்
தேடினேன் அவளை.

நாள்தோறும் பார்ப்பதற்காகவே
அவ்வழியே அவளைத்
தேடிச் சென்றேன்
என்பதுதான் உண்மை..!

சிலநாட்கள் கழிந்தன..
சூழ்நிலைகள் கனிந்தன..
இயல்பாய் பார்க்க பேச
வாய்ப்புகள் ஆயிரம்
வந்தது..
வருடங்கள் மூன்றும்
கழிந்திருந்தது.

பின்னர் ஒருநாள்
நான் சொன்ன காதலை
ஏற்கவுமில்லை
மறுக்கவுமில்லை.

காரணம் நான் கேட்டபோது
பதில் ஏதும் சொல்லவில்லை.
மோனாலிசாவின்
மர்மப் புன்னகையை
எப்போதும் அவள்
அணிந்து இருந்தாள்.

உன்னோடு பழகியபின்
அவள் முகத்தில்
சந்தோஷத்தைப் பார்ப்பதாக
அவள் பெற்றோர் பலமுறை
என்னிடம் வருத்தமாகச்
சொன்னதுண்டு..

சொல்லுக்கும் அவர்கள்
செயலுக்கும் தொடர்பில்லாத
நிலையும் எனக்குப்
புதிதாகவும்,புதிராகவும் இருந்தது.

பின்னர் ஒருநாள்,
மாலைக் கதிரவன்
மறைந்த பின்வந்த
மழையிரவு நேரத்தில்
அவள் கண்மூடினாள்
அதற்குப்பிறகு மூடிய
கண்கள் திறக்கவில்லை.
அவள் பெற்றோருடன்
போட்டியிட்டுக் கொண்டு
வானமும் விடியும்வரை
தன் அழுகையை
நிறுத்தவில்லை.!

அவள் இதயத்தில்
இயற்கையிட்டு வைத்த
பெரும்துளை ஒன்று
எப்போது வேண்டுமானாலும்
மூச்சை நிறுத்துமென்று
இப்போதுதான் சொன்னார்கள்..!
அவளின் மர்மப் புன்னகையின்
அர்த்தமும் எனக்கு விளங்கியது.!

அன்றிருந்த என்னை,
இன்றிருக்கும் நானாக
மாற்றியவள் அவள்தானே.!
அவளின் அழியாக்காதலின்
மௌன சாட்சியாக இன்றும்
நாளையும்..என்றும்..நானிருப்பேன்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (15-Jan-12, 5:45 pm)
பார்வை : 613

மேலே