இப்படியும்... நடந்தது.! -பொள்ளாச்சி அபி

பல வருடங்களுக்கு முன்..,
எங்கள் ஊரிலிருந்த நற்பணி மன்றத்தின் சார்பாக,‘சிற்பி’ என்றொரு,மாதாந்திர கையெழுத்துப் பிரதியை நடத்திவந்தோம்.அதனைத் தொகுக்கும் பொறுப்பு என்னுடையது.ஒருநாள் தபாலில் எனக்கு ஒரு கனமான பார்சல் வந்தது.
பிரித்துப் பார்த்தபோது,உள்ளே ஒரு குயர் தாள்களில்,சிறிதும் பெரிதுமாக நிறையக் கவிதைகள்.கூடவே எனக்கு ஒரு கடிதம். “தாங்கள் நடத்திவரும் கையெழுத்துப் பிரதியை அச்சிலே கொண்டுவரும் முயற்சி இருப்பதாக அறிந்தேன்.எனக்கும் கதை,கவிதைகள் எழுதும் ஆர்வமுண்டு..ஆனால் எனக்கு கமா,அப்பாசிடர் கமா,ஃபுல்ஸ்டாப் போன்றவற்றை சரியான இடங்களில் போடவராது.நான் அனுப்பியுள்ள கவிதைகளில்,தகுந்தவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும்,படைப்புகள் எப்படி இருக்கவேண்டுமென விரும்புகிறீர்கள்.? என்ற ஆலோசனைகளைத் தருமாறு வேண்டுகிறேன்.இப்படிக்கு “காயத்திரி.”
என்று முடிந்திருந்தது.
பேசாமல்,கமா,அபாசிடர் கமா,ஃபுல் ஸ்டாப்,கேள்விக்குறி ஆகியவற்றை மட்டும் எழுதி அனுப்புங்கள்,கவிதை,கதை ஆகியவற்றை நாங்கள் நிரப்பிக்கொள்கிறோம் என்று பதிலெழுதிவிடலாம் என்றுதான் நினைத்தேன்.

ஆனால்,நெளிசல் இல்லாத,குண்டு,குண்டான கையெழுத்துக்கள்,அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதி அனுப்பப் பட்டிருந்தவற்றைப் பார்க்கும்போது, அழகான,ரொம்ப சின்சியரான பெண்ணாக இருக்கும் என்று தோன்றியது.மேலும் காயத்திரி என்ற பெயர்வேறு ஏனோ சுண்டியிழுத்தது.

அன்றுமாலையே,காயத்திரியின் கவிதைகளைப் படித்துப் பார்த்தேன்.இந்தப் பெண் கவிதை எழுதுவது,புதிதாக தொடங்கப்பட்ட முயற்சி என்று தெரிந்தது.இருந்தாலும் நிராகரிக்காமல், “தினமணி”யில் வந்திருந்த ஒரு கவிதைவிமர்சனக் கட்டுரையோடு,இதைப்போல எழுத முயற்சி செய்யுங்கள்..என்ற அறிவுரையோடும்,தொடர்ந்து படைப்புகளை அனுப்புங்கள் என்ற வேண்டுகோளோடும் பதில் அனுப்பினேன்.
இப்படியாக ஆரம்பித்து எழுதத் தொடங்கிய கடிதங்களில்,மதிப்பிற்குரிய கவிஞர் காயத்திரி என்பது,தேய்ந்து அன்பு காயத்திரி ஆகி,நீங்கள் நீயாகியது.அவர்கள் குடும்பத்தில் தனக்கு கீழே தம்பி ஒருவன்தான் என்பதும்,அம்மா,அப்பா இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதும்,ப்ளஸ் டூ முடித்துவிட்டு,தபாலில் மேற்கொண்டு படிப்பதாகவும்,சில வாரங்களிலேயே விபரங்கள் தெரிந்தது.
அதுபோலவே எனது குடும்பத்தைப் பற்றியும் தகவல்கள் பரிமாறிக் கொண்டோம்.பிறகு கவிதைக்காக கடிதம் எழுதுவது போய்,எப்போதாவது கவிதையும் எழுதினோம்.
‘எத்தனை நாளைக்குத்தான் ஒருவர் மனதை,ஒருவர் அறியாதவர் போல கடிதம் எழுதிக்கொள்வது., நேரிலேயே சந்தித்து ‘ஐ லவ் யூ’ சொல்லி விடலாமா.? இல்லை கடிதத்தில் எழுதிவிடலாமா.?’ என்று ஊசலாடி,கடிதமே மேல் என்று முடிவு செய்தபோது,ஒருஇரவு முழுவதும் கொட்டக்கொட்ட கண்விழித்து ஒரு கடிதம் தயாரித்ததில்,அந்த டிசம்பர் குளிர் இரவுகூட,சூடாகிப் போனது.
மறுநாள் அதை அனுப்பிவிட்டு,நல்ல பதிலுக்காக வேண்டிக் கொண்டாலும், உள்@ர கலக்கமாகவும் இருந்தது.

சோதனையான அந்த ஐந்துநாட்கள் கடந்து காயத்திரியிடமிருந்து பதில் வந்தது.
நேரிலே வாருங்கள்.நாம் நிறையப் பேச வேண்டியுள்ளது.மறுநாளே புறப்பட்டுச் சென்று,அந்த முகவரியைக் கண்டுபிடிக்க சற்று அலைந்து..,குறிப்பிட்ட வீட்டு முன்பு நின்று,குரல் கொடுத்தேன்.
எனது சமவயதுள்ள ஒரு இளைஞன் வெளியே வந்தான். வாங்க என்ன விஷயம்.?
இங்கே காயத்திரின்னு..என்று நான் இழுக்க, யெஸ் இந்த வீடுதான்,வாங்க
என்று உள்ளே கூட்டிச்சென்று,உள்ளே அமரச் சொன்னான்.நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.பார்வையால் வீட்டைத்துழாவியபடியே,கேட்டேன். “நீங்க காயத்திரிக்கு என்ன ஆகணும்..?”
இளைஞன் புன்சிரிப்போடு, “டீ சாப்பிட்டுகிட்டே பேசலாமே...என்றபடி, ப்ளாஸ்க்கிலிருந்து,டீ ஊற்றிக் கொடுத்தான். தொடர்ந்து நேற்றுவரை நீங்க லவ் பண்ண காயத்திரியை,இனிமேலாவது, சுத்தமா மறந்துரணும் என்று சொல்ல.., ‘மளுக்’கென நெஞ்சுக்குள் எதுவோ முறிந்தது. பதறியபடியே கேட்டேன்“ஏன் என்னாச்சு காயத்திரிக்கு.?”
“காயத்திரிக்கு ஒண்ணும் ஆகலை..ஆனால் உங்களுக்குத்தான் நான் சொல்லப்போவது அதிர்ச்சியாயிருக்கும்”என்றான்.நான் அவன் முகத்தைக் கேள்விக்குறியோடு பார்க்க,”யெஸ்.நான்தான் காயத்திரி..அவன் சொன்ன விநாடியிலிருந்து,என் மூளை மரத்துப்போனது.
பிறகு அவன்,தன் காதலி நினைவாக அந்தப் பெயரில் கவிதைகளை எழுதுவதாகவும்,உங்கள் ஊரில் உள்ள எனது உறவினர் மூலம்,நீங்கள் கையெழுத்துப் பிரதி நடத்துவதைக் கேள்விப் பட்டதாகவும்,பெண்ணென்று நினைத்து நான் எழுதிய கடிதத்தொடர்பு எதுவரை போகுமென்று பார்க்க, விளையாட்டாய் பதில் எழுதியதாகவும்,இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் என்று நேரில் வரச்சொன்னதாகவும் இனிமேல் நல்ல நண்பர்களாக இருப்போமென்று..அவன் சொன்னதும்,எதுவுமே என் விருப்பம் இல்லாமலேயே என் செவிகளுக்குள் சப்தங்களாய் ஏறிக்கொண்டிருந்தது.
இப்படியாக காணாமலே வந்த காதல்,கண்டவுடன் மறைந்து போயிற்று.! அதேபோல் அந்த விஷயத்தையும் நான் இதுவரை யாருக்கும் சொல்லவே இல்லை.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (1-Feb-12, 9:34 pm)
பார்வை : 1135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே