மாமனே... முருகா
(பேச்சாளர் டாக்டர்.சரசுவதி ராமனாதன் பேச்சில் ரசித்த நகைச்சுவை )
ஒரு நாள் மாலை நேரம் . என்னுடைய ஊருக்கு அருகில் இருந்த
முருகன் கோவிலுக்கு சென்றிருந்தேன். பெரிதாக கூட்டமில்லை. இறைவன் சன்னதிக்கு முன்னாள் நின்று வழிபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு கல்லூரி பெண் ... சற்று சத்தமாக. “அப்பனே முருகா ” என்று அழைத்து தன் வேண்டுதலை தெரிவித்துச்சென்றாள்.
5 நிமிடம் கழிந்தது. ஒரு இளைஞன் .. சுற்றுமுற்றும் பார்த்தபடியே வந்தான். எனக்கு முன்னால் போய் நின்று வழிபட ஆரம்பித்தான். நல்ல பக்தி போலும்... என்று நினைத்துக்கொண்டே நான் மெல்ல சுலோகங்களை பாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது “ மாமனே ..முருகா” என்று சொல்லிக்கொண்டே அவன் முருகனை வழிபட்டதும் , எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
” அப்பனே முருகா “ என்றுதானே எல்லோரும் வழிபடுவார்கள் .இவன் என்ன வித்தியாசமான உறவு முறையில் முருகனை கும்பிடுகிறானே .. என்ன காரணமாக இருக்கும் ....என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.
”தம்பி ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்கா மாட்டியேப்பா” என்றேன். அவன் “ என்ன ?” என்பதை போல தலையை உயர்த்தி பார்த்தான் . நீங்க இப்போ மாமனே முருகான்னு கும்பிட்டிங்களே..... வித்தியாசமா இருக்கே.. ஏன்னு தெரிஞ்சுக்கலாமா.. ? என்றேன்.
” இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாமி கும்பிட்டுட்டு போனாலே ஒரு பொண்ணு , அவ வேற யாருமில்ல.. நம்ம ஆளு. அவ என்ன சொல்லி கும்பிட்டா...? “ அப்பனே முருகான்னு” தானே...? அப்ப முருகன் எனக்கு என்ன வேணும்... ? மாமன் தானே.... ? ! அதான் மாமனே முருகான்னு.... கும்பிட்டேன் “ என்றான்.
அவன் விளக்கத்தை கேட்டு நான் விக்கித்து போய் நின்றேன்.
இறைவனோடு இப்படியும் ஒரு பந்தத்தை இப்போது தான் பார்த்தேன்.