ஏண்டா இந்தக் கொல வெறி..?...பொள்ளாச்சி அபி

கையிலே குண்டாந் தடியோட
கண்ணுலே கொலைவெறியோட
கோவில்,பூங்கா,ஓட்டலு
கடற்கரையின்னு பாக்கியில்லாமே
காதலர்களைத் தேடித்தேடி
ஓட,ஓட அடிக்கிறயே..
கலாச்சாரம் பண்பாட்டை
காத்திடத்தான்னு பீத்துறியே..
ஊட்டுக்குள்ளே உடமாட்டே
கோவிலுக்குள்ள உடமாட்டே..
பொதுக்கிணத்துலே தண்ணி
தர மாட்டே..
நடுவீதியிலே செவுருகட்டி
எங்களை நடக்கவும் உடமாட்டே.
உன் காட்டுலே ஏரோட்டவும்
தண்ணி பாய்ச்சவும்,
களை எடுக்கவும்
எருமை மேய்க்கவும்,
உன் வீட்டு எழவெடுக்கவும்
குழி வெட்டவும்
துணி துவைக்கவும்
சவரம் பண்ணவும்
எப்பவும் நாங்க வேணும்.
அதுலேயும் தப்பக் கண்டுபிடிப்பே
கூலி குறைப்பே,அடி குத்துன்னு
தண்டணையும் கொடுப்பே..!
இப்படி காலகாலமா உன்னோட
சாதி,மதக் கட்டுப்பாட்டுலே
செத்து,செத்துப் பொழைச்சோமே..
உயிர்வாழ துடிச்சோமே..!
இப்படியே இருக்கறதுதான்
உங்க இந்தியப் பண்பாடா.?
இல்லே தமிழ்ப்பண்பாடா..?
காஷ்மீருலேயும் தடுக்குறே.,
குமரியிலேயும் உதைக்குறே.,
உயிர்களோட உரிமையை
நீயா எதுக்கு எடுக்குறே..?
காதலிக்கிறதால உங்க
சாதிமத அடையாளம்
காணாமேப் போயிடும்-நீங்க
காத்துவந்த மேலாண்மை
காத்தோட போயிடும்னுதானே
நீ துடிக்கிறே,?.தேடித்தேடி
ஆத்திரத்தோட அடிக்கிறே..?
ஆளும்,படையும்,
எங்களுக்கு இல்லே
ஆளுங்கட்சியின்னு
ஆதரவும் இல்லே..!
அதனாலே..
நாங்க அப்படித்தான்டா
காதலிப்போம்..!-நாலு
வர்ணத்தையும் சிதறடிப்போம்.!
இது காதலர்தினம் மட்டுமல்ல
சாதிமறுப்பு,மதம் அறுப்பு
திருமண தினம்னுகூட
நாங்க இனி அறிவிப்போம்..!.