நானும் நூறும்.! பொள்ளாச்சி அபி.

எழுத்து.காமில்,
எனது நூறாவது படைப்பை
மிக நல்ல கருவுடன் படைக்க
ஆசைப்பட்டேன்.
எதைப்பற்றி எழுதலாம்
ஆலோசித்தேன்..,

உலக சரித்திரத்தை
ஒரு கவிதையில் பாடலாமா..
அல்லது..
குழந்தையாய் பிறக்க அதன்
போராட்டத்தை பாடலாமா..
வளர்ந்தபின் பிடித்தமான
காதலைப் பாடலாமா..
காதலினால் ஏற்படும்
போதையினைப் பாடலாமா..

குடும்பங்கள் சிதைவதை,
குறுமனங்கள் பெருகுவதை,
திருமணங்கள் வணிகமாவதை,
திருமதியும் பண்டமாற்றாவதை,

பள்ளிகள் கொள்ளிக்கூடமாவதை
கொலைகள் நியாயப்படுத்தப்படுவதை
சிறைகள் அன்றாடம் நிரம்புவதை
சித்திரவதைகள் பெருகுவதை

காசுள்ளவர்களுக்கு கடவுளின்
முதல் தரிசனம்..
காசில்லாதவர்க்கு தெருவில்
குடித்தனம்..

ஓட்டுப் பொறுக்கிகளின்
சாமர்த்திய அரசியல்..
சாமானியனின் வாழ்வு
சூனியவெளியில்..

அரசுகள் எனும் யந்திரம்
மக்களை கசக்கும் புதுமந்திரம்
விலைவாசி எனும் பொருள்
எங்கேயும் இருப்பது.
அதனிடம் நாம் நெருங்க
முடியாதிருப்பது..,

புதியபொருளாதாரக் கொள்ளை
தாராளமயமாக்கல் சித்ரவதை..
தனிமனிதனின் நெஞ்சக் கொதிப்பு
அதனால்வரும் இரத்தக்கொதிப்பு

சிகிச்சைக்காக மருத்துவமனை
படுக்கையில் கிடக்கவைத்து
பணம் பறிப்பது,முடிந்தால்
சவக்கிடங்குக்கு அனுப்புவது..

பிறந்தது முதல்
இறப்பது வரை
சந்திப்பதெல்லாமே
போராட்டமாய் இருக்கையில்
எதனை அழகாய் எழுதுவது..

முடிவில்..

மனிதர்கள் பிறந்தார்கள்..
வாழ்ந்தார்கள்..
இறந்தார்கள்..

உலக சரித்திரத்தை இப்படியே
எனது நூறாவது கவிதையாய்
மிகக் கவலையாய் முடிக்கிறேன்…!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (29-Feb-12, 8:59 pm)
பார்வை : 368

மேலே