உயிரின் வலி - ஒரு பக்கக் கதை

ஜாமிட்ரி பாக்ஸ்சில் ஃபீஸ் கட்ட வைத்திருந்த பணம் இரண்டாயிரம் காணாமல் போகவே மதிவதனி அழுதபடி வகுப்பாசிரியை நிர்மலாவிடமும் தலைமை ஆசிரியையிடமும் சொன்னாள்.

``பணம் திருட்டு போயிடிச்சா? இல்ல தொலைஞ்சு போயிடிச்சா?’’ மிடுக்காய் கேட்டார்கள் தலைமை ஆசிரியை.

``திருட்டு தான் போச்சு மேடம். வீட்டுல இருந்து வர்றப்போ பணத்த ஜாமிட்ரி பாக்ஸ்சுல வெச்சேன், முத பீரியட்டுல பேனா எடுக்க ஜாமிட்ரி பாக்ஸ் திறந்தப்பவும் பணம் இருந்திச்சு. இண்டர்வெல்லுக்கு அப்பறம் தான் பணம் காணாமப்போச்சு!’’ மதிவதனி சோகமாய்ச் சொன்னாள்.

`` இவ பெஞ்சுல இருக்கிற எல்லா புள்ளைங்களையும் தனியா அழைச்சு செக்கப் பண்ணிடுங்க, உள்ளாடையுல கூட மறைச்சு வெச்சிருக்கலாம் விடாதீங்க்!’’ அவர்கள் சொல்லி முடிக்கவில்லை அதற்க்குள் தனது கைப்பையிலிருந்து இரண்டாயிரம் பணத்தை எடுத்து மதிவதனியிடம் நீட்டினாள் நிர்மலா ஆசிரியை.

`` பணத்த பத்திரமா கொண்டுபோய் ஃபீஸ் கட்டிடு!’’ பணம் கிடைத்த சந்தோஷத்தில் டீச்சரை திரும்பி பார்த்தபடியே நடந்தாள் மதிவதனி.

`` வேற ஒண்ணுமில்ல டீச்சர், ரெண்டு வருஷத்துக்கு முன்னால இதே மாதிரி பணம் திருட்டு போச்சுன்னு காலேஜ்சுல படிச்சுகிட்டிருந்த என் தங்கச்சிய சந்தேகப்பட்டு அவ உள்ளாடையக்கூட விடாம செக்கப் பண்ணீட்டாங்க, அவமானத்துல அவ தற்கொலை செஞ்சுட்டா. அந்த நிலமை வேற யாருக்குமே வரக்கூடாது!’’ கண்கள் பனிக்க ஒரு உயிரின் வலியைச் சொல்லிவிட்டு நடந்த நிர்மலா ஆசிரியையை விழி மூடாமல் பார்த்து அசந்தார்கள் தலைமை ஆசிரியை.

எழுதியவர் : ஐரேனிபுரம் பால்ராசய்யா (8-Mar-12, 11:07 pm)
பார்வை : 1023

மேலே