சான்றோர் கவி

சான்றோர் கவி

படிக்கிற போதே உள்ளம்
பசக்கெனப் பற்றிக் கொள்ளும்;
துடிக்கிற நெஞ்சுள் ஏதோ
துடிப்புணர் வலைய டிக்கும்;
எடுக்கிற சொல்லிற் கற்போர்
இதயமே சிறைப்பட் டேங்கும்;
எடுப்புற நடக்கும் சான்றோர்
கவியெனச் சொல்ல லாமே!

காட்சிகள் விரியும்; அந்தக்
காட்சியின் சுவைகள் நம்மை
ஆட்சிகள் செய்யும்; இன்ப
அதிர்வினை எழுப்பும்! சொல்லின்
நீட்சியில் உலகை வெல்லும்;
நினைப்புளே புகுந்து திர்க்கும்
காட்சிகள் இனிக்கும் சான்றோர்
கவியினில் என்ன லாமே!

கோணலை நிமிர்த்தும்; நெஞ்சக்
குமுறலை அமர்த்தும்; நன்மை
காணலைச் சுட்டும்; இன்பம்
கண்ணிலே மின்னச் செய்யும்;
நாணமும் அச்ச மெல்லாம்
நளினமாய்க் காட்டும்; நல்ல
மாணிழை நடையே சான்றோர்
கவிநடை என்ன லாமே!

உணர்வலை மீதில் தோணி
ஓட்டிடும்; உடலின் சேர்க்கை
அணுவெலாம் புகுந்து நம்மை
அதிர்ந்திடச் செய்யும்; சொந்த
நினைப்பினை வானி லோட்டும்;
நிலவினைக் கைய மர்த்தும்;
கணப்பெனக் கதக தக்கும்;
கவியெனில் உண்மை தானே!

உயிரினைப் பதப்ப டுத்தும்;
ஒழுக்கமும் தழுவிச் செல்லும்;
செயிரினைப் போக்கும்; உள்ளம்
செம்மையா யாக்கும்; மண்ணில்
பயிரினை வளர்க்கும் நீர்போல்
பண்பினை வளர்க்கும்; நந்தம்
உயிரெலாம் கலந்து ணர்வை
ஒருமுகப் படுத்தும்; உண்மை.

பரம்பொரு ளடியை நாடிப்
பரவிடும் அடியார் நெஞ்சில்
உரம்தரும் அடிகள் சான்றோர்
ஒப்பிலா அடிகள் தாமே!
பரவிடச் சொல்லை யீந்து
பண்பட உணர்வை யீந்து
சரணமே ஈதல் சான்றோர்
கவியெனில் மிகையே யில்லை.

எழுதியவர் : பொற்கிழிக் கவிஞர் ச.சவகர் (10-Mar-12, 12:54 pm)
பார்வை : 754

மேலே