பெண்ணே மாறிவிடு!
பெண்ணே!
அச்சம் என்பது மடமை
அஞ்சாமல் செய் உன் கடமை
அன்று சொன்னான் பாரதி
அதைக் கேட்டு துணிந்திடு மாது நீ
அடுப்பங்கரையில் அக்கினி
ஊதுகுழலூடே ஊடுறுவும்
உன் உணர்வலைகள் பெண்ணே!
தேக்கி வைத்து தேகம் வாடாதே
தேசம் வென்று விட
அச்சம் கொன்று விடு
ஆடைகழுவும் அழுக்கில்
சவர்க்கார நுரையோடு
கரையும் சாதனைகள்
உலகம் அறிய உயர்ந்திடுவேன்
சபதம் என்று சத்தியமெடு
சாதிக்க வேண்டும் அச்சம் விடு
வீட்டு மூலையில்
விரதம் கிடக்கும் வீரசாகசங்கள்
இருட்டறையில் மறைந்திருக்கும்
இணையற்ற ஆற்றல்களெல்லாம
ஒளி பட்டு வெளி தெரியட்டும்-
உன்னை விட்டு அச்சம் ஓடி ஓளியட்டும்
கன்னங்களை தழுவும் கண்ணீர்-உன்
எண்ணங்களை நழுவச்செய்யும்
காயங்களைக் கண்டு துவண்டு போன
காலங்கள் வெருண்டு ஓடட்டும்
அவற்றையே ஆயுதமாக்கு
நேற்றை மறந்து இன்றை புதுயுகமாக்கு
அன்னப தவிர -உன்னை
அடக்கும் ஆயுதம் இல்லை
ஆண்டவன் தவிர அதிகாரம் உனக்கில்லை
அடிமை நீங்கட்டும் அற்புதம் ஓங்கட்டும்
அச்சம் உனக்கு துச்சம் பெண்ணே
அகிலம் போற்றும் அவதாரம் கொள்