குட்டிச் சொர்க்கம்

அழகூர் மல்வத்தை
அது கொண்டுள்ளது
இயற்கைச் செல்வத்தை

இங்கு இருந்தது
அழகான பூப்பத்தை
... அதனால் கிடைத்த பெயர்தான்
இந்த "மல்வத்தை"

இங்கு வீசுகின்ற பூங்காற்று
தணித்துவிடும் கடும் சினத்தை
இங்கு பேசுகின்ற
"பாங்காட்டுக்" குயிலோசை
மயக்கிவிடும் நம் மனத்தை

பார்த்தாலே மனம் மகிழும்
ஆற்றங்கரை ஓரத்தை
அண்டி வாழும் நத்தைதான்
வரைகின்ற படத்தை

விபுலன் பெயர் சொல்லும்
வித்தி யாலயத்தை
சுத்தி வாழுகின்ற மக்கள்
தன்னைச் சுற்றி வந்தால்
முக்தி அளிக்கின்ற
"சித்தி விநாயகனைப்"
பாடப் போதாது வாய் வார்த்தை

பசுஞ்சேலை கட்டிக்கொண்ட
வயல்ச்சோலை இருபக்கம்
நீண்டு வளைந்திருக்கும்
நெடுஞ்சாலை ஒருபக்கம்
குளிர்நீர் ஓடுகின்ற
"ஒடங்காவாறு" மறுபக்கம்
நடுவே அமைந்திருக்கும்
அழகான குட்டிச் சொர்க்கம்
வள்ளுவர் புரம்தன்னை
பாடப்பாட நாவினிக்கும்.

மண்வெட்டி பிடித்ததனால்
நீர்கட்டி வெடித்துப்போன
புண்கரத்தையுடைய உழவனுக்கு
பொன் கட்டிக்கு மேலான நெல் கட்டிகளைக்
கொட்டிக் கொடுக்கும்
"புதுநகரத்தில்" வாழ்பவன்
இறந்தபின்னும் அடையமாட்டான் நரகத்தை
வாழும்போதே அனுபவிப்பான் சொர்க்கத்தை

மயில் வந்து அகவுகின்ற
"தாய்வாய்க்கால்" தடவுகின்ற
கந்தன் குடிகொண்ட
பிள்ளையார் பெயர்கொண்ட
"கணபதி புரம்" வாழும்
புல்லொன்றைக் கேட்டுப்பார் - அது
பெருமையாய்க் கூறும்
என்நூர்ப் புகழ் தன்னை

எண்ணும் எழுத்தும்
கண்ணெனத்தகும் - என்பதை
அழகாய்ச் சொல்லித்தரும்
ஆரம்பப் பள்ளி யோரத்தை
ஒட்டியுள்ள "விளவடி யாலயத்தைப்"
பற்றி நினைத்தாலே - மனம்
பக்திப் பசி கொள்ளும்

என் ஊர்ச் சிறப்பினை
நான் சொல்லத் தேவையில்லை
நீயே கேட்டுப்பார்
பருத்துயர்ந்த புளிய மரத்தை

வேண்டுமென்றால் கேட்டுப்பார்
வேலிகளில் தொங்குகின்ற
பாகற்கொடிச் சரத்தை

எந்தநூரில் வாழ்வதற்கு
பெறவேண்டும்
இறைவனின் வரத்தை
நாம்தான் காக்கவேண்டும்
நம் சொத்தை

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (17-Mar-12, 1:14 am)
பார்வை : 212

மேலே