!!! கண்ணீர் மடல் !!!

நாம் ஒன்று கூடி
ஊரைச்சுற்றி
உலவி வந்ததொரு காலம்...

ஆறுபேர் கொண்ட நமது
நட்பை கண்டு
ஊரே அதிசயத்ததொரு காலம்...

நல்லதற்காய் பாடுபட்டோம்
நன்மைகள் பல செய்தோம்
ஒற்றுமை கட்டமைப்பில்
ஒருமைப்பாடு கொண்டு வாழ்ந்தோம்...

ஒன்றா? இரண்டா?
நமது கதையை சொல்லப்போனால்
பதினைந்து வயது
குறைந்து போய்விடும்...

ஒரு வருடத்திற்கு
ஒரு அத்தியாயம் என்றாலும்
பதினைந்து வருடத்து
அத்தியாயங்களை இங்கே
பதிவு செய்ய முடியாது என்பதால்
எனது கண்ணீர் அஞ்சலியை மட்டும்
காணிக்கையாக்குகிறேன்...

நீ எடுத்த முடிவு தவறானது
உனது மனைவி மக்களுக்கு - நீ
துரோகம் செய்துவிட்டாய்
இப்படி வாழ பயந்த கோழையாய்
இருப்பாய் என்று நாங்கள்
கொஞ்சம்கூட நினைத்து பார்க்கவில்லை...

நீ எடுத்த முடிவை இங்கே
எல்லோருமே எடுத்துவிட்டால்
இந்த உலகமே சுடுகாடாகத்தான்
காட்சியளிக்கும் என்பதை
இனி உனக்கு எப்படி
புரிய வைக்க முடியும்...?

ஆறுபேர் கொண்ட நம்
நட்பின் தோழமைக்காக
நாம் நம் உயிரையே
கொடுக்கத்துனிந்தோம்!
நமக்குள் வரும்
எந்த ஒரு பிரச்சனையிலும் - நாம்
ஆறுபேர் மட்டும்தான்
பாதிக்கப்பட வேண்டுமேத்தவிர
எந்த ஒரு சூழ்நிலையிலும்
நம்மையும் தாண்டி நம்மால்
நமது குடும்பமோ அல்லது
மற்ற குடும்பங்களோ
பாதிக்கப்படகூடாது என்பதுதான்
நமது நட்பின்
தெளிவான ஒப்பந்தம் - ஆனால் நீ
அந்த ஒப்பந்தத்தை
மீறிவிட்டாய் அதனால் நீ
நட்பு வட்டத்தில் இருந்து
விலக்கப்பட்டாய்...

ஆமாம்! நீ
செய்த காரியத்தால்
ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டது
உன்னை எங்களால்
மன்னிக்க முடியவில்லை - நீ
தவறு செய்து இருந்தால்
மன்னித்து இருப்போம் - நம்
நட்பின் நம்பிக்கைக்கு
துரோகம் அல்லவா இழைத்துவிட்டாய்
எப்படி மன்னிப்பது?
நம்பிக்கை துரோகிகளைத்தான்
நாங்கள் மன்னிப்பதே கிடையாதே...

நமது நட்பிற்கு
நீ களங்கம் விளைவித்தாய்
ஆனாலும்
நாங்கள் ஐந்துபேரும்
உனக்காய் வருத்தப்பட்டோம்
என்பதுதான் உண்மை...

நட்பு வட்டத்தைவிட்டு நீ
என்று நீ விலகிபோனாயோ
அப்பொழுதே நீ
தவறான சாவகாசங்களையும்
தாழ்வு மனப்பான்மையையும்
வளர்த்துகொண்டாய்!
ஐந்து வருடங்களாய்
உன்னை நீ
பண்படுத்த முடியவில்லை
கடைசி முடிவையும் தேர்ந்தெடுத்தாய்!
நட்பிற்காக இல்லை என்றாலும்
உன் மனைவி மக்களுகாகவாவது - நீ
ஒரு நல்ல வாழ்க்கையை
வாழ்ந்துகாட்ட முடியாத
கோழையாகி ஏன் போனாய்...?
வாழ்க்கையை கண்டு அஞ்சுவது
ஆண்மகனுக்கு அழகா...?

உழைப்பிற்கு எடுத்துக்காட்டான நீ
உடல்வலிமைகொண்ட நீ
மன வலிமை இல்லாத
கோழை என்று நீ உன்
வாழ்க்கையை
முடித்துக்கொண்ட பிறகுதான்
தெரிந்து கொண்டோம்...

வயதில் சிறியவன் நீ - எங்கள்
ஐவரின் நட்பால் ஈர்க்கப்பட்டு
இடையில் வந்து இணைந்தவன் நீ
அதனால்தான் இடையிலேயே
பிரிந்துவிட்டாய் - இந்த
உலகைவிட்டும் பிரிந்துவிட்டாயோ? ஆனால்
நாங்கள் ஐவரும்
பால்யகாலத்தில் இருந்து
இன்றுவரை எங்கள் நட்பின்
புனிதத்தை நிலைநாட்டி கொண்டு
இருக்கிறோம் என்பதை
நீயும் இந்த ஊரும்
அறியும் என்பதி சந்தேகமில்லை....

நமது நட்பின் வட்டத்தைவிட
உனது சொந்த வட்டம்
மிக பெரியது - அப்படி
இருந்தும் ஏன் இப்படி
ஒரு முடிவு...? எங்களோடு
இணைந்து இருந்து இருந்தால்
சாவிற்கே சாவு மணி
அடித்து இருப்பாய் என்பது
ஊரார்களின் கருத்து - ஆனால்
உனது சிந்தனை
நட்பின் சிந்தனையில் இருந்து
தவறான கோணத்தில்
காணப்பட்டதுதான்
நமது பிளவுக்கான காரணம்
என்பது மறுக்கமுடியாத
உண்மை...

ஊரே மெச்சும் நமது நட்பில் - நீ
களைச்செடியாய் இருந்தாலும்
உன்னை நாங்கள்
களைந்து எறியவில்லை
இடம்பெயர்த்து வைத்தோம்
தனிமைப்பட்டால் திருந்துவாய் என்று...

நாம் நல்ல குடும்பங்களுக்கு
வேலியாக இருக்க வேண்டும் என்பதும்
எந்த நிலையிலும் தன் நிலை
மாறக்கூடாது என்பதும்
நமது நட்பின் கோட்பாடு - அந்த
கோட்பாட்டை நீ ஏன் மீறிவிட்டாய்?
நண்பர்கள் செய்யும் தவறுக்கு
நண்பர்கள் துணைபோகும்
இந்த காலத்தில்
நாம் நம்மை முதலில்
திருத்திக்கொள்ள வேண்டும்
என்பதுதான் நமது
நட்பு வட்டத்தின் நோக்கம்...

நீ இருந்தபோதே
உன்னால் பதில்
சொல்ல முடியாத பல
கேள்விகளுக்கு இனி
எப்படி நீ
பதில் சொல்ல போகிறாய்...?

பரந்த மனப்பான்மையையும்
தொலைநோக்கு பார்வையையும் - நீ
இழந்தபோதே
வாழ்க்கையையும் இழந்துவிட்டாய்
என்றே தோன்றுகிறது...

உனது குடும்பத்திற்காக நீ
சுயநலவாதியாகவாவது
வாழ்ந்து இருக்கலாம் - ஆனால்
அதுகூட உன்னால்
முடியவில்லையே என்பதில்
வருத்தம் எங்களுக்கு...

குடும்பம் என்றால்
பல சுமைகள்
இருக்கத்தான் செய்யும்
அதை தாங்கிக்கொள்ளும்
வலிமை இல்லாதது
உன் தவறு...
குடும்பம் என்றால்
பல சிக்கல்கள்
இருக்கத்தான் செய்யும் - அதை
சரி செய்வதை விட்டுவிட்டு
இப்படி ஒரு முடிவு
அவசியமானதா...?

உன்னை சுற்றி
பல நல்லவர்கள் இருந்தும்
நீ வாழ தவறிவிட்டாய்
உனது முடிவும்
தவறாகிவிட்டது
நீயும் தவறிவிட்டாய்
உன்னை நம்பி வந்த
உன் மனைவிக்கும் மகளுக்கும்
உன்னால் பதில் சொல்ல முடியுமா...?

உனது மரணம்கூட
ஏற்றுக்கொள்ளும் வகையில்
இல்லையே என்பதுதான்
எங்களால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை...

நீ வியர்வை சிந்துவதாக
இருந்தால் - அதில் உன்
வாழ்க்கை உயரட்டும் - நீ
ரத்தம் சிந்துவதாக இருந்தால்
அதில் ஏழைகளின் தாகம் தீரட்டும் - நீ
கண்ணீர் சிந்துவதாக
இருந்தால் அதில் பலரது ஆத்மா
சாந்தியடையட்டும் என்று
நான் அடிக்கடி நமது
பொது குறிப்புகளில் எழுதுவதுண்டு
ஆனால்
அர்த்தமில்லாத உன்
தற்கொலை மரணத்தை
என்னவென்று சொல்வது...?

குறுகிய வட்டமும்
தாழ்வு மனப்பான்மையும்
கொண்டவனால்
வாழமுடியாது என்பதற்கு - நீ
எடுத்துகாட்டாகிவிட்டாயே...

இதோ உனது
இறுதி ஊர்வலத்தில்
நமது நண்பர்களின்
கண்ணீர்மழை பொழிவது
உனக்கு தெரிகிறதா...?

அழுது உனக்கு
அஞ்சலி செலுத்துவதைவிட்டுவிட்டு
ஆதங்கபட்டுகொண்டு
இருக்கிறோமென்றால்
அதற்கு நீ தேர்ந்தெடுத்த
இந்த தவறான தற்கொலை
முடிவுதான் காரணம்...

அன்று உன்னை
எங்களால் மன்னிக்கமுடியவில்லை
ஏனென்றால்...
நமது நட்பு வட்டத்தில் நீ
செய்தது தவறல்ல...
நம்பிக்கை துரோகம் - இது
உனக்கே புரியும்...
எதிரிகளை நம்பினாலும் நம்புவோம்
ஆனால்
துரோகிகளை நம்பமாட்டோம்
என்ற
நமது நண்பர்களின்
நல்ல சிந்தனைக்கு முரன்பாக
நடந்துகொண்டது
உனது தவறுதானே....?

எங்களது ஆழ்ந்த
கண்ணீர் அஞ்சலியை கடிதமாக்கி
உணனக்கு அஞ்சல்
செய்ய நினைத்தோம் - ஆனால்
சுடுகாட்டு முகவரிக்கு அனுப்புவதா?
சொர்க்கலோக முகவரிக்கு அனுப்புவதா? என்று
உனது முகவரியைகூட
சொல்லாமல் போய்விட்டாயே நண்பனே...

உனது ஆத்மா
சாந்தியடைய - எங்கள்
ஆத்மாக்களின்
ஆழ்ந்த இரங்கலை
சமர்ப்பணம் செய்கிறோம்...!!!

இப்படிக்கு
கண்ணீருடன்...
மீதி இருக்கும்
உனது ஐந்து நண்பர்கள்...

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (29-Mar-12, 2:45 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 273

மேலே