எதுவும் வேண்டாம்.அவன்(ள்) மட்டும் போதும்.
அவன் அவளுக்காக காத்திருந்தான். காத்திருத்தல் அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. காத்திருக்கும் முறை தான் மாறியிருக்கிறது. முன்பு மனதளவில் அவள் பார்வைக்காகவும், வார்த்தைக்காகவும், அழைப்புக்காகவும். இன்று அவளுக்காக, அவள் வருகைக்காக, மனதளவிலும், உடலளவிலும். காத்திருத்தலின் சுகம் காதலிக்காதவர்களுக்குத் தெரியாது.
ஆனால் இன்று அவள் வரச் சொன்னது காதலிக்க அல்ல. 'காதல் இல்லை, எந்த கத்திரிக்காயும் இல்லை' என்று சொல்ல. மன்னிக்கவும். அவள் அண்ணன் சொல்லிக் கொடுத்ததை ஒப்பிக்க. அண்ணன்கள் காதலின் எதிரிகள் பட்டியலில் எப்படியேனும் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடித்து விடுவார்கள்.
அண்ணன் என்ற சொல்லைக் கேட்டாலே அவனுக்கு நெற்றிக்கண்ணைத் திறந்து உலகில் உள்ள எல்லா அண்ணன்களையும் வரிசையில் நிறுத்தி எரித்து விட வேண்டும் என்று தோன்றியது. குறிப்பாக அவளின் அண்ணனைப் பார்த்தால், கத்தி ஒன்றை எடுத்து அவன் நெஞ்சிலும், வயிற்றிலும் தாறுமாறாக குத்தி கிழித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ஹிஸ்டரியும், தமிழும் விரும்பி படிப்பவனுக்கு அவ்வளவு தைரியம் வராது.
அவள் தான் விசித்திரமானவள் என்றால் அவள் வரச் சொன்ன இடமும் விசித்திரமானது. அவர்கள் படித்த பள்ளி தான் அது.
அவன் தான் படித்த வகுப்பறையில் கடைசி பெஞ்சில உட்கார்ந்திருந்தான். அவள் அந்த வகுப்பறை வழியாக கடந்து போவதை சன்னல் வழியாக பார்த்தான். அவன் நண்பர்கள், "டேய்.... சரவணா எங்கடா போற? சரவணா..... உன்னத்தாண்டா.... காது கேட்கலியா?" என்று கேலி செய்தது காதுக்குள் ஒலித்தது. அவனையும் அவளையும் சேர்த்து வைத்து கிளாஸ் முழுவதும் கிண்டல் செய்தது எல்லாம் அவன் மண்டைக்குள் ஓடியது. அவன் தனக்குள்ளேயே சிரித்தான்.
கொலுசு சத்தம்... அவன் நினைவுகள் கலைந்தன. அவள் வருகிறாள்... அவள் தான்... அவள் வருவதை இந்த கொலுசு சத்தத்தை விட எது சிறப்பாக கூற முடியும்? வெள்ளைச் சுடிதார்... சிவந்த கன்னம்... அதே பெண்மையின் வாசம்...
"ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தேவதைகளுக்கு விடுமுறை கிடையாதா?", அவனுக்குள்ளேயே ஒரு கவிதை சொல்லிக் கொண்டான்.
"எங்க ஒன் அண்ணன்?" கொஞ்சம் அதட்டலாகவும், திமிராகவும் கேட்டான்.
அவள் எதுவும் பேசவில்லை.
"வெளியில நிப்பானே"
"ப்ளீஸ்... சரவணா...."-அவள்
"இன்னும் எதுக்கும்மா நிக்கிற? சீக்கிரம் சொல்லு... நீ யாருன்னே எனக்குத் தெரியாதுடா... இனிமே ஃபோன் பண்ணி தொந்தரவு பண்ணாதடா-னு சொல்லு... அத சொல்லதான வந்த... அதான உன் அண்ணன் சொல்லிக் கொடுத்தான்?.
"ஏன் சரவணா இப்படி சைக்கோ மாதிரி behave பண்ற?"
"சைக்கோ...."- அவன் அவளையே முறைத்துப் பார்த்தான். "சைக்கோனு தெரியுதுல. அப்புறம் ஏண்டி phone பண்ணி பேசின? எதுக்குடி என் Birthday அன்னைக்கு உன் friend கிட்ட சொல்லி wish பண்ண சொன்ன? சொல்லுடி". அவன் கண்களில் நீர் தேங்கியது.
"இன்னும் உன்னால என்ன புரிஞ்சுக்க முடியலல... சரவணா... நான் வந்திருக்கவே கூடாது... நான் கிளம்பறேன்", என்று சொல்லி திரும்பினாள்.
"நீ போ ஜனனி... அது தான் சரியா இருக்கும்... நீ சொல்ற மாதிரி நான் ஒரு சைக்கோ... நான் ஏதாவது சொல்லி உன்ன கஷ்டப்படுத்திகிட்டே தான் இருப்பேன்... நீ ஆசப்படுறமாதிரி நான் Jeans, T-Shirt எல்லாம் போட மாட்டேன்... இந்த மாதிரி ரொம்ப formal தான்... ஒழுங்கா shave பண்ண மாட்டேன்... ஒழுங்கா தல சீவ மாட்டேன்.... suppose நமக்கு கல்யாணம் ஆகி, ஒரு பொண்ணு பொறந்தா கூட தமிழ்லதான் பேர் வைக்கணும்-னு நினைப்பேன்.... குழந்தைகள தூங்க வைக்க Fairy Tales- சொல்ல சொன்னா நான் லெனின் History தான் சொல்லுவேன்... நீ போறது தான சரி... நீ போ ஜனனி... நான் இனினே உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்."- கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டான்.
அவள் அண்ணன் உள்ளே நுழைந்தான். இருவரும் அவனைப் பார்த்தனர். அவன் சரவணனை முறைத்தான்... "என்ன ஜனனி... ஏதாவது பிரச்சன பண்றானா? சீக்கிரம் சொல்லிட்டு வா, போகலாம்..."
அவள் தன் கண்களை அவன் பக்கம் திருப்பினாள். அவனும் அவள் பக்கம் திரும்பினாள்.
"சரவணா... you know what... Lenin history இல்ல... Hitler historyயா இருந்தாலும் எனக்கு Okay தான்... ஐ லவ் யூ சரவணா... ஐ லவ் யூ". கண்களில் வழிந்த நீரை ஆனந்தமாக துடைத்துக் கொண்டாள்.