1.முன்னுரைக்கு முன்னாக ஒரு முடிவுரை (கைவிடப்பட்ட கல்லறை)

உடம்பு லேசாக இருக்கிறது. வானத்தில் பறக்கிறதைப் போல் ஒரு உணர்ச்சி. உணர்ச்சி என்ன? பறந்து கொண்டு தான் இருக்கிறேன். ஒருவேளை தண்ணியடித்திருக்கிறேனோ? காலையிலேவா? வாய்ப்பில்லை.

கால்களைத் தரையின் மீது வைக்க முயற்சி செய்கிறேன். முடியவில்லை. வழியில் ஒரு கல்லறைத் தோட்டம் தெரிகிறது. எக்கச்சக்கமான "கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்" வகையறாக்கள்.

ஒரு கல்லறைக்கு முன்னால் ஒரு சின்னப்பெண் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். ஏழெட்டு வயசிருக்கும். பார்க்க என் மகள் மாதிரி இருந்தாள். இல்லை, அவள் என் மகளே தான். கோபம் வந்தது. இவளை டொனேஷன் குடுத்து ஸ்கூலுக்கு அனுப்பினால், அங்கே போகாமல் எவன் கல்லறை முன்போ உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாள். வேகமாக நடந்து, இல்லை மிதந்து அவள் அருகில் போய் நின்றேன். அவள் என்னைக் கண்டு கொள்ளவில்லை.

அந்தக் கல்லறையைப் பார்த்தேன். மேலே ஒரு சிலுவை. ஒரு கிரானைட் கல்லில் பெயர் பொறித்திருந்தார்கள். பெயரின் இரண்டு பக்கமும் சிலுவைச் சின்னம். அது என் பெயர்! ஓ! நான் தான் செத்துப் போய் விட்டேனா? உயிரோடிருக்கும் போது செலவு செய்யாதவள் இப்போது தேவைக்கு அதிகமாகவே செய்திருக்கிறாள். நீங்கள் செத்துப் போவது வரைக்கும் சிலர் உங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். செத்துப் போய்விட்டால் "சனியன் செத்தொழிச்சுருச்சு, சந்தோஷம்" என்று நினைத்துக் கொள்வார்கள். அவளும் அந்த வகை தான். இப்போது அவள் எங்கிருப்பாள்?

குழந்தை இங்கிருந்து அழுது கொண்டிருக்கிறது. அவள்?

வேலைக்குத் தான் போயிருப்பாள். ஒரு காலேஜில் லெக்சரராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். காலையில் காலேஜ் பஸ் வந்து விடும். அவள் கிளம்பிப் போய்விடுவாள். அப்புறம் சமையல் செய்து, குழந்தையை நானும் ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டும். நானொன்றும் வேலை வெட்டியில்லாதவன் கிடையாது. நானும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன வேலை என்று மட்டும் கேட்காதீர்கள்.

அவள் காலேஜுக்குப் போய் பார்க்க வேண்டும். உயிரோடிருக்கும் போது அவளிடம் கேட்டிருக்கிறேன். "நீயெல்லாம் அந்தப் பக்கம் எட்டிப் பாக்கக் கூடாது" என்றாள் அவள். இப்போது அவளால் தடுக்க முடியாது. விஸ்தாரமான கேட்டுடன் ஒரு சிறைக்கூடம் போலவே காட்சியளித்த அந்தக் கல்லூரிக்குள் மிதந்தேன்.

ஒரு வகுப்பறையின் வாசலில் அவள் நின்று கொண்டிருந்தாள். அருகில் நின்றிருந்த ஒருத்தனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். எனக்குக் கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன். நான் பெண்களிடம் சிரித்துப் பேசியதில்லையா? ஒருவேளை அவள் செத்துப் போயிருந்தாலும், நானும் சந்தோஷத்துடன் எவளுடனாவது சிரித்துக் கொண்டிருந்திருப்பேன். அப்படி என்ன தான் பேசுகிறார்களோ? அருகில் போனேன். இரண்டு பேரும் எப்போது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். என் அரூபமான தேகம் மெதுவாக காற்றில் கலந்து கொண்டிருந்தது. இப்போது நான் என்று எதுவும் இல்லை. 'நான்' காற்றில் கலந்து 'அது'வாகி விட்டது.

எழுதியவர் : (2-Apr-12, 8:29 am)
பார்வை : 524

மேலே