payanapadugal
பிரிய நினைத்த பொழுதுகளில்
பிரிய முடிவதில்லை
நினைக்கும் பொழுதுகளில்
பிரிந்து இருக்கிறேன்
'போய்தான் ஆகணுமா "
புறப்படுதலின் முன்னிரவில்
முன்னுறைத்து ,விடிகையில்
முடிவுரைப்பாய் .
பயணம் தொடங்கும்போது
மெதுவாக விசும்புவாய்
பேருந்திலோ ,ரயிலிலோ
அமர்ந்தபின்
கண்களில் கரைகட்டும்
கரைசல் நீர் .
"டாட்டா" காட்டும்
உள்ளங்கையில்
ஒட்டியிருக்கும் .
பிரிவுக் கண்ணீர் ;
திரும்பும் வரைக்கும் கசகசக்கும்
உன்
ஞாபகத்தில் !
பாதுகாப்பு கடந்து
விமானமேறி பறந்தபின்னும்
பறக்கும் அனைத்திற்கும்
கையசைக்கும் உன்
கைகள்
எனக்குத் தெரியும்.
நினைத்த மாத்திரத்தில்
உன்னோடு ஒட்டிக்கொள்ளும்
மனதுமட்டும் இல்லையெனில்
என்றோ! நான்
மரித்திருப்பேன் .
பயணப்பட்ட
ரயிலின் திசையை
திரும்பித் திரும்பி பார்த்து செல்லும்
உனது கண்களுக்க்காகவேனும்
அடுத்த பிரிவைப் பற்றி
அவசரமாக தீர்மானிக்கத் தோன்றும்
அடுத்த பயணத்தின் போதும் ;
நீயும்,
உன் கண்களின் தவிப்பும்;
நானும்,
எனது தீர்மானங்களும் மட்டும் ;
மாறுவதாயில்லை .