தாய்க்கு ஒரு தாலாட்டு
ஆராரிரோ.... ஆராரிரோ....
அம்மா
இது
நீ தூங்கிய பிறகு
நான் பாடும் தாலாட்டு!
இங்கு
உன் கல்லறைதான்
தூளியானது.
என் கவிதைதான்
பாடல் ஆனது.
ஆராரிரோ.... ஆராரிரோ....
எதனைப் பாடல்கள்
பாடி என்னை
தூங்கவைத்தாய்?.
ஆராரிரோ.... ஆராரிரோ....
அன்று நீ பாடிய
அதே வரிகள்தான்
தாயே!
கொஞ்சம் விழித்திடு!
நான் சரியாக பாடுகிறேனா?
என்று சொல்லிவிட்டு
மீண்டும் தூங்கிவிடு.
நன்றி மறவாதே
என்றது நீதானே!.