[195 ] சக்தியால் என்னை நிரப்பிட வேண்டும் ..!
இருவினை களையும் திருவடிக் கீழொரு
.... திருகிய ஆணியில் அறைந்தவா!
பெருகிடும் விழிநீர் அருவியி னால்,எமைத்
.... திருமுழுக் காட்டிட விழைந்தவா!
அருமையின் தகப்பன் திருமுனர் வேண்டியே
.... சிறுபிழை தாங்கிடக் கரைந்தவா!
உரிமையில் எமக்கும் பரமனின் வீட்டில்
.... பெருமையின் ஓரிடம் திறந்தவா!
எனக்கென வாழும் வரை,நான் என்னுள்
.... இயேசுவைக் கண்டிடக் கூடுமா?
தனக்கென வாழும் நிலையில் இந்தத்
.... தரணியில் நிதமும் சாகவா?
மனக்குகை யுள்ளே பதுங்கியே வாழும்
.... வாழ்க்கையும் வாழ்க்கை ஆகுமா?
சனக்குறை நீக்க மரித்தவா! எந்தன்
.... சபத்தினைக் கேட்டிடல் ஆகுமா?
பக்தியால் உம்மைப் பாடிட வேண்டும்
.... பாவிமேல் இரங்கி வாரும்!
புத்தியால் உம்மை அறிந்திட வேண்டும்
.... புரிந்துநீர் இறங்கி வாரும்!
சுத்தியால் என்னைக் கழுவிட வேண்டும்
.... சுயத்தினைக் களைய வாரும்!
சக்தியால் என்னை நிரப்பிட வேண்டும்
.... சம்மதித்து உதவ வாரும்!
-௦-

