கண்தானம் வழங்க உறுதிமொழி மட்டும் போதாது
17.04.2012 தேதியிட்ட தினமலர் செய்தித்தாளில் ஆந்திரா விஜயநகரம் மாவட்டம், சிபுடுபள்ளி அடுத்த மெட்டபள்ளி கிராமத்தில் 'ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் கண்தானம்' என்ற தலைப்பில் செய்தி வாசித்தேன்.
தலைப்பிலேயே தவறு இருக்கிறது. தாங்கள் இறந்த பின் கண்தானம் வழங்க முன் வருவதாக உறுதிப் பத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளனர் என்பதே உண்மையான செய்தியாக இருக்க வேண்டும்.
மேலும், இதுவரை இப்பகுதியில் 42 கிராமங்களைச் சேர்ந்த 55 ஆயிரம் பேர் கண்தானம் வழங்க உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து இட்டிருப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்திருக்கிறார்.
இவர்களில் எத்தனை பேரிடம் இருந்து இறந்த பின் கண் தானம் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள். இன்றிலிருந்து ஒரு மாதத்தில், மூன்று மாதத்தில், ஆறு மாதத்தில், ஒரு வருடத்தில் எத்தனை பேர் இறந்தபின் கண்கள் தானம் அளிக்கிறார்கள் என்ற கணக்குத் தேவை. இல்லையென்றால் இவ்வளவும் வெறும் விளம்பரமே. இங்கு தியாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நான் கண் மருத்துவத் துறையில் மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி போன்ற வெவ்வேறு ஊர்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பணியிலிருந்திருக்கிறேன். மதுரை அரசு கண் மருத்துவமனையில் சுமார் 500 பேர் கண்தானம் பதிவு செய்திருப்பதாகக் கொள்வோம். இதில் எத்தனை பேர் கண்கள் உண்மையில் இறந்தபின் தானம் செய்யப்பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.
கண்தானம் வழங்க உறுதிமொழி மட்டும் போதாது. எனவே கண்தானம் தருவதாகப் பதிவு செய்வதை விட, ஒவ்வொருவரும் தங்கள் முயற்சியால் வருடம் ஒருமுறையாவது இரண்டு கண்கள் தானமாகப் பெற்றுத் தந்து புண்ணியம் பெறுங்கள்.