தோழர் ரௌத்திரன் எழுதிய கட்டுரையின் தொடர்ச்சியாக (ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி)

தோழர் ரௌத்திரன் எழுதிய "தோழர்.பருதி.முத்துராசன்(எனது பார்வையில்)" -என்ற படைப்பை படித்தபோது என் வாழ்வில் நான் சந்தித்த அனுபவத்தை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன்.

நானும், வெளி மாநிலத்தில் வேலை செய்யும் ஒரு தமிழன் தான்.

ரௌத்திரனின் விளக்கம் ஒவ்வொன்றும் என்னை பின்னோக்கிப்பார்க்கச் செய்தது. தற்போது அதிகமாக கூறிக்கொள்ளாவிட்டாலும், குறிப்பாக, நான் வெளி மாநிலத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த சமயம், தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட "ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி" என்ற அறிக்கையை கேட்டு, வெளி மாநிலத்தவர் என்னிடம் கேட்ட கேள்வி யாதெனில்,
உங்க மாநிலத்தில அரிசி வாங்கக்கூட வழியில்லாம தமிழ்நாட்டு மக்கள் கையேந்துகிறார்களா? இக்கேள்வியை கேட்ட சில நொடிகள், என்னை பேசமுடியாது செய்தது. பிறகு மனதில், நாமும், மற்றவரைப்பற்றியோ (அ) மற்ற மாநிலத்தைப்பற்றியோ குறை கூறாது (ஏனெனில், நம் வீட்டில் குப்பை இருந்தால், நாம் அதை சுத்தம் செய்ய வேண்டுமேயின்றி; பிறர் வீட்டிலும் குப்பை இருப்பதைகண்டு விவாதித்தோ (அ) கேளிக்கையாக சிரித்துக்கொண்டோ இருப்பதில் பயனில்லை); சுருக்கமாக என் பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

உண்மையில் சொல்லப்போனால், அரசாங்கத்தின் வேலை, தேவையான வேலைவாய்ப்பை மக்களுக்காக உருவாக்குவதும் மற்றும் இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பேணிக்காப்பதும்; ஆனால், இவ்வாறு இல்லாமல், அனைத்தும் தலைகீழாகவே இன்று உள்ளன.

தேவையான வேலைவாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தால், அவர்களது உழைப்பில், வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை காசு கொடுத்து வாங்க அவர்கள் தயாராக இருக்கின்றனர். இதை விட்டுவிட்டு, ஒருபுறம் அவர்களுக்கான வேலைகளை பறித்துக்கொண்டும், மாற்று வேலைகளை அமைத்துக்கொடுக்காதும், வேலை செய்யவிடாதும், காலம் வீணாக்கப்படுவதோடு மட்டுமின்றி மறுபுறம் இலவசம் என்ற பெயரில் சிலரையும் சோம்பேறிகளாக்குகின்றனர். இவ்வாறாக பலரின் வாழ்க்கையையும் சூறையாடுகின்றனர்.

அரசாங்கம் மக்களை அடிமைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகின்றன;
மக்களில், ஒரு பகுதியினர் அறியாமையாலும், மறு பகுதியினர் அதிகாரத்தால் அடக்கப்பட்டும் வாழ்கின்றனர்.

நானறிந்த வரையில்,
தேவை இரண்டு,
ஒன்று விழிப்புணர்வு;
மற்றொன்று குறிப்பிட்ட காலத்தில் மட்டுமல்லாது தொடர்ச்சியான ஒன்றுபட்ட உரிமைக் குரல் (ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு)

குறிப்பு: நான் மேலைநாடுகளுக்கு சென்றிருந்தபோது, சிலவற்றை ஆர்வத்தோடு அறிந்ததுண்டு. அங்கிருக்கும் தாய்மொழிப்பற்று, உள்நாட்டில் இருக்கும்வரை தாய்மொழியில் மட்டுமே பேசுவது, எழுதுவது.
மேலும், சுகாதாரம் மற்றும் கல்வி மிகக்குறைந்த செலவில் அங்கு அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்று (உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பாகுபாடு இல்லை இவ்விடத்தில்).
மேலும், அங்கு அரசாங்கம், வருமான வரியை அதிகப்படுத்திவைத்தாலும்; அதற்க்கான வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது. அங்கு அனைவருக்குமான ஊதியம் ஏறத்தாழ சரிசமமே (வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை அனைவராலும் வாங்கக்கூடிய ஒன்றே).

ஆகையால், ஒருவர் மற்றவரை மதித்து வாழ்கிறாரே இன்றி மிதித்து வாழவில்லை. அனைத்துக்கும் காரணம், மக்களுக்கிடையில், நாட்டின் மற்றும் உலகத்தின் மீதான விழிப்புணர்வு மிக அதிகம் மற்றும்
அரசாங்கம் மக்களுக்கான வேலைவாய்ப்பை கண்காணித்தும்,
மக்கள் அவரவர் வேலையில் கண்ணும் கருத்துமாயும்
செயல்படுகின்றனர்.

எழுதியவர் : A பிரேம் குமார் (24-Apr-12, 12:46 am)
பார்வை : 308

மேலே