கலவரமா இல்லைக் கொலை வரமா?

வெட்டி யடித்தது மின்னல், - நிலமதில்
வீசியது சூறைக்காற்று, - மழையுடன்
கெட்டி மேளமிடு சத்த - மென வானம்
கேட்டபெருமிடிசத்தம், - முழங்கிட
வட்டச்சுழல்புயல் காற்றும் - இழுவைக்கு
வந்து விழுந்த மரங்கள், - இவைகளோ
குட்டி கலவரம் செய்யும்- இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

மெட்டி யணிந்தொரு மங்கை,- அவளினைத்
தொட்டிழுத்த மணவாளன்,- தாலிதனைக்
கட்டியவ ளிடும் கூச்சல், - கண்டு கைகள்
கொட்டிச் சிரித்திடும் கூட்டம்- , சிறுசிறு
குட்டிகளாய் பெற்ற பிள்ளை. - குமரிகள்
வட்டமிடும் பலகண்கள் - இவைகளும்,
குட்டிக் கலவர மன்றோ - இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

பெட்டி பெட்டியென ஆயிர - மாய் பல
வெட்டி விழுந்த பிணங்கள், - இவைதனில்
கொட்டிசிவந்த குருதி - கண்கள் நீரை
விட்டிருக்கும் சிறுபிள்ளை,- உடலினைக்
கட்டி யழும் பலபெண்கள் - எங்கும்படை
சுட்டுச் செல்லும்பெருஞ் சத்தம்,- இவையொரு
குட்டிக்கலவரமென்றோ- இயற்கையின்
கோலமென்று சொல்லலாமோ?

ஏறிவிழுந்த மனிதன் - துடித்திட
இன்னும் மிதிக்கின்ற மாடு - எழுந்திட
தூறிக் கொட்டும் பெருவானம் - குளிர்ந்திட
துன்பமிடும் புயல்காற்று =- நடந்திட
மாறி இடித்திடும் கல்லு - விரல்நுனி
மங்குமிருள் மறைபாதை - நடுவினில்
சீறிநிற்கு மொருபாம்பு - இவையெல்லாம்
சேர்ந்து வரலாமோ நாதா

பள்ளி செல்லும் சிறுபிள்ளை -இறந்திட
பக்கத்திலே விழும்குண்டு, -அதிர்ந்திட
துள்ளி விழும்சடலங்கள்,- துடித்திடத்
துண்டு செய்யும் படைஆட்கள்- , தீயெடுத்து
கொள்ளியிட எரிஇல்லம், - இடிந்திடக்
கூக்குரலிட்ட கணவன், - சிரசினை
அள்ளிஎடுத்திடும் கோரம் - தமிழர்க்கு
ஆனதும் ஏன் கணநாதா

புட்டவிக்க தின்று போட்ட - அடிவாங்கி
பொய்யுரைத்த கவிசொல்லி - மதிகெட்டு
சுட்டே யெரித்த நக் கீரன் - பழி கொண்டே
செத்தஉடல் எரிசாம்பல் - பூசியொரு
நட்ட நடுநிசி தட்டி - உடுக்கையை
நாட்டியமாடும் உனை நம்பி - நாங்களும்
கெட்டதுபோதுமினி கொல் லும் - நீசரை
கேட்க வாடா கணநாதா!

எழுதியவர் : கிரிகாசன் (9-May-12, 5:12 am)
பார்வை : 199

மேலே