நானுமோர் அகதியாய்.......
கோடைக்கும் குளிருக்கும் ஏற்றதாய்
வாழ்வை ரசிக்கும் உலகில்
குளிர் காலத்துச் சலனமேதுமில்லை
என்னிடம்...!
குளிருக்குப் பயந்து
தூரதேசம் போன சூரியனின்
துயில் கண்டே தூக்கணாங்குருவிக்கும்
தாகமெடுக்கிறது!
ஞாயிறோ, திங்களோ-எல்லாமே
ஒன்றாகிப் போனதால்
எதையும் உள்ளிருத்திப் பார்க்கவில்லை
நானும்..!
பார்க்குமிடமெல்லாம்
பகலவன் ஒளி பரவ - என்
துயில் மட்டும் எப்போதும்
கலைந்து எழுவதில்லை!
பனிபோர்த்தி நின்ற மரங்களின்
தேகத்தில் மீண்டும்
பூக்களின் வாசம் பிறக்கும்!
மரங்களும், செடிகளும்
நிலமும், காற்றும் கூட
கோடையில் வளர்ந்து
குளிரினில் தழுவும்!
கோடைக்கும், குளிருக்கும்
அர்த்தம் ஏதுமில்லை
என்னிடத்தில்...!
கோடையும் குளிருமாய்
வாழ்வு கிழிபட
நெஞ்சுக்கூட்டினில்
அடைகாத்த கனவுமுட்டைகள்
கூழாகி உடையும்
கொஞ்சம் கொஞ்சமாக....
கோடையில் துயருற்று
குளிரில் ஆதரவற்று
இப்போது நானுமோர்
அகதியாய்.......