[236 ] தேடிடுமோ இத் தேசம்...?
எத்தனைதான் கடல்மூழ்கி எழுந்த போதும்
எரிக்கின்ற குணம்விடுமோ சூரி யன்தான்?
பொத்திவைத்துப் பார்த்தாலும் கடலை விட்டுப்
புறப்பட்டால் முத்தின்ஒளி பொய்த்துப் போமோ?
முத்திவரும் நாள்வரைக்கும் முனிவ ரெல்லாம்
முழுவதுமே மனிதரெனில் மறுக்கப் போமோ?
கத்திஎழும் சேவலுக்குக் கதிர்எ ழும்பும்!
கவிஎனது பாடலுக்கோ மண்வி ழிக்கும்?
பித்தனெனப் பாடுகிறேன்! பிதற்று கின்றேன்!
பெருநோய்க்கு வைத்தியமும் பேசு கின்றேன்!
சுத்தனென எனையாக்கிச் சுகப்ப டும்,முன்
சூழ்நிலையை மாற்றிவிடச் சுருதி சேர்ப்பேன்!
மத்தெனவே கடைகின்றேன் மண்ணை! அந்த
மயக்கினிலே தேய்கின்றேன்! மரணம் ஒன்றே
புத்திவரச் செய்திடுமோ? புரண்டோ டிப்போம்
பொய்நதியோ? அதிற்பொங்கும் நுரையோ நானும்?
..............................[வேறு].....................................
ஈக்களை விரட்டித் தேனினைத் திருடும்
ஈனர்கள் வாழும் தேசம்!
பூக்களைச் சிதைத்துப் புலன்சுகம் காணும்
புலையர்கள் உலவும் பூமி!
மாக்களை வளர்த்து மண்ணினைப் பிடுங்கும்
மதிநலம் விளங்கும் தேசம்!
தீக்களை வளர்த்தோ திசைஎலாம் சுத்தம்
தேடிடும் இனிஇத் தேசம்?
-௦-

