பள்ளி விடுமுறை

ஓலை கூரையில் வழி தேடி அவளின் விழி மீது வழிந்தோடினாய் மழை நீரே! அன்னையின் மடியில் படுத்து, உன் ஒரு துளியில் விழித்தாள் !!!

விடியும் முன்னரே விரைந்து விட்டார்கள் அவளின் அம்மாவும் அப்பாவும் விடியலை தேடி, கல்லுடைக்க கூலி அது அவள் கல்விக்கு உதவுமென்று !!!

அவளின் சினஞ்சிறு கைகளை குவித்து, மழை நீரை அதில் சிறை பிடித்தால், முகத்தோடு தழுவவிட்டு, புத்துணர்வு அடைந்தாள் !!!

கலைந்திருந்த சிகை அதை, கோதி முடிந்து சடை பின்னினால், கண்ணுக்கு மையும் இட்டாள், உடைந்திருந்த கண்ணாடி அதில் அவள் முகம் தேடி பார்த்தாள் !!!

இருக்கும் ஒரே பள்ளி சீருடடையை இரவு துவைத்து காயவைதாள் அவள் அம்மா, மழையில் மொத்தம் நனைந்து இருந்தது. வழியின்றி அணிந்து கொண்டாள் !!!

அவளின் 3 ஆம் வகுப்பு பாட புத்தகங்களை எடுத்து பையில் வைத்தாள், சிலேட்டு பலகையில் எழுதிய வீட்டு பாடத்தையும் மறவாம்மல் எடுத்து வைத்தாள் !!!

புத்தக பையின் சுமையை முதுகில் சுமந்தாள், வீட்டின் வறுமையை மனதில் சுமந்தாள், பசியின் வலி அதை வயிற்றில் சுமந்தாள் !!!

அவள் கால்களுக்கு சற்றே பெரியதான ஒரு காலனியை அணிந்தாள், கிழிந்திருந்த ஒரு பிளாஸ்டிக் உறையை தன் மீதும், புத்தக பையின் மீதும் போர்த்தி கொண்டாள் !!!

சில்லென்ற மழை தூறல், மிதமான மலை காற்று, ஈரமான உடை, வழியெங்கும் வண்ண பூக்கள், நத்தைகளின் ஊர்வலம், தவளைகளின் கச்சேரி, தனியாக நடந்து சென்றால் அவள் !!!

30 நிமிடங்கள் நடக்க வேண்டும் பள்ளி சென்றடைய, 15 நிமிடங்கள் சரிவான மலை பாதையில், 10 நிமிடங்கள் பரந்த புள் வெளியில், 5 நிமிடங்கள் மண் சாலையில் !!!!

மலை வழி பாறைகள் மழையில் குளிதிருந்தது, அவளின் அழகான பாதங்களை தொடவேண்டுமென்று. சரிவில் சில சறுக்கல்கள், வழியில் சில வழுக்கல்கள் !!!

சரிவில் அறுந்துவிட்ட காலனியை கையில் பிடித்து கொண்டாள், அவளின் பிஞ்சு கால்களை ஈர புல்வெளியில் தவழ விட்டாள். அந்த ஒரு உணர்வில் உடல் சிலிர்த்து போனாள் !!!

மண் சாலையில் தேங்கி இருந்த சேற்று நீரில் நடந்து சென்றாள், சில அடி தூரத்தில் பள்ளி முன் நண்பர்களின் கூட்டம் பார்த்தாள், கூச்சலும் கேட்டாள் !!!

இரவு அடித்த காற்றில் பள்ளியின் கூரை இடிந்து விட்டது, பள்ளி 1 வாரம் விடுமுறை என்று அறிவிப்பு பலகை அறிவித்தது !!!

அவளின் நண்பர்கள் விடுமுறையின் உற்சாகத்தில் குதித்து கூச்சலிட்டு கொண்டு இருந்துனர். இவளின் கண்களிலோ கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது !!!

மை களைந்த கண்கள், சோர்வுற்ற கால்கள், தளர்ந்த பார்வை, இறுகிய வயிறு, பரிதவிப்பான உடல் மொழி, 1 வாரம் சத்துனவுக்கும் விடுமுறை என்று எண்ணி !!!

ஒரு வேலை சோற்றுக்கே உடல் வலிக்க கல் உடைக்கும் அம்மாவையும், அப்பாவையும் இரு வேலை உணவு கோரி உயிர் வளிக்க மனமில்லை அவளுக்கு !!!

இறங்கி வந்த மலையை திரும்பி பார்த்தாள், திரும்பி செல்ல, மலைப்பாய் இருந்தது அவளுக்கு, கண்கள் இருண்டு விட்டது !!!

அவள் கையில் வைத்திருந்த சிலட்டு பலகை கீழே விழுந்தது, அதில் எழுதி இருந்த வீட்டு பாடம் "ஆச்சம் தவிர் , ஆண்மை தவறேல் , இளைத்தல் இகழ்ச்சி , ஈகை திறன் , உடலினை உறுதிசெய் , ஊண்மிக விரும்பு ...." மழை நீரில் அழிந்துவிட்டது !!!

எழுதியவர் : (24-May-12, 4:30 am)
Tanglish : palli vidumurai
பார்வை : 510

மேலே