இன்று நமக்கெல்லாம் தேவை ஒரு விவசாய புரட்சி !
மனிதனின் அடிப்படை தேவை
உணவு ,
உடை ,
இருப்பிடம் !
உணவுக்கு முதலிடம் கொடுத்தோம் ,
விளைவிக்க உழைப்பவனுக்கு ?
ஏர்பிடித்த கையில்
எத்தனை சுமைகள் ,
விளைவித்து கொடுத்தவனுக்கு ,
கஞ்சியும் கூழும் காலை மாலை உணவு ,
கோமணமும் வேட்டியுமே
பிரதான உடை ,
ஒழுகும் கூரையே அவனின் இறுதிவரையான
இருப்பிடம் ,
கடன்களும் வறுமையும் அவனின்
அடையாளங்கள் !
உழைத்து சோர்ந்தவனுக்கு,
உணவில்லையாம் உலகில் ,
விஷம்தானா விவசாயிகளின் உணவு ,
பயிர்வித்தவனுக்கு பசிதான் நிலையோ ,
வாரி கொடுத்தவனுக்கு இறுதியில்
வறுமைதான் பரிசோ ,
நூறு பயிர் தலைமுறைகளை பரிவோடு
பார்த்தவனுக்கு
ஒரு தலைமுறைகூட உயர்வில்லையோ !
தனி மனிதனுக்கு ஏற்பட்ட
அவமானமும் ,
அதை தொடர்ந்த விடுதலை வேட்கையும்
உலகம் போற்றும் மகாத்மாவை
நமக்கு காட்டியது ,
அகிம்சையின் வலிமையை உணர்த்தியது ,
புரட்சி பிறந்தது ,
சுதந்திரம் கிடைத்தது !
அடக்கு முறை சமுதாயத்தில் ,
அடிமைகளின் நிலை போக்க ,
தாழத்தப்பட்ட சமுதாயத்திற்கு ,
தலைவிதியை மாற்றியவர்
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் !
போராடுவோம் இன்றுமுதல்
தொடங்குவோம் ஒரு விவசாய புரட்சி ,
உழைத்து கொடுத்தவர்களை சுரண்டும்
சொகுசு முதலாளிகளின் மண்டையை உடைப்போம் ,
விளைவித்தவனே விற்பனை செய்யும்
அதிகாரம் படைப்போம் ,
காலமெல்லாம் உழைத்தே வளைந்துபோன
விவசாயியின் முதுகெலும்பிற்கு
ஊக்கம் கொடுத்து புத்துயிர் கொடுப்போம் !
பசைபசெலேன பசுமை வீசிய
இடங்கள் எல்லாம் இன்று
பாலைவனம் ஆகிவிட்டது ,
சுமங்கலியை விதவையாய் பார்பதுபோல்
வரப்புகளால் வளைக்கப்பட்ட இடங்கள்
துண்டுகளாக்கப்பட்டு கானிக்கர்க்களின்
ஆக்ரமிப்பு ,
விளைவித்த நிலங்களை
விலை நிலங்களாக ஆக்கிவிட்டது ,
இன்றைய விவசாய சூழ்நிலையும் ,
பண ஆசையும் !
என் பையன் டாக்டர் ,
என் பையன் என்ஜீனியர் ,
என் பையன் அதிகாரி
என பெருமை பட்டுக்கொள்ளும் பெற்றோர்கள் ,
என் பையன் விவசாயி என்பதில்
எத்தனை வருத்தம் ,
என் கஷ்டம் என் வாரிசுகளுக்கு தேவையில்லை ,
என்பது எத்தனை விவசாயிகளின்
சோகமான முடிவு !
பூமி வெப்பமாகுதாம்,
ஏன் ஆகாது ,
பசுமை மரங்களை அழித்தால் ,
ஆறுகளின் தடயங்கள் இல்லாமல்
மணல் அள்ளினால் என்னவாகும்
எதிர்காலம் ,
பசுமை பூமியெல்லாம்
பாலைவனம் ஆகிவிடுமே ,
ஏன் நாளை காற்றுகூட
இல்லாமல் போகலாம் !
பயிர்வித்தது 100
கையில் கிடைத்தது 80
என்னை செய்வான் விவசாயி ,
ஏறிப்போன விவசாய அபிவிருத்தி பொருட்கள் ,
பற்றாக்குறையான தொழிலாளர்கள் ,
அதிகமாய் போன விவசாயக்கூலி ,
இந்த சுமைகளால் நிலத்தில்
உழைக்க குனிந்தவன் இன்னும்
நிமிர்ந்த பாடில்லை !
மிருகங்களை மிஞ்சும் உழைப்பு ,
பரிசு என்னவோ தற்கொலைதான் ,
உட்கார்ந்து சாப்பிடுபவர்கள்
ஓடி ஓடி உழைப்பவனை நினைத்த நாட்கள்
எத்தனை !
இயற்கையாய் விளைவித்த நிலங்கள்
இன்று குத்துயிரும் கொலைஉயிருமாய் ,
ஆம் ,
மருந்துகளால் மண்ணை சாகடித்துவிட்டோம் ,
சாகுபடியும் குறைந்து போச்சு ,
சேடையிலும் மருந்து ,
நடவிலும் மருந்து ,
கலையிலும் மருந்து ,
விளைவிக்கையிலும் மருந்து ,
விளைவித்தபின் பதப்படுத்த மருந்து ,
உணவோடு விஷத்தையும் சேர்த்துதானே சாப்பிடுகிறோம் ,
இதில் வேறு நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக
ஒரு நினைப்பு !
விவசாய கூலியை ஏற்றிவிட்டு ,
மானியம் என்ன செய்ய போகிறது ,
இலவச மின்சாரம் என்ன செய்ய போகிறது ,
கடன் வாங்கியவன் அடைக்கமுடியாமல்
வங்கியின் வாசல்களில் வரிசையில் ,
கடன் தள்ளுபடி கோரி !
பெருகும் மக்கள் தொகை
சுருகும் விளை நிலம் ,
பிறக்கும் அனைவரும் ஏசி அறையிலேயே
வேலை கேட்டால் விவசாயம் யார் பார்ப்பது ,
அறுசுவை உணவுகள் நாளை
ஆறு மாத்திரைகளோடு போனாலும்
ஆச்சரியமில்லை !
பாழ்பட்ட நிலங்களை
இனி பசுமை நிலங்களாக மாற்றுவோம் ,
பயிரோடு சேர்த்து மரங்களையும் பயிர் செய்வோம் ,
மண்ணை குளிர்விப்போம் ,
மழை பெறுவோம் !
இயற்க்கை விவசாயம் வளர்ப்போம்,
விஷம் கலந்த பூமியை
இனி விளைவிக்கும் பூமியாக மாற்றுவோம் ,
விஷம் கலந்த உணவை ஒழிப்போம் ,
மண்ணிற்கு புத்துயிர் கொடுப்போம் .,
மனிதத்தை வாழவைப்போம் !
விஞ்ஞன முறையை விவசாயத்தில் சேர்ப்போம்
துண்டு நிலங்களை ஒன்று சேர்ப்போம் ,
நிலங்களை சீரமைப்போம் .
மருந்துகளை ஓரம் தள்ளி ,
இயற்க்கை முறையில் பயிர்விப்போம் ,
விஞ்ஞன ஆராய்ச்சியோடு
விவசாய ஆராய்ச்சியையும் வளர்ப்போம் ,
இழப்பீடை தவிர்க்க
பயிர் காப்பீடு செய்வோம் ,
விவசாயம் காப்போம் ,
விவசாயிகளை காப்போம் ,
விவசாயிகளே என் இந்தியா
நாளை உங்கள் இன்றுமட்டும் அல்ல
நாளையும் உங்கள் கையில்தான் !